சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவர் அப்துல் ரகுமான். இவர் 1937 நவம்பர் 9-ம் தேதி மதுரை கீழ்ச்சந்தைப் பேட்டையில் பிறந்தார். தமிழில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த இவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழில் பணியாற்றினார். தமிழில் புதுக்கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவரது முதல் கவிதையான ‘பால்வீதி’ 1974-ல் வெளிவந்தது. திராவிட நாடு, திராவிடன், முரசொலி, விகடன் உள்ளிட்ட இதழ்களில் இவரது தொடர்கள், சிறுகதைகள் வெளிவந்தன. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் முதலில் தமிழ் விரைவுரையாளர், பின்னர் பேருரையாளர் அதன்பிறகு பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்த் துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
WRITE A COMMENT