சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதி முத்துராமலிங்கத் தேவர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908 அக்டோபர் 30-ம் தேதி பிறந்தார். கமுதியில் ஆரம்பக் கல்வி கற்றார். உடல்நலக் குறைவால் பள்ளி படிப்பு பாதியிலேயே நின்றது. சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933-ல்நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஆங்கிலத்திலும் சிறந்த, பேச்சாற்றல் கொண்டவர். இவரது பேச்சைக் கேட்ட காமராஜர், இவரை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.
தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச முனைப்பு 1939-ல் நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதில் முக்கியப் பங்காற்றினார். வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஆன்மிகத்தில் இவர் கொண்டிருந்த ஞானத்தாலும் சொற்பொழிவாற்றும் திறனாலும் ‘தெய்வத் திருமகன்’ எனப் போற்றப்பட்டார். பார்வர்ட் ப்ளாக் கட்சி சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர்.
WRITE A COMMENT