Last Updated : 19 Aug, 2025 07:56 AM

 

Published : 19 Aug 2025 07:56 AM
Last Updated : 19 Aug 2025 07:56 AM

மாநிலக் கல்விக் கொள்கை 2025: பள்ளிக் கல்வியை வலுப்படுத்த வழிவகுக்கிறதா?

தொடக்கக் கல்வியில் ஆரம்பித்து முதியோர் கல்விவரை உள்ளடக்கி விரிவாகத் தயாரிக்கப்படுவதே கல்விக் கொள்கை. இந்நிலையில், ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 நபர்களைக் கொண்டு 600 பக்கங்களில் வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையின் அறிக்கை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், பள்ளிக் கல்விக்குரியக் கொள்கையை மட்டும் அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. 10 தலைப்புகளின்கீழ் 76 பக்க அளவில் பள்ளிக் கல்வி குறித்த அம்சங்கள் இதில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது பற்றி பள்ளி ஆசிரியர்கள் சிலருடன் விவாதித்தோம்.

பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் அதிகபட்ச ஒட்டுமொத்தச் சேர்க்கை விகிதத்தையும் (GER) பாலினச் சமத்துவக் குறியீட்டையும் தமிழ்நாடு தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இருப்பினும் 3, 6, 9ஆம் வகுப்புகளில் கற்றல் திறன்களை அடைவதில், இடைவெளி உள்ளதைத் தேசிய அளவிலான அசெர் உள்ளிட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. புதிய மாநிலக் கல்விக்கொள்கை இதை ஒப்புக்கொள்கிறது.

புரிதல் தரும் திட்டம்: கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க 2022இல் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பின் நிறைவில் ஒவ்வொரு குழந்தையும் வாசித்தல், அடிப்படை கணிதத் திறனை அடைவதை உறுதிசெய்யவும் கற்றல் பின்னடைவுச் சிக்கலைத் தீர்க்கவும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படும் என்கிறது கல்விக் கொள்கை.

கோவிந்தசாமி

இது தொடர்பாக தருமபுரி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறுகையில், “எந்தக் குழந்தையும் கற்றலில் முழுமை அடையாமல் இருந்துவிடக் கூடாது என்கிற நோக்கில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொடக்கநிலை மாணவர்கள் எழுத்து, சொல், வாக்கியம், பத்தி ஆகியவற்றை வாசிப்பதற்கான பயிற்சிப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பலனாக முன்பைக் காட்டிலும் தற்போது மாணவர்கள் புரிந்துகொண்டு விடை அளிக்கிறார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி ஏடும் கற்பிக்கத் துணை புரிகிறது. திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பதால், காட்சி ஊடகம் மூலம் மாணவர்கள் கற்கும் சூழல் கனிந்திருக்கிறது. மணற்கேணி செயலி இன்னொரு ஆசிரியராக இருக்கிறது.

மாணவர்கள் கூட்டாக இணைந்து பன்முக ஆளுமைத் திறனை வெளிப்படுத்தி தலைமைப்பண்பை வளர்த்துக் கொள்ள ‘மகிழ் முற்றம்’, ‘கலைத்திருவிழா’, மன்ற செயல்பாடுகள் கைகொடுப்பதால் அவற்றை நீட்டிப்பதும் வரவேற்கத்தக்கது” என்றார். மதிப்பீட்டு முறையில் மாறுதல் மதிப்பீட்டு முறையில் உள்ள சிக்கல்களைப் பட்டியலிட்டு, அவற்றில் சீர்திருத்தம் அவசியம் என்கிறது கல்விக் கொள்கை.

ரெ.சிவா

இது பற்றி, கல்விச் செயல்பாட்டாளரும் ஆசிரியருமான ரெ.சிவா கூறுகையில், “மரபார்ந்த மதிப்பீட்டு முறைகள் பெரும்பாலும் மனப்பாட முறையையே சார்ந்திருக்கின்றன. கற்றல் விளைவில் பின்தங்கியிருக்க இதுவே முதன்மையான காரணம். சில ஆண்டுகளுக்கு முன் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை (CCE -சிசிஇ) நடைமுறைக்கு வந்தது. 9ஆம் வகுப்புவரை நடைமுறைக்கு வந்த சிசிஇ திட்டம் நடைமுறைச் சிக்கல்களால் படிப்படியாகச் செயலிழந்தது.

மதிப்பீட்டு முறைகளில் வாழ்க்கைத் திறன்கள், பாடத்திறன்கள் சார்ந்த மாற்றங்கள் தேவை. தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை அனைத்து வகுப்புகளுக்கும் அவசியம். புதிய மதிப்பீட்டு முறைகள், அதற்கேற்ற பாடத்திட்டம், செயல்பாடுகள் வழியே கற்பிக்கும் முறைகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். வகுப்பறைக்குள் எழும் சிக்கல்களுக்குக் கலந்துரையாடித் தீர்வு காணும் வலுவான கட்டமைப்பு அவசியம்.

பாடங்கள், கற்பித்தல் செயல்பாடுகள், கலந்துரையாடல், நூலகம், கலைகள், விளையாட்டு, மன்றச் செயல்பாடுகள், குழந்தைகள் திரைப்படம், போட்டிகள், தேர்வுகள் ஆகியவற்றுக்கான பாட வேளைகளுக்கு ஏற்பப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். உடனடியாக எங்கேனும் எழும் எதிர்மறை விளைவுகள், விமர்சனங்களால் செயல்பாடுகளை நிறுத்திவிடாமல் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

உதயலட்சுமி

பொதுத் தேர்வு முக்கியம்: பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகக் கல்விக் கொள்கை அறிவித்திருப்பது குறித்து காஞ்சிபுரம் பிஎம்எஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆர்.உதயலட்சுமி கூறுகையில், “பிளஸ் 1இல் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் என்பது உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை வெல்லவும், பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் அவசியமான அடித்தளம். அப்படியிருக்க பிளஸ் 1 வகுப்புக்கு உரிய கற்றல் விளைவை மாணவர்கள் அடைந்தார்களா என்பதைக் கண்டறிய புதிய வழிமுறை இல்லாதபோது, தேர்வுச் சுமையைக் குறைப்பதற்காக மட்டும் பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

மற்றபடி வாழ்வாதாரத்துக்கான கருவி மட்டுமல்ல கல்வி எனக் கூறியிருப்பதுடன் நிதியியல்சார் அறிவு, காலநிலைக் கல்வி, உடல்நலம், பாதுகாப்பு விழிப்புணர்வுசார் கல்வி போன்றவற்றை குழந்தைகள் பெற்றிடக் கலைத்திட்டம், பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிட வேண்டும் என்கிற தற்சோதனைகளை கல்விக் கொள்கை பட்டியலிடுவது நல்லதொரு நகர்வு” என்றார்.

எல்லோருக்குமான பள்ளி உள்ளடங்கிய, சமத்துவம் சார்ந்த பிரச்சினைகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி யிருப்பதாக மாநில கல்விக் கொள்கை கூறுகிறது.

சா.கா.பாரதி ராஜா

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட திட்ட அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா. கா.பாரதி ராஜா கூறுகையில், “நுழைவு வாயிலில் நின்று மகளோ மகனோ வரும்வரை காத்திருந்த பெற்றோரைப் பள்ளிக்குள் அழைத்து, பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகத் தேர்வுசெய்து, பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரிப்பில் ஈடுபடவைத்து, பள்ளியின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நடவடிக்கையிலும் ஈடுபடவைத்தது கல்வி உரிமைச் சட்டம்.

பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலோடு பள்ளியின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது, பள்ளி என்பது ஒருவரைச் சார்ந்ததல்ல, எல்லோருக்குமானது என்கிற கருத்தை வலுப்படுத்துகிறது. படித்து முடித்த முன்னாள் மாணவர் களை அழைத்து, பள்ளிக்குத் தேவையான வளங்களைப் பெற ‘விழுதுகள்’ திட்டத்தின் மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் மூலம் ரூ.755 கோடி நிதி முன்னாள் மாணவர்கள், சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் திரட்டப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 7,000 பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சமூக நீதியைப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் நிலைநிறுத்துகின்றன. அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த மாநில கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. 20 உறுப்பினர்களைக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்கள் நால்வரை இணைத்து 24 உறுப்பினராக்கி, வேருக்கு ‘விழுதுகள்’ மேலும் வலுசேர்க்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்றார். புதிய மாநிலக் கல்விக் கொள்கையின் பெரும்பகுதி கடந்த நான்கு ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை விரிவுபடுத்துவது, அவற்றில் உள்ள போதாமைகளைக் களைவது குறித்துப் பேசுகிறது.

குறிப்பாக தற்போது மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக ‘வெற்றிப் பள்ளி’ என்பதாக வட்டாரத்துக்கு ஓர் அரசு பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளில் உள்ள உண்டு-உறைவிட வசதி, 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் முதல்தர உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்குச் சிறப்புப் பயிற்சிகளையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கிறது.

இது தவிர 21ஆம் நூற்றாண்டின் திறன்களை மாணவச் சமூகத்தினர் பெற்று உலக அளவிலான சவால்களை எதிர்கொள்ள அவர்களைத் தயார்ப்படுத்தும் ‘ஸ்டீம்’ (STEAM) போன்ற புதிய திட்டங்களையும் முன்வைத்திருக்கிறது.
மொத்தத்தில், உயிர்ப்புள்ள ஆவணமாக மாநிலக் கல்விக் கொள்கை திகழ, தேவைகளுக்கும் சவால்களுக்கும் ஏற்ப உரிய மாறுதல்கள் அதில் செய்யப்பட்டு அவை முழுமையான செயல்வடிவமும் பெற வேண்டும்.

- susithra.m@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x