பெண் உரிமைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி அன்னபூர்ணா மஹாராணா. இவர் ஒடிசா மாநிலத்தில் 1917 நவம்பர் 3-ம் தேதி பிறந்தார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 14 வயதில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ‘வானர் சேனா’ என்ற சிறுவயதினருக்கான விடுதலை இயக்கத்தில் முக்கிய உறுப்பினராக செயல்பட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பல போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். ஒடிசாவில் விடுதலைப் போராட்டத் திட்டங்களுக்காக காந்தி பல கடிதங்கள் மூலம் இவருக்கு வழிகாட்டினார். 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். விடுதலைக்குப் பிறகு பதவிகளை நாடாமல், எளிமையாக வாழ்ந்தார். ராய்கடா மாவட்டத்தில் பழங்குடியினருக்காக இலவசப் பள்ளியைத் திறந்தார். பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் போதைக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார்.
மகாத்மா காந்தியின் பல படைப்புகளை ஒடியா மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கிய சேவைகளுக்கான சரள புரஸ்கார் விருது வழங்கி ஒடிசா அரசு கவுரவப்படுத்தியது. உத்கல் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ‘உத்கல் ரத்னா’ எனப் போற்றப்பட்டார்.
WRITE A COMMENT