Published : 21 Oct 2022 06:10 AM
Last Updated : 21 Oct 2022 06:10 AM

வீடு, பள்ளி, வீதி, மொட்டைமாடி, மரத்தடியே களங்கள்: பள்ளியையும் சமூகத்தையும் இணைக்கும் வாசிப்பு இயக்கம்

சக.முத்துக்கண்ணன்

பள்ளிக்கல்வித்துறை நடத்தவிருக்கும் வாசிப்பு இயக்கக் கதைத் திருவிழாவிற்குத் திட்டமிடல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கதையை நாடகமாக்கி மாணவர்களிடம் காட்டுதல். ஒருவர் கதை வாசிக்க, பின்னால் சிலர் அதை நடித்துக் காட்டுதல். கதையை உரக்கவாசித்தல், கதையில் வரும் கதாபாத்திரம் போல வேடமிட்டு நடித்துக் கொண்டே கதை சொல்லுதல்என பல வடிவங்களை மாநில பயிற்சியின்போது செய்து காட்டினார்கள்.

வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல புதிய வடிவங்களை உருவாக்கவும், சேகரிக்கவும் மாநிலக்குழு திட்டமிட்டு வருகிறது. இயக்கமாக வாசிப்பை எடுத்துச் செல்ல, ஆர்வமூட்டி தொடங்கி வைக்க நமக்கு வடிவங்கள் தேவைப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கூடலூரில் சங்கீதா எனும் தன்னார்வலரை இல்லத்தில் சந்தித்தேன். பொம்மலாட்ட வடிவில் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மரச்சட்டத்தில் மெல்லிய வெள்ளைத் துணியை ஒட்டி அத்திரையைத் தயாரித்திருந்தார். OHPதாளில் உருவங்களை நகலெடுத்து விளக்கமாறு குச்சியில் ஒட்டிவைத்துள்ளார். பின்புறம் வெளிச்சத்திற்கு செல்போன் டார்ச். பொம்மலாட்ட உபகரணங்கள் தயார்.

விளக்கை அணைத்ததும் திரையின் பின்பக்கம் செல்போன் டார்ச் ஒளிர்கிறது. குச்சியை அசைத்துக் கொண்டே கதையைச் சொல்லத் தொடங்குகிறார். குழந்தைகள், அசையும் உருவங்களின் வழி காட்சியாககதையை ஆவலோடு உள்வாங்குகிறார்கள். இது கதையாக மனசில் அப்படியே பதிகிறது. அதுபோல, தாமும்செய்து காட்ட குழந்தைகள் கதைகளை வாசிக்கத் தொடங்குகிறார்கள் வாசிக்கத் தொடங்குவதன் மூலமாக ஒரு புதிய உலகத்தினுள் அவர்களால் சஞ்சரிக்க முடிகிறது. கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். பாடத்தைப் பேசாத மாணவர்களும், தான் வாசித்த கதையைப் பற்றி பேசத் தொடங்குகிறார்கள்.

கூடலூர் திருவள்ளுவர் பள்ளியின் பின்புறம் உள்ள தோப்பில் ஒரு மையம். கவிதா எனும் தன்னார்வலர் கை கால்களை அசைத்து பாடிக் கொண்டிருந்தார். மாணவர்களும் பெரும் உற்சாகத்தோடு இருந்தனர். வாசிப்பில் பின் தங்கிய குழந்தைகளுக்குத் திருமணப் பத்திரிக்கையை வட்டம், சதுரம், முக்கோணம் என பல வடிவங்களில் வெட்டி அதன் பின்புறத்தில் தமிழ், ஆங்கில எழுத்துக்களை எழுதி, எழுத்து அட்டைகளை உருவாக்கி இருந்தார். மரத்தடியில் மெல்ல மலர்ந்து கொண்டிருக்கும் அக்குழந்தைகளைப் பார்க்கவே சந்தோசமாக இருந்தது. அத்தோடு கவிதா வாசிப்பை எல்லோருக்கும் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவி ‘குப்பையில் கிடைத்த மருமகள்' என்கிற கதையைப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளிக்கு வெளியிலான கல்விச்செயல்பாடுகளில் மிளிரும் இப்படியான தன்னார்வலர்களை இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது. திட்ட நிறைவுக்குப் பின்னும் இவர்கள் தொடர 'வாசிப்பு இயக்கம்' ஒரு புதிய பாதையை அமைக்க உள்ளது. பள்ளி நூலகத்திலிருந்து ஒருநூலை கையில் எடுக்கும் மாணவருக்கு வகுப்பறையில் ஆசிரியரும், வீடுகளில் பெற்றோரும் துணையிருக்க வேண்டும். அரசு பள்ளிக் குழந்தைளுக்கு வீதிகளும் முக்கியம். வசதி வாய்ப்பற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்கு தன்னார்வலரின் துணை வேண்டியுள்ளது.

ஒரு கதை - வீடு, பள்ளி, வீதி என மூன்றிலும் பயணப்பட்டு வாசிப்பும், கதைசொல்லலும் ஓர் பண்பாட்டு நடவடிக்கையாக மாற வேண்டும். மொட்டைமாடி, மரத்தடி, எனவாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வாசிக்கும் மையங்களை கொண்டாட்டத்தோடு நடத்த வேண்டும். அவை தினசரி நிகழ்வாக இருக்க வேண்டும் என்றோ, வாசிக்கும் நேரத்தையோ வரையறுக்காமல், கட்டற்ற வெளியாக வாசிப்பு மையங்களை மலரச் செய்வோம்.

கட்டுரையாளர்: ஆசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி, விக்கிரமங்கலம்

அரியலூர் மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x