Published : 28 Oct 2025 07:30 AM
Last Updated : 28 Oct 2025 07:30 AM
நம் நாட்டின் எதிர்காலமான மாணவர்களில் சிலர் இளம் வயதிலேயே சமூகத்துக்கு எதிரானவர்களாக மாறுகிறார்கள். சக மாணவனைத் தாக்குதல், ஆசிரியரைத் தாக்குதல், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுதல், யாருக்கும் அடங்காதவர்களாக இருத்தலைப் போன்று ஆங்காங்கே தடம்மாறி நிகழும் ஓரிரு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நிகழ்ந்துள்ளன.
இவையே சமீப ஆண்டுகளாக பெரிதாக கவனப்படுத்தப்படுகின்றன. இது ஏதோ இளம்வயதினரின் பிரச்சினை என்பதுபோல அந்தப் பிரச்சினைகளை சமூகம் ஒதுக்கிவைத்துவிடுகிறது.
இந்தப் பார்வை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்ப தற்குப் பதிலாக, சிலரைக் குற்றவாளி ஆக்குவதுடன் விலகி நின்றுகொள்கிறது. மாறாக, முதிர்ச்சி அடையாத இந்தக் குழந்தைகள், இளைஞர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம். இவர்களில் ஒரு சிலர் உலக நியதிகளை உணராமல், சக மனிதரை மதிக்காமல் செயல்பட்டதற்கு சமூகமாகக் கூடி தீர்வுகாண்பதை விட்டுவிட்டு, குற்றஞ் சாட்டி ஒதுங்கிக்கொள்வதால் அந்தப் பிரச்சினைகள் இன்னும் மோசமடையவே நாம் துணைபோகிறோம்.
இதற்கு மாறாகக் கலந்துரையாடல், களச் செயல்பாடுகள், கதைகள் வழியாக நாகரிக வளர்ச்சியில் நாம் கண்டடைந்த அறிவியல் பார்வையை, சமூகப் பார்வையைக் குழந்தைகள், இளைஞர்களுக்குச் சொல்ல முனைகிறது, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை உருவாக்கியுள்ள ‘சமூக ஜனநாயகக் கையேடு'. நாம் எல்லாருமே நட்சத்திரங்களின் துகள்கள், தூசுகள்தான். நம் உடலில் உள்ள வேதிப்பொருட்கள், தண்ணீர் அனைத்துமே நட்சத்திரங்களில் இருந்து கிடைத்தவைதான்.
ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட நவீன மனித இனத்தின் வழித்தோன்றல்களான நாம், உலகில் உள்ள அனைவருடனும் மரபணுவைப் பகிர்ந்துகொண்டு சொந்தக்காரர்களாக இருக்கிறோம். இந்த விஷயத்தைப் பிரபலத் தாவரவியல் பேராசிரியர் பா.தயானந்தனை முன்வைத்துச் சொல்கிறது ஓர் அத்தியாயம்.
ரத்தத்துக்கு சாதி இல்லை, அணுக்களுக்கு சாதி இல்லை. இவற்றால் உருவாக்கப்பட்ட மனிதர்களான நாம் மட்டும் சாதி பார்ப்பது எப்படி அறிவியல்பூர்வமாகும் என்கிற கேள்விகள், உரையாடல்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்பு, அது முன்வைக்கும் சமத்துவ சமூகம், நமக்கான உரிமைகளை உறுதிசெய்யும் அரசமைப்பின் முகப்புரை, தேசியக் கொடி - அசோக சக்கரத்தின் முக்கியத்துவம், சாதி ஒழிப்புக்கான உறுதிமொழி, சாதி ஒழிப்புக் கும்மி, சாதியை ஒழித்த பெண்கள் என சமூக அறிவியல் நோக்கிலும் பல விஷயங்களை இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
விரிவுரையாளர்கள் கு.ரவிக்குமார், சி.ஜோசப் பிரபாகர், எழுத்தாளர் நாராயணி சுப்பிரமணியன், சமூகச் செயல்பாட்டாளர் சக்திரேகா, பேராசிரியர் க.கணேசன், செயல்பாட்டாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் இந்தப் படைப்புகளை எழுதியுள்ளனர்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற சமத்துவ நோக்கத்தை வலியுறுத்தும் குறளுடன் தொடங்கும் இந்தக் கையேடு வள்ளலார் ராமலிங்க அடிகள், கவிமணி தேசிகவிநாயகம், பாரதியார், பாரதிதாசன், தமிழ்ஒளி, வல்லம் தாஜுபால் உள்ளிட்ட கவிஞர்களின் சிறந்த கவிதைகள், பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
ஆக்கபூர்வமான எதிர்காலம்: கதை, நாடகம், பாடல், உரையாடல், நிறையச் செயல்பாடுகள், விளையாட்டுகள், கேள்வி-பதில்கள் என மாணவர்களை ஈர்க்கும் வகையில், ஈடுபடுத்தும்விதத்தில் நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களைக் களச் செயல்பாடுகளுடன் நேரில் நடத்தித்தர பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தயாராக இருக்கிறது.
நம் காலத்தின் தீவிர சமூகப் பிரச்சினைகளில் ஒன்றைச் சரியான அணுகுமுறையின் வழி மாற்ற முடியும் என்கிற தெளிவான சிந்தனையுடன் இந்த நூல் வெளியாகியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளிடம் இதைச் சரியான வகையில் எடுத்துச்செல்வது அடுத்த பணி. இப்படிச் செய்யும்போது, ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையே எப்போதும் மையமிட்ட நம் முந்தைய தலைமுறை ஆளுமைகள்போல் எதிர்காலத் தலைமுறையும் ஆக்கபூர்வமான ஒன்றாக மாறும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.
‘சமூக ஜனநாயகக் கையேடு',
பொதுப் பள்ளிக்கான
மாநில மேடை,
தொடர்புக்கு: 94456 83660
- valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT