Last Updated : 05 Aug, 2025 07:57 AM

 

Published : 05 Aug 2025 07:57 AM
Last Updated : 05 Aug 2025 07:57 AM

ஊக்கமும் உழைப்பும் இருந்தால் மாநில பாடத்திட்டத்தில் படித்து நிச்சயம் ஐஏஎஸ் ஆகலாம்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவரும் இளையோருடன் சங்கர சரவணன்.

இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகம் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டாலும் இன்றும் மவுசு குறையாத அரசு உத்தியோகம் ஒன்று உண்டெனில் அது குடிமைப்பணி என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகி சமூகத்துக்குப் பங்களிப்பதை தமது வாழ்நாள் கனவாகக் கொண்ட எளிய சமூகப் பிண்ணனியைச் சேர்ந்த இளையோரின் கனவை நனைவாக்க தமிழ்நாடு அரசு நடத்திவரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வராக சங்கர சரவணன் அண்மையில் பொறுப்பேற்றார்.

சங்கர சரவணன்

முன்னதாக, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநர் இவர். இதுதவிர சுய விருப்பத்தில் கடந்த 25 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வு வழிகாட்டியாகச் செயல்பட்டுவருபவர்.

விருது நகர் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றி அண்மையில் சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராகப் பொறுப் பேற்றுள்ள முனைவர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் இவரிடம் பயிற்சி பெற்று குடிமைப்பணித் தேர்வினை வென்றவர்கள். இந்தப் பின்னணியில் சங்கர சரவணனிடம் பேசியதிலிருந்து..

நாட்டின் உயரிய பணி வாய்ப்புகளுள் முதன்மையானதாகக் கருதப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தவிர வேறென்ன பணிகளை யுபிஎஸ்சி தேர்வின் வழியாகப் பெறலாம்? - பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகியவை மட்டுமே அகில இந்தியப் பணிகளில் பரவலாக அறியப்படுகிறது. இதுதவிர மத்திய அரசுப் பணிகளான இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்), வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைக்கு உயர் அதிகாரி ஆவதற்கான இந்தியத் தகவல் பணி (ஐஐஎஸ்), இந்திய ஆடிட்டிங் அக்கவுண்ட்ஸ் சர்வீஸ் என 24 விதமான பணிகள் யுபிஎஸ்சி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களைப் பொறுத்து வழங்கப்படுகின்றன.

எந்த வயதில் பயிற்சியைத் தொடங்க வேண்டும்? - பள்ளியில் 9ஆம் வகுப்பிலிருந்து யுபிஎஸ்சிக்குத் தயாராகத் தொடங்கிவிட்டதாக 22 வயதிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி களானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கல்லூரிப் பருவத்திலிருந்தும் பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் உண்டு. இத்தகை யவர்களுக்கு அவர்களது பெற்றோரே மாபெரும் உந்துசக்தியாக இருக்கிறார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இவ்வாறு தங்கள் குழந்தைகளைச் சிறப்பாக வழிநடத்துகிறார்கள். மறுபுறம் கடைநிலை ஊழியர்கள் அன்றாடம் உயர் அதிகாரிகளைப் பார்ப்பதால் வீரியத்தோடு ஐஏஸ் கனவை தங்கள் குழந்தைகள் மனதில் விதைத்து வெற்றி பெற செய்வதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். மொத்தத்தில் உயர்வை நோக்கிய பயணம் இது.

அன்றாடம் கடைபிடிக்க வேண்டியவை.. நாளிதழ் வாசிப்பு, தொலைக்காட்சி, வானொலியில் செய்திகளைப் பின்தொடர்தல் அவசியம். அதிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள், நாடாளுமன்ற விவாதங்கள், ஐநா சபை நிகழ்வுகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அயல்நாட்டுச் சிக்கல்கள், உள்நாட்டுச் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான செய்திகள், ‘வெற்றிக்கொடி’ போன்ற அறிவை வளர்க்கக்கூடிய பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். ‘விநாடி வினா’ மாதிரியான பொது அறிவுப் போட்டிகளில் பங்கேற்பது நல்லது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்துவரும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களால் எளிதில் வெல்ல முடியுமா? - எட்டு ஆண்டுகளாக மாநில பாடத்திட்டக் குழுவில் பொறுப்பு வகித்தவர் என்கிற இடத்திலிருந்தும் 25 ஆண்டுகளாக ‘யுபிஎஸ்சி’ தேர்வுக்குப் பயிற்சி அளித்துவருபவர் என்கிற நிலையிலிருந்தும் இதை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மாநில அரசு பாடத்திட்டம் எந்த விதத்திலும் மத்திய அரசு பாடத்திட்டத்துக்குக் குறைந்ததல்ல. அதிலும் தமிழ் வழியில் படித்து யுபிஎஸ்சியை வென்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இன்றும் ஆண்டுதோறும் வெல்கிறார்கள். சொல்லப்போனால், தமிழ்நாடு பாட நூல் கழக நூல்களை ஆந்திராவில் பரிந்துரைக்கிறார்கள். டெல்லியில் யுபிஎஸ்சி தேர்வுக்கான விடைகளை வெளியிடும்போதுகூட, “தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்தப் பக்கத்தில் உள்ளது” என்கிற குறிப்புடன் வெளிவருகிறது. அப்படியிருக்க மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தால் வெல்ல முடியாது என்பதொரு மூடநம்பிக்கை. ஊக்கமும் உழைப்பும் இருந்தால் யுபிஎஸ்சியை வெல்ல எந்தப் பாடத்திட்டமும் தடை அல்ல.

