அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் உள்ள ஸ்பென்சரில் 1819-ல் எலியாஸ் ஹோவே பிறந்தார். சிறுவயதில், தந்தைக்கு உதவியாகப் பண்ணையில் பணிபுரிந்தார். 1834-ல் நெசவு தொழிற்சாலையில் பயிற்சி மாணவனாக சேர்ந்தார். பருத்தி இழையை உருவாக்கும் இயந்திரங்களைப் பழுது பார்க்கும் பிரிவில் பணியாற்றியதால் நெசவுத்தறி நாடா இயங்கும் முறை, நெய்யப்படும் துணி வகைகள், எந்திரங்களை இயக்கும் முறைகள் ஆகியன குறித்துத் தெளிவாகக் கற்றுக்கொண்டார்.
ஜார்ஜ் பிசர் என்ற வணிகர் நட்புக்காக 1844-ல் எலியாஸூக்குத் தேவையான உதவிகளை வழங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், துணி தைக்கும் தொழிலில் புதிய இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் எலியாஸ் ஹோவே தொடர்ந்து ஈடுபட்டார். 1845-ம்ஆண்டு தையல் இயந்திரம் ஒன்றை உருவாக்கினார்.
1846-ல் இதற்கான காப்புரிமையை அமெரிக்க அரசு எலியாஸூக்கு வழங்கியது. ஆனால், இந்த இயந்திரத்தை தாங்கள்தான் கண்டுபிடித்ததாக 80 பேர் போராடினார்கள். இவ்வழக்கில் மிகக் கடுமையாகப் போராடிய எலியாஸூக்கு 1854-ல் அமெரிக்க அரசு காப்புரிமை வழங்கியது. அதன்பிறகு பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் தையல் இயந்திரம் கண்டுபிடித்ததற்காக தங்கப்பதக்கம் வென்ற இவர் 1867 அக்டோபர் 3-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT