தமிழின் சிறந்த எழுத்தாளர் அசோகமித்திரன் 1931 செப்டம்பர் 22-ல் தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் நகரில் (அன்று ஆந்திர மாநிலம்) பிறந்தார். 21 வயதில் சென்னையில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனின் உதவியாளராக ஜெமினி ஸ்டுடியோவில் 13 ஆண்டுகள் பணியாற்றினார். ராமநரசு எழுதி நடித்த ‘வானவில்’ நாடகத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். 1954-ல் வெளிவந்த ‘அன்பின் பரிசு’ வானொலி நாடகம் அசோகமித்திரனின் முதல் படைப்பு.
பிரசுரமான முதல் கதை ‘நாடகத்தின் முடிவு’. முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வாழ்விலே ஒருமுறை’ 1972-ல்வெளிவந்தது. சென்னையில் நிலவிய குடிநீர்த் தட்டுப் பாட்டை நிகழ்கால வறுமையின் குறியீடாக உருவகித்து ‘தண்ணீர்’ நாவல் எழுதினார். அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட அனுபவங்களை ‘ஒற்றன்’ நாவலில் பதிவு செய்தார். 1968 முதல் 1988 வரை இருபதாண்டுகள் கணையாழி இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். அப்போது ஏராளமான இளம் எழுத்தாளர்களின் படைப்புகளைச் செம்மைப் படுத்தி வெளியிட்டார்.
WRITE A COMMENT