நாட்டின் முன்னாள் பிரதமர், சிறந்த எழுத்தாளர் அடல் பிஹாரி வாஜ்பாய். இவர் மத்தியப் பிரதேசம் குவாலியரில் 1924-ம் ஆண்டு பிறந்தார். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
விக்டோரியா கல்லூரியில் சமஸ்கிருதம், இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ‘பாஞ்சஜன்யா’ ‘ராஷ்டிரதர்மா’ என்ற இந்தி மாத இதழ், ‘அர்ஜுன்’, ‘ஸ்வதேஷ்’ நாளேடுகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1977-ல் வெளியுறவு அமைச்சராக இருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான இவர் இந்தியப் பிரதமராக 3 முறை பதவி வகித்தார்.
இவர் ஆட்சி காலத்தில், பொக்ரானில் 5 அணுகுண்டு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. பொருளாதார சீர்திருத்தங்கள், தங்க நாற்கரசாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
1992-ல் பத்மவிபூஷன் விருதும், நாட்டின் மிக உயரிய ‘பாரத் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் இந்திய அரசியல் களத்தில் ‘பூரண பண்பாளர்’ என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். வயது மூப்பு காரணமாக 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT