பிரபல நாடகாசிரியர், கட்டுரையாளர் ஆர்தர் ஆஷர் மில்லர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1915 அக்டோபர் 17-ம் தேதி பிறந்தார். தந்தையின் ஜவுளி உற்பத்தி தொழில் நலிவடைந்ததால், 13-வது வயதில் குடும்பம் ப்ரூக்ளினில் குடியேறியது.
பள்ளிக்கல்வியை முடித்ததும் ரேடியோ பாடகர், லாரி ஓட்டுநர், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளர் என கிடைத்த வேலைகளைச் செய்தார். வருமானத்தை கல்லூரிப் படிப்புக்காக சேமித்து வைத்தார். 1934-ல் மிச்சிகன் கல்லூரியில் சேர்ந்தார். நியூயார்க் சென்று, ஃபெடரல் தியேட்டரில் இணைந்தார். இவர் எழுதிய முதல் நாடகம் ‘த மேன் ஹு ஹேட் ஆல் த லக்’ 1944-ல் அரங்கேறி மோசமாக விமர்சிக்கப்பட்டு, தோல்வியடைந்தது.
மனமுடைந்தவர் புதுஉத்வேகத்துடன் எழுதத் தொடங்கினார். ‘டெத் ஆஃப் ஏ சேல்ஸ்மேன்’ நாடகத்தை 1949-ல் எழுதினார். இது 700-க்கும் மேற்பட்ட முறை மேடைகளில் அரங்கேறியது. இந்த நாடகம் சுமார் 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறியது. இது இவருக்கு புகழையும் செல்வத்தையும் வழங்கியது. சமூகம், இனவெறி, மக்களின் நிலை குறித்து 1960, 1970-களில் எழுதினார்.
‘டைம்பெண்ட்ஸ்’ என்ற சுயசரிதையை எழுதினார். அமெரிக்க தேசிய கலை அமைப்பின் தங்கப்பதக்கம், புலிட்சர் பரிசு, உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
WRITE A COMMENT