Published : 30 Sep 2025 07:28 AM
Last Updated : 30 Sep 2025 07:28 AM

ஒன்றரை மணிநேரத் தேர்வு போதாதா?

காலாண்டுத் தேர்வு. தேர்வறைக்கு ஒதுக்கப் பட்டது இருபது மாணவர்கள். இரண்டு பேர் வரவில்லை. தேர்வு தொடங்கி அரை மணி நேரம் ஆகிவிட்டது. நான்கு மாணவர்கள் ஒரு மதிப்பெண் விடைகளை எழுதி முடித்துவிட்டுச் சுற்றிச்சுற்றிப் பார்த்து கண்கள் சொக்கியிருந்தனர். இரண்டு பேர் கொட்டாவிவிட, மூன்றாவது கொட்டாவி என்னிட மிருந்து வந்தது.

ஒரு மணி நேரம் முடிந்தது. ஏறத்தாழ பாதிப் பேர் எழுதுவதை நிறுத்தியிருந்தனர். விரல்களின் வழியே விடைகளைப் பெற அசைந்தவர்களை எச்சரித்தேன். சுற்றிச்சுற்றிப் பார்ப்பது, ஸ்கேல், பென்சில், ரப்பர் வைத்து விளையாடுவது, மேசையைத் தட்டுவது, லேசான தூக்கம் போன்ற பல்வேறு செயல்களால் தேர்வறைக்குள் சோம்பல் நிரம்பிக்கொண்டே இருந்தது. சுற்றிச்சுற்றி நடந்து என்னை நெருங்கிய சோர்வை விரட்டிக் கொண்டிருந்தேன்.

நாலைந்து பேர் வேகவேகமாக எழுதிக்கொண்டு இருந்தனர். மனப்பாடம் செய்து வந்தவற்றை விடைத்தாளில் கொட்டிக்கொண்டு இருந்தனர். வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு வடிகட்டுதலே முதன்மை நோக்கம் என்பதால், மூன்று மணி நேரத் தேர்வு வைக்கலாம். பள்ளிக் கல்வியில் மூன்று மணி நேரத் தேர்வு என்பது கொடுமையானது.

வலுவற்ற மதிப்பீட்டு முறை: ஒன்றரை மணி நேரம், ஐம்பது மதிப்பெண்களுக்குத் தேர்வு என்பது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதி, திருப்புதல் தேர்வுகள் மட்டுமே நூறு மதிப்பெண் தேர்வுகள். மற்றவை ஐம்பது மதிப்பெண் தேர்வுகள். எழுத்துத் தேர்வுகள் அனைத்தையும் ஒரே மாதிரியாக ஐம்பது மதிப்பெண் தேர்வாக நடத்தலாம்.

கல்வியின் தரம் குறைந்துவிடும் என்று துடிப்பவர்கள் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் எழுத்துத் தேர்வு மனப்பாடத்தையே பரிசோதனை செய்கிறது. பாடப்பொருள் சார்ந்த பல்வேறு திறன்களை மதிப்பிடும் மதிப்பீட்டு முறைகள் வலுவாக இல்லை. சிந்தனை வினா என்று இருந்தாலும், அதற்கான விடை உரை நூல்களில் இருக்கிறது.

ஒருவரின் சிந்தனையே குழந்தைகளிடம் மனப்பாடமாக மாறுகிறது. 'காட்சியைக் கண்டு கவினுற எழுதுக' என்று ஒரு வினா. கொடுக்கப்பட்ட படத்தைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும். உரைநூலில் உள்ள பாடலை மனப்பாடம் செய்து எழுதுவதே நடைமுறையாக இருக்கிறது. பாடநூலில் உள்ள படங்கள் தவிர, வேறு படங்கள் வினாத்தாளில் வருவது அபூர்வம். தொடர்ந்து கவிதை அல்லது பாடல் எழுதும் பயிற்சி ஏதும் வகுப்பறைகளில் இல்லை. பாடச்சுமை அதிகம்.

செயல்பாடுகளில் கவனம்: பாட நூல்கள் அனைத்தும் பல்வேறு தகவல்களால் நிரம்பியுள்ளன. அவற்றை நடத்தவே ஒரு கல்வியாண்டு போதாது. பாடநூலில் ஒவ்வொரு இயலுக்குப் பின்னாலும் ஏராளமான செயல்பாடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் செய்துபார்க்க வேண்டும். கலந்துரையாட வேண்டும். சொந்த நடையில் எழுத வேண்டும். இப்படிச் செயல்பாடுகளின் வழியே கற்று உணரத் தொடர்பயிற்சி அவசியம். இதற்கான கால அளவு ஒதுக்கப்படுவது அவசியம்.

செயல்பாடுகளில் கவனம் வைக்காமல், எழுத்துத் தேர்வுகளில் ஏன் அதிகக் கவனம் வைக்கிறோம்? மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி சதவீதத்தைக் கணக் கிடுவது எளிது. மற்ற அனைத்துச் செயல்பாடுகளுக்கு ஏற்ற மதிப்பீட்டு முறைகள் நம் வழக்கத்தில் இல்லை.

முழுமையான, தொடர் மதிப்பீட்டு முறை என்று ஏழாம் வகுப்புவரை உள்ள மதிப்பீட்டு முறையும் சடங்காக மாறியிருக்கிறது. வீடும் சமூகமும் குழந்தைகளின் வாழ்க்கை முறை சார்ந்த திறன் வளர்ச்சிக்கான பொறுப்பிலிருந்து பெரும்பாலும் விலகி, பள்ளியையே முழுமையாகக் குற்றம் சொல்லும் நிலை உருவாகியுள்ளது.

இன்றைய காலத்துக்கு ஏற்றபடி பள்ளிப் பாடத்திட்டம், மதிப்பீட்டு முறைகள், கற்பித்தல் முறைகள், வகுப்பறையில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள், பாதை மாறும் வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகள் வேண்டும். இவை அனைத்தையும் கலந்துரையாடி முடிவுசெய்தலே அடுத்த தலைமுறைக்கான கல்வியை உருவாக்கும். அதுவே அறத்தோடு சிந்திக்கும், செயல்படும் தலைமுறையை உருவாக்கும்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர்; artsiva13@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x