வங்க இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ஷிர்ஷேந்து முகோபாத்யாய். இவர் வங்கதேசத்தின் மைமேம்சிங் பகுதியில் 1935 நவம்பர் 2-ம் தேதி பிறந்தார். கொல்கத்தா விக்டோரியா கல்லூரியில் இளநிலை பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வங்கமொழியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிதுகாலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறு வயது முதலே இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரது முதல் கதை ‘ஜோல் தொரெங்கோ’ 1959-ல், ‘தேஷ்’ இதழில் வெளிவந்தது.
குழந்தைகளுக்கான இவரது முதல் நாவல் ‘மனோஜ்தர் அத்புத் பாரி’ பெரும் வரவேற்பை பெற்றது. பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கான கதைகளையும் அதிகம் எழுதியுள்ளார். பெரியவர்களுக்கான 50 நாவல்கள், சிறுவர்களுக்கான 25 அறிவியல் புனைக் கதைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துகள் அறிவார்ந்த, உணர்வுபூர்வமான, உயிர்ப்பான படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. துப்பறியும் நாவல், த்ரில்லர் கதை, அறிவியல் புனைக்கதை என அனைத்து விதமான கதைகளையும் எழுதியுள்ளார். மேற்குவங்க அரசின் வித்யாசாகர் விருது, 3 முறை ஆனந்த புரஸ்கார் விருது, 1975-ல் ‘மனபஜமினா’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
WRITE A COMMENT