மூன்று கட்டங்களாக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வு எத்தகையது? - கொள்குறி வகை பொது அறிவுத்தாள், சிசாட் தாள் என இரு தாள்களைக் கொண்டது வடிகட்டும் தேர்வாக நடத்தப்படும் முதல் நிலைத் தேர்வு. இதில் தேர்ச்சி பெறப் பரந்துபட்ட வாசிப்பு,பொது அறிவு, ஆங்கில மொழித் திறன், புரிதிறன், கணித அறிவு ஆகியவை முக்கியம். அடுத்து, விரிவாக விடையளிக்கும் முதன்மை தேர்வு. மூன்று நிமிடங்களில் ஒரு பக்கம் எழுதும் அளவுக்கு இதற்கு எழுத்துப் பயிற்சி கட்டாயம்.

இதில்தான் உங்களுடைய தனித்திறனை வெளிப்படுத்த முடியும். பொதுஅறிவு சார்ந்து 4 தாள்கள், விருப்பப்பாட அறிவை சோதிக்க 2 தாள்கள், 1 கட்டுரைத் தாள் என மொத்தம் 7 தாள்கள்.

தலா 250 மதிப்பெண்கள் என 1,750 மதிப்பெண்களுக்கான தேர்வு. ஒரு தாளுக்கு 3 மணிநேரம் என்பதாக மொத்தம் ஏழு தாள்கள் 21 மணிநேரம் எழுதக்கூடிய தேர்வு. இதில் பெறும் மதிப்பெண்களே ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்கும். இதுதவிர மொழிப் பாடங்களில் இரண்டு கட்டாயத் தாள்கள் உண்டு. அவற்றில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

குறைந்தபட்சம் 700லிருந்து 850 மதிப்பெண் எடுக்கக்கூடியவர்கள் வடிகட்டப்பட்டு ஆளுமை தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். இதில் உங்கள் பொது அறிவு, தகவல் தொடர்பாற்றல், நலிந்த சமூகப்பிரிவினர் குறித்த அக்கறையோடு நடுநிலையுடன் சிக்கல்களை அணுகும் பண்பு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும். 275 மதிப்பெண்களுக்கான தேர்வு இது.

முதன்மைத் தேர்வு, ஆளுமை தேர்வு ஆகியவற்றில் பெரும் கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே இறுதி வெற்றி வாய்ப்பு அமையும். ஒருவேளை நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிவிட்டால் மீண்டும் தொடக்கத்திலிருந்து எல்லா தேர்வுகளையும் எழுத வேண்டும் என்பதே இதில் உள்ள மிகப்பெரிய சவால். விடாமுயற்சி, தளராத மனப்பான்மை, கடின உழைப்பு ஆகியவற்றை ஒருசேர வளர்த்துக்கொண்டால் மட்டுமே வெற்றி வசப்படும்.

யுபிஎஸ்சியில் வெற்றி பெறப் பல லட்சங்கள் செலவழித்து பயிற்சி மையத்தில் சேர்ந்து தயாராக வேண்டும் என்கிற பொதுப்புத்தி இன்றும் நிலவுகிறது. செலவின்றி பயிற்சி பெற என்ன வழி? - சுயமாகத் தயாராகி யுபிஎஸ்சி தேர்வை வென்றவர்களும் உண்டு. பயிற்சி மையங்களின் வழிகாட்டுதலில் வாகை சூடியவர்களும் உண்டு. பல லட்சங்கள் செலவழித்துத்தான் படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணமாக, ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையுடன் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாநில அரசு வழங்கும் குடிமைப்பணித் தேர்வுக்கான பயிற்சி எத்தகையது? - முதல்நிலைத் தேர்வுக்குப் படிப்பவர்களுக்குச் சோதனை தேர்வு நடத்தி அதில் 1000 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தலா ரூ.7,500 வழங்கப்படுகிறது. யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெல்லும் தமிழக இளைஞர்களில் சென்னையில் 220 பேருக்கு, மதுரை காமராஜர் பல்கலையிலும் கோவை பாரதியார் பல்கலையிலும் தலா 100 பேருக்கு தங்கும் வசதியுடன், ரூ.25,000 ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு முழுநேர பயிற்சி வழங்கப்படுகிறது.

தங்க முடியாதவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பகுதிநேர வேலை செய்பவர்களுக்கும் இணையவழிப் பயிற்சியும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. டெல்லி, மும்பை போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் ஆன்லைன் வழியாக நம்மிடம் பயிற்சி பெறும் தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு.

இந்தாண்டு தமிழகத்திலிருந்து 700 பேர் முதன்மை தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 375 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆவர். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 600 பேர் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற்றுள்ளார்கள். நிதி உதவியைத் தாண்டி பல தனியார் பயிற்சி மையங்களில் உள்ள சிறப்பான பயிற்றுநர்களை அழைத்து வந்து வகுப்பு எடுக்கிறோம் என்பதால் தமிழக அரசு வழங்கும் இந்தப் பயிற்சி உயர்தரமானது.

- susithra.m@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x