ஈழத்து தமிழறிஞர், கல்வியாளர் சேவியர் தனிநாயகம் அடிகளார் 1913-ம் ஆண்டு இலங்கையில் யாழ்ப்பாணம் கரம்பொன் என்ற கிராமத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வி ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பள்ளியில் படித்தார். 1931 முதல் 1934 வரை ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம் மொழிகளைக் கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.
1945-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரது இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு "தமிழ்த் தூது" 1952-ல் வெளியிடப்பட்டது. 1961-ல் அவர் மலாய் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய தொடர் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற பெயரில் 1967-ல் நூலாக வெளிவந்தது. நெடுந்தீவு மக்கள் தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்தனர். 1980 செப்டம்பர் 1-ம் தேதி இயற்கை எய்திய தனிநாயக அடிகளாருக்கு 1981-ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கி கவுரவித்தது.
WRITE A COMMENT