Last Updated : 26 Aug, 2025 07:33 AM

 

Published : 26 Aug 2025 07:33 AM
Last Updated : 26 Aug 2025 07:33 AM

கணிதத் துறையின் ஆஸ்கர் நாயகி ராஜுலா ஸ்ரீவாஸ்தவா

கணிதம் பலருக்கு வேப்பங்காய். ராஜுலா ஸ்ரீ வாஸ்தவாவுக்கு அது தித்திக்கும் மலைத் தேன். உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் மசூரியைச் சேர்ந்தவர் இவர். சிறு வயதில் இருந்து கணிதம்தான் இவருக்கு விருப்பப் பாடம். ஏனென்றால், கணிதக் கருத்துருவாக்கத்தைப் புரிந்துகொண்டால், மழலையர் பள்ளியில் பெருக்கல் அட்டவணையைத் தவிர்த்து வேறு எதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை என்கிறார்.

ராஜுலா ஸ்ரீவாஸ்தவா, ஹார்மோனிக் பகுப்பாய்வு - பகுப்பாய்வு எண் கோட்பாட்டில் ஆற்றிய பங்களிப்புக்காக ‘மரியம் மிர்சாகானி நியூ ஃபிரான்டியர்ஸ் பரிசு’ பெற்றுள்ளார். கணிதத் துறையில் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது இது. ‘அறிவியல் ஆஸ்கார்’ என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது. ஹார்மோனிக் பகுப்பாய்வு என்றால் என்ன?

எண்களில் கசிந்துருகி... அறிவியல் பின்னணி கொண்டது ராஜுலா ஸ்ரீவாஸ் தவாவின் குடும்பம். இதில் கணிதப் புதிர்களைத் தீர்ப்பதில் ராஜுலாவுக்கு பேரார்வம் உண்டானது. பள்ளிப்படிப்பை அடுத்து, புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி -ஆராய்ச்சி நிறுவனத்தில் (NISER) கணிதத்தில் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் முடித்தார்.

அப்போதுதான் ஹார்மோனிக் பகுப்பாய்வு மீது அவருக்கு அளவு கடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அடுத்தகட்டமாக, முனைவர் பட்ட ஆய்வுக்காக, அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். காரணம், அங்குதான் ஹார்மோனிக் பகுப்பாய்வுக்கான அதிகமான ஆராய்ச்சி மாணவர்கள் இருந்தனர்.

இந்தியாவில் நைஸர் கல்லூரியில் படித்த காலத்தில் கணிதம் பயிலும் 25 மாணவர்களில் இருவர் மட்டுமே பெண்கள். அவர்களுள் ஒருவர் ராஜுலா. இருப்பினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார். ஆனால், அமெரிக்காவில் தனிமை அவரை வெகுவாக வாட்டியது. நாளடைவில், கணிதப் புதிருக்கு விடை காணும் இவரது திறமை நண்பர்களை ஈட்டித்தந்தது. முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக முடித்தார்.

பின்னர், ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழகம், மேக்ஸ் பிளாங்க் கணித நிறுவனத்தில் ஹீர்ட்சபுரூக் ஆராய்ச்சி பயிற்றுவிப்பாளர் ஆனார். பிரீட்ரிக் ஹீர்ட்சபுரூக் எனும் ஜெர்மானிய கணித மேதை முன்மொழிந்த கோட்பாடுகளின் மீது நடத்தப்படும் ஆராய்ச்சி இது. தற்போது, எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையின் வருகைதரு நிபுணராக உள்ளார். அடுத்த சில மாதங்களில், கட்டுக்கடங்காத கணிதக் காதலோடு முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்ட விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்திலேயே உதவி பேராசிரியராகப் பணியில் அவர் அமர இருக்கிறார்.

ஹார்மோனிக் பகுப்பாய்வு: மேம்பட்ட கணிதக் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கலான கணித செயல்பாடுகளை எளிமையான பகுதிகளாகப் பிரித்தல், உயர் பரிமாணங்களில் வளைந்த வடிவங் களில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு சில எண்கள் எவ்வளவு நெருக்கமாகச் செல்ல முடியும் என்பதைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றில் ராஜுலா கவனம் செலுத்துகிறார். இதில், ஹார்மோனிக் பகுப்பாய்வு, எண் கோட்பாட்டையும் இணைத்து, அதன் குறுக்குவெட்டில் ஒரு சவாலான பகுதியைக் கண்டறிந்துள்ளார்.

ஹார்மோனிக் பகுப்பாய்வு என்பது வெவ்வேறு அலை வடிவங்களில் உள்ள ஒலிகள், அலைகளைக் கண்டறிந்து, அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கான கணிதக் கருவியாகும். இது இசை அலைகளின் ஆராய்ச்சியில் தொடங்கி, கணிதவியல், இயற்பியல், எண் கோட்பாடு (number theory) முதலான பல்துறைகளில் பயன்படுகிறது.

இந்த இரண்டு துறைகளில் கூட்டு பணியாற்றி, குறிப்பாக சீரான பகுப்பாய்வு, பகுப்பாய்வு எண் கோட்பாட்டிற்கான திறந்த கோட்பாடுகளில் முக்கிய பங்களிப்புகளை அவர் செய்துள்ளார். அதுவே, இந்த விருதை பெற்றுத் தந்துள்ளது. சரி! கணிதம் அவ்வளவு எளிமையானதா? அவரது கூற்றைப் படிக்கும் எவரும் 'ஆம்' என்பர். " நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். கணிதப் புதிருக்கான தீர்வு குறித்து யோசிக்க ஆரம்பித்தால் போதும். உங்களிடம் பேனாவும் காகிதமும் இருந்தால் போதும். ஒருவேளை உங்களுக்கு ஒரு கரும்பலகையும் சாக்பீஸும் தேவைப்படலாம்." என்கிறார் ஸ்ரீவாஸ்தவா.

கணிதப் புதிருக்கு விடை காண்பது அவருக்குத் தியானம் செய்வதைப் போன்றது. கணித ஆய்வு என்பது ஒரு கதை அல்லது கவிதை எழுதுவதைப் போன்றது என்கிறார். நாமும் பேனாவும் காகிதமும் எடுத்து கணிதத்தை எழுதத் தொடங்குவோமா?

- கட்டுரையாளர்: தலைமையாசிரியர், ‘சிவப்புக்கோள் மனிதர்கள்’ உள்ளிட்ட சிறார் நாவல்களின் ஆசிரியர்; saran.hm@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x