அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் 1883 அக்டோபர் 26-ம் தேதி நெப்போலியன் ஹில் பிறந்தார். 15 வயதில் உள்ளூர் பத்திரிகையில் நிருபரானார். அங்கு பணியாற்றிக்கொண்டே சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஏழ்மையால் சட்டக் கல்வியை பாதியிலேயே நிறுத்தினார்.
1908-ல் பிரபல எஃகு நிறுவன அதிபர் ஆண்ட்ரூ கார்னகியை பேட்டி எடுத்தார். இந்த சம்பவம் இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. ஹில்லிடம் ஒரு சவால் விடுத்தார் கார்னகி. 20 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிக்கான கோட்பாடுகளை ஆவணப்படுத்தி பதிவு செய்ய வேண்டும் என்று நிறைய சாதனையாளர்களை சந்தித்தார். தியோடர் ரூஸ்வெல்ட், தாமஸ் எடிசன், ஜான் டி. ராக்ஃபெல்லர், ஹென்றி ஃபோர்டு, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் உள்ளிட்டவர்களை சந்தித்து அவர்களின் வெற்றிக்கான சூத்திரங்களைத் திரட்டினார்.
சாதனையாளர்களின் வெற்றி சூத்திரங்கள் அடங்கிய ‘தி லா ஆஃப் சக்சஸ்’ புத்தகத்தை 1928-ல் வெளியிட்டார். இவரது இன்னொரு படைப்பான ‘திங்க் அண்ட் குரோ ரிச்’ 1930-ல் வெளியானது. கோடிக்கணக்கான பிரதிகள் விற்றது. இவரது வெற்றித் தத்துவங்கள் உலகம் முழுவதும் பல கோடி பேரை வெற்றியாளர்களாக, செல்வந்தர்களாக மாற்றியுள்ளது. இதனால் ‘வெற்றி சூத்திரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
WRITE A COMMENT