பயண நேரங்களில் பசி தீர்க்கும் உணவாக இருந்து வரும் சமோசா 10-ம்நூற்றாண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட தின்பண்டமாகும். பிறகு நாடுகள் பல கடந்து 14-வது நூற்றாண்டில் இந்தியாவின் ருசிகர நொறுக்குத்தீனியாக சமோசா மாறியது. இந்தியா தவிர எகிப்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தற்போது சமோசா பிரபலம்.
இந்தியாவில் சமோசா என்று அழைக்கப்படும் இந்த உணவு பெர்சியாவில் "சம்போசா" அல்லது "சன்புசாஜ்" என்றும், வேறு சில பகுதிகளில் சம்சா, சோம்சா, சம்போசக், சம்புசா, சமூசா, சிங்கதா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் வெங்காயம், பட்டாணி, உருளைக்கிழங்கு, பன்னீர், மசாலா அல்லது இறைச்சியின் கலவை நிரப்பப்பட்ட முக்கோண அல்லது கூம்பு வடிவத்தில் மடித்துத் தயாரிக்கப்படுகிறது.
சராசரியாக நாளொன்றுக்கு 6 கோடி சமோசாக்கள் இந்தியர்களால் உட்கொள்ளப்படுகிறது. அந்த அளவுக்கு உழைக்கும் மக்களின் சிற்றுண்டியாகவும் துரிதமாகப் பசி போக்கும் நொறுக்குத் தீனியாகவும் சமோசா இருந்து வருகிறது.
சமோசாக்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் ருசிக்கப்படுவது மட்டுமல்லாமல், உலகளாவிய விருப்பமாகவும் மாறியுள்ளது. இத்தகைய உணவுப்பண்டத்தை சிறப்பிக்கும் விதமாக 2016 முதல் செப்டம்பர் 5-ம் தேதி சர்வதேச சமோசா தினமாக கொண்டாடப்படுகிறது.
WRITE A COMMENT