இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி. இவர் 1923 செப்டம்பர் 14-ம் தேதி பாகிஸ்தான் ஷிகர்பூரில் பிறந்தார். பள்ளி நாட்களில் ‘டபுள் பிரமோஷன்’ நடைமுறை இருந்ததால், 13 வயதிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிபெற்று 17 வயதில் சட்டப் படிப்பை முடித்தார்.
அப்போது வழக்கறிஞராவதற்குக் குறைந்தபட்ச வயது 21 ஆக இருந்தது. எனவே, சிறப்புத் தீர்மானம் போட்டு அவரை வழக்கறிஞராகப் பதிவுசெய்ய இந்திய அரசு அனுமதி அளித்தது. 18 வயதில் வழக்கறிஞரானவருக்கு அடுத்த சில ஆண்டுகளிலேயே மும்பை மாநகர நீதிமன்றத்தில் நீதிபதியாகும் வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும், அகில இந்திய பார் கவுன்சில் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். சர்வதேச வழக்கறிஞர் சங்கத்திலும் உறுப்பினரானார்.
ஊழலைக் களைய நீதித் துறையும் வழக்கறிஞர்களும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவதை எதிர்த்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வழக்கு நடத்திய அனுபவமுள்ளவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்றார். உலக அமைதி அமைப்பினால் மனித உரிமைகளுக்கான விருது இவருக்கு 1977-ல் வழங்கப்பட்டது. 2010, 2016-ல் மாநிலங்களவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
WRITE A COMMENT