Published : 18 Nov 2025 07:54 AM
Last Updated : 18 Nov 2025 07:54 AM

கேள்வியே அறிவின் திறவுகோல்

கல்வி அதிகாரி பள்ளிக்கு வருகை தர இருப்பதாகத் தகவல் வருகிறது. ஒரு வாரமாக, பள்ளியில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் அன்றைய நாள்வரை எழுதி முடிக்கப்பட்டு, புதிய காக்கி அட்டை சூட்டப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் கையேடுகள் திருத்தப் பட்டு, வகுப்பறையில் வரிசையாக அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒரு வாரமாக ஒரே பாடம் நடத்தப்பட்டு, மீண்டும் மீண்டும் மாணவர்களைப் படிக்கவைத்து, நன்றாகப் படிக்கும் மாணவர்களை முதல் வரிசையில் அமரவைக்கிறார்கள். கற்றலில் குறைந்த நிலையில் உள்ள மாணவர்களை இறுதி வரிசையில் அமரவைத்து, அதிகாரி வந்து கேள்விகள் கேட்டால், உடனே எழுந்து பதில் சொல்ல வேண்டும் என நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

அச்சமூட்டாத அதிகாரி: கல்வி அதிகாரி குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கு வருகிறார். டிரம்ஸ் இசைக்கப் பட்டு, வரவேற்பு அளிக்கப்படுகிறது. கொடியேற்றம் முடிந்ததும், வரிசையாக மாணவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுடன் வகுப்பறைக்குச் செல்கின்றனர்.

பதிவேடு களைப் பார்வையிட்டு, வகுப்பறைக்குச் செல்லும் அதிகாரி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை நோக்கி பாடத்திலிருந்து கேள்விகளைக் கேட்டு மதிப்பிடுகிறார். மாலையில் நடக்கும் மீளாய்வுக் கூட்டத்தில் சிறப்பாகப் பதில் சொன்ன வகுப்பு ஆசிரியருக்குப் பாராட்டுகளும், பதில் சொல்லாத வகுப்பு ஆசிரியருக்கு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இது அந்தக் காலம்.

தற்காலத்தில், பள்ளிக்கு அதிகாரி வருகிறார். தலைமையாசிரியரைப் பார்த்த பின், பள்ளி வளாகத்தைப் பார்வையிடுகிறார். வகுப்பறைக்குச் செல்கிறார். அதிகாரி என்கிற எண்ண மில்லாமல் மாணவர்கள் சாதாரணமாக இருக்கிறார்கள். மாணவர் களிடம் கேள்வி கேட்காமல், மாணவர்களை நோக்கி, இதுவரை வகுப்பறையில் நீங்கள் என்னென்ன கேள்விகளைக் கேட்டீர்கள் என்று கேட்கிறார். கேள்விதான் அறிவின் திறவுகோல்.

ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விதான், பூமி உருண்டை என்பதை புரியவைத்தது. விழும் ஆப்பிளை பூமி மடியில் தாங்கும்போது, அதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை என அறிய வைத்தது என்பதை அவர் கூறியவுடன், மாணவர்கள் ஆர்வமாக தாங்கள் கேட்ட கேள்விகளையே அவருக்குப் பதிலாக அளித்தனர்.

வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது? பூஜ்ஜியம் ஏன் வந்தது? ஒன்று முதல் ஒன்பதுவரை எண்கள் யார் கண்டுபிடித்தது? எப்படி கண்டு பிடிக்கப்பட்டது? எங்கள் ஊருக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? மழை எப்படி பெய்கிறது? மின்னல் எப்படி உருவாகிறது? - எனத் தொடர் கேள்விகளால் அறிவின் கதவுகளை மாணவர்கள் திறந்தனர். இன்று, பள்ளிப் பார்வை செயலியில் பார்வையிடும் அலுவலர்கள் பதிவுசெய்யும் போது, பாடவேளையில் எத்தனை சதவீதம் மாணவர்கள் கேள்விகளைக் கேட்டனர் என்கிற விவரம் கேட்கப்படுகிறது.

தலைகள் நிமிரட்டும்: ஆசிரியர்களுக்கு அஞ்சி நடுங்கி, தனது சந்தேகத்தைக் கேட்காமல், மனப்பாடம் மட்டுமே செய்த காலம் மாறி, தற்போது சுதந்திரமான வகுப்பறை உருவாக வகுப்பறையில் மாணவர்கள் கேள்விகள் கேட்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களை நோக்கிக் கேள்விகள் கேட்ட காலம் அந்தக் காலம். மாணவர்கள் புரிதலைப் பெற கேள்விகள் கேட்கும் காலம் இந்தக் காலம். பறவை பறத்தலை ரசிக்கிறோம். பல நேரம் கடந்து செல்கி றோம். பறவை ஏன் பறக்கிறது? எப்படி பறக்கிறது என்று தனக்குள் கேட்ட கேள்விகளால்தான், விமானத்தை வடிவமைத் தனர் ரைட் சகோ தரர்கள்.

“மனைவியை நேசிக்கும் நீங்கள், இந்த நாட்டின் விடுதலையைப் பற்றி பேசும் நீங்கள், ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை?” என்று விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா கேட்ட கேள்விகள்தான், மகாகவி பாரதியிடம் பெண்ணுரிமைப் பற்றிய புரிதலை உருவாக்கி, செல்லம்மாவை தோளின் மீது கை போட்டு, தெருவில் அழைத்துச் செல்லும் தோழராக ஆக்கியது. பெண்ணுரிமைப் பற்றி எழுதவைத்தது.

பள்ளிக்கு வருவதற்கு முன் ஆர்வமாக, தொடர்ச்சியாக கேள்விகளைக் கேட்ட குழந்தைகள், பள்ளிக்கு வந்தபின் கேள்விகள் கேட்பது குறைந்து விடுகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாகப் பல கல்வியாளர்களால் வைக்கப்படுகிறது. பள்ளியின் நோக்கம் மாணவர்களுக்கு பதில்களை கற்றுக்கொடுப்பது அன்று.

சிறந்த கேள்விகளை உருவாக்க மாணவர்களைப் பழக்குவதே. வகுப்பறையில் சிறந்த கேள்விகள் கேட்கும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவோம். அறிவை கேள்வி எனும் விளக்கம் கொண்டு தேடிப் பெறுவோம். கேள்விகள் பூட்டுகள் அல்ல. அவையே அறிவின் திறவுகோல்கள் என அனைவரும் உணர்வோம்.

- கட்டுரையாளர்: மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, செங்கல்பட்டு மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x