Published : 27 Jan 2023 06:25 AM
Last Updated : 27 Jan 2023 06:25 AM

மனதினை அன்பினால் வென்றிடுவோம்!

காமாட்சி ஷியாம் சுந்தர்

என் தோழியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தினை அவர் அனுமதியுடன் பகிர்கிறேன். எனது தோழி கீர்த்தனா கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த தனது அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தனது மேலதிகாரியிடம் முதல் சந்திப்பிலேயே கருத்து வேறுபாடு ஏற்படும் சூழலை உருவாக்கிக் கொண்டார்.

கருத்து வேறுபாடு

சிறுவயதிலேயே முன் கோபம் கொள்ளும் குணம் உடையவராக இருந்ததால் அவரால் புதிய மேல் அதிகாரி சொல்கின்ற கருத்துக்களை ஏற்புடையதாக இல்லாமல் இருக்கும்போது, அதனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்க்கின்ற வயதும், அனுபவமும் இல்லாத காரணத்தால் அனைத்து கருத்துகளிலும் முரண்பாடு ஏற்பட்டது. பொறுப்பேற்றுக் கொண்டு ஒரு வருட முடிவிலேயே அந்த மேலதிகாரி பணி மாறுதல் அடைந்து சென்றுவிட்டார். இருந்தபோதிலும், எனது தோழியின் உள்ளத்தில் அந்த கருத்து வேறுபாடு மாறாத வடுவாக இருந்து வந்தது.

வயது முதிர்ச்சியின்மை

இப்புதிய ஆண்டின் தொடக்கத்தில் அவளது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொது நிகழ்வில் அவளது பழைய மேலதிகாரியை சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது. மேலதிகாரியை மதிக்கின்ற பண்பான கீழ்ப்படியும் குணம் இல்லாமையை நினைத்து வருத்தமடைந்த எனது தோழி, அந்த அதிகாரியை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்திடும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டாள். தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டாள். தனது அனுபவமின்மையும் வயது முதிர்ச்சியின்மையுமே, நேர்ந்த கருத்து வேறுபாட்டிற்கான காரணம் என்று கூறி விளக்கம் அளித்தாள்.

மன்னிப்பு

சுமார் 6 வருடங்களாக தனது மனதில் இருந்த கருத்து வேறுபாடு பற்றிய எண்ணம் சுமையாக இருப்பதாக தெரிவித்து, அந்த அதிகாரியின் மனதை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு வேண்டினாள். செய்த தவறிற்காக வருந்தி மன்னிப்பு கோரிய எனது தோழி என் கண்முன்னே உயர்ந்து நின்றாள்.

“ மன்னிப்பு கேட்பது மனித இயல்பு!

மன்னித்து மறந்துவிடுவது தெய்வ இயல்பு!”

என்பதற்கு ஏற்ப அந்த மேலதிகாரி கடந்த கால நிகழ்வுகளை தான் முற்றிலும் மறந்துவிட்டதாகக் கூறினார். எனது தோழியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் போன்று நம் அனைவரின் வாழ்விலும் எத்தனையோ நிகழ்வுகள், காயங்களாக, ஆறாத ரணங்களாக மனதில் இருக்கலாம்.

ஆனால் அவற்றை காலம் காலமாக சுமந்து கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பலதரப்பட்ட மனிதர்களிடம் பழகும் போது மனவருத்தம், கருத்து வேறுபாடு, சண்டை, சச்சரவு ஏற்படுவது மிக சகஜம். ஆனால், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதை இளம் தலைமுறையினருக்கு உணர்த்திடும் போது, சண்டை, சச்சரவு என்னும் சொல்லுக்கே இடமில்லாமல் போகும் நமது அகராதியில்! என்பதை நமது மாணவர் உள்ளங்களில் பசுமரத் தாணி போல பதித்திடுவது ஆசிரியரின் கரங் களில்!

“மன்னிப்பதும் விட்டுக் கொடுப்பதுமாக இருக்கும்போது, வாழ்வின் தீர்மானம்

பிறர் மனதினை அன்பினால்

வென்றிடும் வாய்ப்பாக மாறும்!”

என்பதில் துளியும் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்

தலைமை ஆசிரியர்

பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி

நாகமலை, மதுரை மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x