Last Updated : 14 Oct, 2025 07:27 AM

 

Published : 14 Oct 2025 07:27 AM
Last Updated : 14 Oct 2025 07:27 AM

மாணவர்களின் மரம் வளர்ப்பு ஆர்வம்!

இயற்கையோடு இயைந்து மனித இனம் வாழ்ந்த காலம் மருவி, இயற்கையைத் தன்வயப்படுத்தும் முயற்சியில் இறங்கியதால் புவி வளம் பலவிதங்களில் சுரண்டப்படுகிறது. புவி வெப்பமடைதல், ஞெகிழிக் குப்பையின் பெருக்கம், கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற ஆபத்துகளை மட்டுப்படுத்த நுகர்பொருள் பயன்பாடு குறைப்பு, மாற்று எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவை சார்ந்து உலக நாடுகள் இணைந்து மாநாடுகள் நடத்தி பேசிக்கொண்டிருக்கின்றன. மறுபக்கத்தில் நிலம், நீர், காற்று, விண்வெளி ஆகியவை மிக வேகமாக மாசுபட்டுக் கொண்டே வருகின்றன.

தாயின் பெயரில் மரம்: காடு, ஏரி, ஆறு, விலங்குகள், பறவைகள் போன்ற இயற்கை அம்சங்களை மேம்படுத்துவது, பாதுகாப்பது, அவற்றிடம் அக்கறைக் காட்டுவது ஒவ்வொரு குடிநபரின் கடமையாகும். சூழலியல் சமநிலையைப் பராமரிக்க சிறிய பூச்சிகள் முதல் பெரிய யானைகள்வரை ஒவ்வொரு உயிரினமும் அவசியம். மனிதர்கள் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ புவியைக் காப்பதில் அரசுடன் இணைந்து மாணவர்களும் மக்களும் பங்கெடுக்க வேண்டும்.

ஏற்கெனவே சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஊட்டும்விதமாக அரசு, தன்னார்வ அமைப்புகளின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் நாட்கள் கொண்டாடப்பட்டு வரு கின்றன.

இதில் இந்திய அரசின், ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ இயக்கத்தில் இணைந்து மரக்கன்று களை நட்டு இணையம் வழியாகச் சான்றிதழ் பெறுவதில் மாணவர்கள் மிகுந்த அக்கறை காட்டத் தொடங்கி யுள்ளனர். இதன் நீட்சியாகப் பொது போக்குவரத்து முறை, சைக்கிள் பயன்பாட்டில் மாணவர்களின் அக்கறை அதிகரித்துள்ளது.

மாணவர்களிடம் பசுமை விழிப்புணர்வை வளர்த்து, காட்டுவளத்தை விரிவாக் கம் செய்ய மாணவர்களை ஊக்கு விக்கும் நோக்கில் தாயின் பெயரில் ஒரு மரம் நடும் இயக்கம் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

தன் தாயுடன் சேர்ந்து மரக்கன்றை நட்ட ஒளிப்படத்தைத் திறன்பேசி மூலம் பதிவேற்றம் செய்யும்போது மாணவரின் பெயர், தாயின் பெயர், பதிவேற்றம் செய்யப்பட்ட ஒளிப்படத்துடன் மத்திய அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மின் சான்றிதழ் கிடைக்கும். இதை மாணவர்கள் ஆர்வத்துடன் வியந்து பார்த்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பசுமை வீரர் ஆவோம்! - கடந்த 2024ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் (ஜூன் 5) நாளில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் இதுவரை நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மன்றத்தின் பங்களிப்புடன் 14.7 லட்சம் பள்ளிகள் இணைந்துள்ளன. தமிழ்நாட்டில் 1,747 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது.

இந்தப் பள்ளிகளில் படிக்கும் 41.25 லட்சம் மாணவர்கள், சுற்றுச்சூழல் மன்றத்தின் வழிகாட்டுதலின்படி, கடந்த செப். 30ஆம் தேதிக்குள், தங்கள் தாயின் பெயரில் ஏதேனும் ஓர் இடத்தில், ஒரு மரக்கன்றை நட வேண்டும் எனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது.

மரக்கன்று நட்ட ஒளிப்படத்தை, ‘மரம் நடும் திட்டம் 2.0' இணையதளத்தில் பதிவேற்றி, அதற்கான சான்றிதழைப் பெறும்படி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. பள்ளி வளாகம், பொது இடம், மரம் வளர்க்க ஏற்றச் சூழல் உள்ள இடங்களை மாணவர்கள் தேடிதேடிக் கண்டறிந்து அந்த இடங்களில் எல்லாம் முடிந்தவரை நட ஆர்வம் காட்டுகிறார்கள்.

வளர்ந்த மரம் நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குத் தேவையான 118 கிலோ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. ஆகவே மக்கள், தன்னார்வ அமைப்புகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் இதில் பங்கெடுத்து மரக்கன்றுகளை நட்டு இயற்கை நேசத்தோடு நமது சுவாசத்தைப் பாதுகாப்போம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சேடப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்; choraamu@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x