Published : 07 Oct 2025 07:46 AM
Last Updated : 07 Oct 2025 07:46 AM
வகுப்பறை வண்ணமயமாவது குழந்தைகளுடைய மகிழ்ச்சியில் அடங்கி உள்ளது. ஆசிரியரின் அச்சுறுத்தல் இல்லாத குழந்தைகளின் சின்னஞ்சிறு ஆசைகள் வெளிப்படும் வகுப்பறை மகிழ்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கும். குழந்தைகளுடைய சுதந்திரமான சிந்தனைக்கு வலுசேர்க்கும் வகையில் வகுப்பறைகள் இருக்கும்பட்சத்தில் கல்வி சுமையற்றதாக மாறும்.
வெவ்வேறு இடங்களில் இருந்து பல்வேறு குடும்பப் பின்னணிகளுடன் வந்துசேரும் குழந்தைகள் சங்கமிக்கும் அற்புதமான பூந்தோட்டமே வகுப்பறை. ஒவ்வொரு குழந்தையும் பல்வேறு மரபு களையும் குணங்களையும் கனவுகளையும் சுமந்துவருகின்றனர்.
தோழமை இனிது: தான் இதுவரை அனுபவித்திராத இவ் வுலகத்தின் உச்சியைத் தொட்டு ருசிக்கும் வாய்ப்பை, தம் குழந்தைகளுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்பது பெற்றோரின் கனவு. எந்த விதமான எதிர் பார்ப்பும் இன்றி சின்னஞ்சிறு சிரிப்போடு புத்தகங்களை ஏந்திப் பிடிக்கும் அந்தக்கரங்களுக்குக் கைகோத்து நடப்பதற்கும் தொடர் பயணத்தை இன்பமயமாக்கு வதற்கும் உடன் இருக்கும் குழந்தைகளுட னான பழக்கமும் நெருக்கமும் அவசிய மாகிறது.
நட்புக் கொள்வதைப் போன்ற அரிய செயல் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக “செயற்கரிய யாவுள நட்பின்” என்றார் வள்ளுவர். வகுப்பறையில் உணரும் மகிழ்ச்சியையும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது தான் அனுபவிக்கும் இன்னல்களையும் இறக்கிவைத்து, ஆற்றுப்படுத்தும் இடமாக அமைவது ஒப்பார் குழுவின் நட்பு. மனச்சோர்வைப் பகிர்ந்து கரங்களைப் பற்றிக்கொண்டு ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் கரம் பற்றிச் செல்லும் நட்புக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை.
கதாநாயகன் சுவடு: நல்வழிப்படுத்தும் அதே நட்பு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும்போது கரம் பற்றி இழுக்கத் தவறி விடுவதும் உண்டு. குற்றங்களுக்குச் செவி மடுப்பது மட்டும் அல்லாமல், அக்குற்றத்துக்கு வலு சேர்க்கும்படி கரம் பிடித்தலும் நட்பின் இன்னொரு பரிமாணமாக சில நேரம் இருக்கிறது. அத்தகையச் சூழலில் குழு மனப்பான்மை மறைந்து கும்பல் மனோபாவம் அங்கு தலைத்தூக்கிவிடுகிறது.
கும்பலாக இணைந்து கொண்டு ஒருவரை மற்றொருவரோ, பலரோ தாக்கி கதாநாயகன் பட்டத்தைச் சூட்டிக் கொண்டாட வைப்பதும் நட்புதான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவரை ஒருவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்படுத்தி மகிழும் குணம் எங்கிருந்து வந்தது? குழந்தைகள் குடும்பத்தினரிடம் மரபு சார்ந்த குணங் களையும் கண்டு ரசிக்கும் ஊடகங்கள்வழி நாயகப் பிம்பத்தையும் அறிந்தும் அறியாமலும் விரும்பியும் விரும்பாமலும் கற்றுக்கொண்டே வருகின்றனர்.
வன்முறைக் காட்சிகள்: காட்சி ஊடகத்தின் வழியாகக் காணும் வன்முறைச் சம்பவங்கள் இரண்டு வகையான எதிர்வினையை ஏற்படுத்து கின்றன. முதலாவது, அதே போன்றதொரு செயலை தாமும் செய்துபார்க்கும் தூண்டுதல் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. மற்றொன்று, வன்முறையின் வீரியம் இழந்து சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்வது.
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய புள்ளி இது. நம்மிடம் இருக்கும் வன்முறை சார்ந்த உணர்ச்சிக் கூறுகளைப் புரிந்துகொள்ள இயலாது. இதுவே நண்பர்களுடன் விளையாடும்போது, குழுவாக இணைந்து செயல்படும்போது, பேசிக்கொள்ளும்போது, எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பை மற்றவர் உதாசீனப்படுத்தும்போது தாக்குதல் எண்ணம் தூண்டப்படுகிறது.
காட்சி ஊடகங்களின் வீரியத்தைக் கையாளுவதற்குப் பள்ளி வகுப்பறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்று வழிகள் பல உள்ளன. சிறந்த சமூக மதிப்பீடுகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துதல், நாடகமாக நடிக்கவைத்தல், குழு செயல்பாட்டில் ஈடுபட வைத்தல், ஒருவர் ஆரம்பித்த கதையை மற்றவர் தொடர எனச் சிறுசிறு கதைகளை உருவாக்கவைத்தல், விளையாட ஆர்வமூட்டுதல், நல்லவற்றைத் தானே தேடவைத்தல் எனச் சிந்தனையைச் சீர்படுத்த ஆரம்பக் கட்டத்திலிருந்தே முயல வேண்டும்.
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், திருச்சிராப்பள்ளி; agracy5533@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT