Published : 12 Aug 2025 07:54 AM
Last Updated : 12 Aug 2025 07:54 AM
திரைப்படம் ஒன்றில் கதாநாயகன், தான் வன்முறையை விரும்பவில்லை, வன்முறைதான் தன்னை விரும்புகிறது என்பார். அதுபோலவே நம்மை நோக்கி தினமும் வரும் வன்முறை குறித்த செய்திகள் பலவகை. அதிலும் பள்ளிக்கூடங்களில் பதின் பருவத்தினர் நிகழ்த்தும் வன்முறைச் சம்பவங்கள் நம்மை அதிகம் உலுக்கி விடுகின்றன. அண்மையில், பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இடையில், பென்சிலை கடனாக வாங்குவது தொடர்பாக தகராறு மூண்டது.
இதில் சக மாணவர் அரிவாளால் தாக்கியதில் மற்றொரு மாணவர் பல வெட்டுக் காயங்களுக்கு ஆளானார். மாணவர்கள் மத்தியில் சண்டை என்பதெல்லாம் காலங்காலமாக நடப்பதுதான். ஆனால், பள்ளி மாணவர் அரிவாள் கொண்டுவந்து தாக்கியதுதான் பேரதிர்ச்சி! புத்தகப்பையில் அரிவாளில் என்ன வேலை?
உலக நாடுகளில் 13-15 வயதில் ஏறத்தாழ 30 கோடி சிறார் உள்ளனர். இவர்களில் 15 கோடி பேர் பள்ளியிலும் அதைச் சுற்றியும் வன்முறையின் பாதிப்பை அனுபவிக்கின்றனர் என்கிறது யூனிசெப் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு. சிந்தித்துப் பாருங்கள், இரண்டு மாணவர்களில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.
காரணம் என்ன? - தீராத கோபம், கட்டுபாடற்ற நடத்தை, விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் திறனின்மை, முடிவெடுப்பதில் குழப்பம், திரைப்படங்களின் தாக்கம் இவையே முக்கிய காரணங்கள். பாளையங்கோட்டை சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். நண்பனோடு ஏற்பட்ட முரண்பாட்டைப் பேசித் தீர்க்கத் தெரியாமல், ஆயுதத்தை எடுக்க வைத்தது முன்கோபமும், விளைவு பற்றிய புரிதலின்மையும்தான். விளைவு பள்ளியில் ஒழுங்கு நடவடிக்கை, சட்டரீதியான நடவடிக்கைகள். பாதிக்கப்பட்டவருக்கோ உடல் சார்ந்த சிக்கல்கள், மன உளைச்சல், பயம், அதிர்ச்சி. ஒரு வன்முறைச் செயலால் இருபக்கமும் இழப்பு, வருத்தம், பாதிப்பு.
எது வன்முறை? - நம்மில் பலர் ‘எது வன்முறை’ என அறியாமல் இருக்கிறோம். குற்றச்செயல்கள் என அறியாமல் அதில் ஈடுபட்டு பின்னர் வருந்த நேரிடுகிறது. கட்டிப் புரண்டு சண்டையிடுதல், பொருள்களைக் கொண்டு தாக்குதல், கும்பலாக சென்று அடித்தல், மிரட்டுதல், துன்புறுத்தல், ஆகியவை உடல்ரீதியான வன்முறை. பிறரைத் தொடர்ச்சியாக அவமானப்படுத்துதல், சீண்டுதல், உருவகேலி செய்தல், கீழ்மைப்படுத்தி ஒதுக்குதல், தகாத சொற்களில் பேசிக் காயப்படுத்தல் இவை மனரீதியான வன்முறை.
வன்முறையில் ஈடுபடுவது கற்றலைச்சீர்குலைத்துக் கல்வி சாதனைகளைப் பாதிக்கும். நேர்மறை சிந்தனை, செயல்திறன் ஆகியவை பாதிப்படையும். அவமானமும் குற்ற உணர்ச்சியும் மன அமைதியைக் கெடுத்து மகிழ்ச்சியை அழித்துவிடும்.
தவறுக்கு துணைப் போகாதே!
சில எளிய வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது:
1. “தன்னைப் போல் பிறரையும் நினை”. எனக்கு வலித்தால் பிறருக்கும் வலிக்கும். எனக்குப் பிறர் தரும் மரியாதை மகிழ்வைத் தருவது போலவே நானும் பிறரை மதிப்பேன் எனும் அடிப்படையைப் புரிந்துகொண்டால் போதும். நீங்கள் என்றும் பாதை தவற மாட்டீர்கள்.
2. திரை நாயகர்கள் நிஜங்கள் அல்ல. அவர்கள் போதிய பாதுகாப்புடன் திரையில் செய்யும் சாகசங்களை நிஜத்தில் நிகழ்த்திப் பார்த்தல் அறியாமையின் வெளிப்பாடு. மேலும் பிறர் உடலைத் தாக்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது.
3. ஆங்கிலத்தில் “Upstander”, “Bystander” என இரு சொற்கள் உள்ளன. உங்கள் நண்பர் பிறரைத் தாக்கும்போது நீங்கள் அவரைத்
தடுத்து, பாதிக்கப்பட்டவர் பக்கம் துணை நின்றால், நீங்கள் ஒரு Upstander (தட்டிக் கேட்பவர்). அதுவே நண்பனின் தவறைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றால், நீங்கள் ஒரு Bystander (தவறுக்கு துணைநிற்பவர்). எங்கு மாணவர்கள் Upstander ஆகிக் கேள்வி கேட்கிறார்களோ அங்கு வன்முறைக்கு வாய்ப்பே இல்லை.
4. இறுதியாக, நீங்கள் இத்தகு வன்முறையை அனுபவித்தால் அல்லது கண்டால், நம்பகமான பெரியவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது பள்ளி ஆலோசகர்களிடம் உதவி கேளுங்கள். அதீத வன்முறை எண்ணங்கள் உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ தோன்றுவதாக நீங்கள் உணர்ந்தால், அது பற்றிப் பேசி உதவி கேளுங்கள். பதின் பருவம் ஒரு கனாக்காலம். எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், சின்னசின்ன ஆசைகள் எனத் துள்ளித் திரிவதுதான் ஒரு வளமான சமூகத்தின் அடையாளம். அங்கு புத்திக்கு மட்டுமே வேலை. கத்திக்கு என்றுமே வேலை இல்லை.
- சக்தி செண்பகவல்லி | கட்டுரையாளர்: உளவியல் ஆலோசகர், ‘மகிழ் பதின்’ நூலின் இணை ஆசிரியர்; ssakthishenbagavalli@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT