இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர்களுள் முக்கியமானவர் ராஜா ராம் மோகன் ராய். வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம் ராதாநகர் கிராமத்தில் 1772-ல் பிறந்தார்.
ஆங்கிலேயரின் நாகரிகம், சமத்துவ போக்கு, ஜனநாயக பார்வை, பகுத்தறிவு சிந்தனையால் ஈர்க்கப்பட்டார். இந்திய சமூகத்தில் வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளை கண்டு வெகுண்டார். சமூக சீர்திருத்தம் கொண்டுவர கொல்கத்தாவில் 1815-ல் ஆத்மிக சபையை நிறுவினார்.
இதன் மூலம் அனைத்து மக்களும் சாதி, மத பாகுபாடின்றி ஒன்றாக இணைந்து இறை வழிபாடு நடத்த வழி வகுத்தார். பெண் உரிமை, பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பெண் சொத்துரிமைக்காக பாடுபட்டார். உடன்கட்டை ஏறுதல் (சதி), பலதார மணம் போன்றவற்றுக்கு எதிராக தீவிரமாக போராடினார். அதன் பயனாக 1833-ல்வில்லியம் பெண்டிங் கொண்டுவந்த சட்டத்தால் சதி ஒழிக்கப்பட்டது.
ஆங்கில முறைக் கல்வி போதிக்கும் பள்ளியை 1822-ல்நிறுவினார். இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார். மூடநம்பிக்கை, சடங்குகளை ஒழிக்க 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தையான ராஜா ராம் மோகன் ராய் 1833 செப்டம்பர் 27-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT