அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 1847-ல் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார். சிறு வயதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆசிரியர் திட்டியதால் பள்ளியைவிட்டு இடைநின்று போனார். சுயமாக நூல்களை வாசித்துக் கற்கத் தொடங்கினார். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் பல ஆய்வு நூல்களை 11 வயதுக்குள் படித்து முடித்தார்.
ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகை வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.
1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.
ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, பாராட்டுக்காகக் காத்திருக்காமல் சோதனை கூடத்தில் அடுத்த ஆராய்ச்சியில் மூழ்கிவிடுவார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார். அத்தகைய எடிசன் 1931 அக்டோபர் 18-ம்தேதி காலமானார்.
WRITE A COMMENT