Last Updated : 29 Jul, 2025 06:54 AM

1  

Published : 29 Jul 2025 06:54 AM
Last Updated : 29 Jul 2025 06:54 AM

மொழி கற்பித்தலில் உள்ள சவால்களும் சாதிக்கும் ஆசிரியர்களும்

பள்ளி திறந்து நூறு நாட்களுக்குள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் மொழிப்பாடங்களைச் சுயமாக வாசிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும். கணிதத்தில் அடிப்படைச் செயல்பாடுகளைத் தானாகச் செய்ய கற்றிருக்க வேண்டும்.

இந்த நோக்குடன் நூறு நாள் சவால் விடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நேரடிக் கள ஆய்வு நடத்தும் உத்தியைக் கையாண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை முடுக்கி உற்சாகப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்கள், பாடத்திட்டத்தின் அனைத்து நிலைகளிலும், மாணவர்களை வழிநடத்தும் பங்கு வகிக்கின்றனர். முன்பைவிட கூடுதல் கவனத்துடன் எப்படியாவது மாணவர்களை வாசிக்க வைத்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் ஆசிரியர்கள் தற்போது செயல்படுகின்றனர். இதுவும் பாராட்டுக்குரியது.

ஆர்வத்தைத் தூண்ட: மாணவர்களும் இதே துடிப்புடன் மொழியைக் கற்க ஆசிரியர்களும் பெற்றோரும் செய்ய வேண்டியது என்ன? உண்மையில், மொழிப்பாடம் கற்பித்தல் என்பது உயர்ந்த இலக்குகள், கற்றல் நோக்கம் கொண்டவை.

மாணவர்கள் தானாகவும் பிழையற்ற முறையிலும் மொழியைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதற்கு ஆசிரியர், கற்றல் செயல்பாடுகளை வடிவமைத்து, மாணவர்களைக் குழுக்களாக, ஜோடிகளாக, தனிப்பட்ட முறையில் ஈடுபடுத்த வேண்டும். இது மாணவர்களின் சுய கற்றலையும், பங்கேற்பையும் அதிகரிக்கும்.

ஒரு வகுப்பில் 30லிருந்து 40 மாணவர்கள்வரை இருந்தாலும், அவர்களின் பல்வேறு தேவை களைப் பூர்த்தி செய்யும் வகையில் கற்றல் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் ஏன் மொழி கற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் கற்றல் அனுபவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான தெளிவான நோக்கங்களை உருவாக்கி செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும். உதாரணமாக, பாடல், கவிதை, கதைகளை உற்சாகத்துடன் பாடுதல்,வாசித்தல் நல்லதொரு தொடக்கம். பாடலை அல்லது கதைகளை மாணவர்கள் குழுவாகப் பாடுவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டலாம்.

ஒரு படத்தைக் காட்டி, அதைப் பார்த்து ஒரு சொல், ஒரு வாக்கியம் அல்லது ஒரு சிறுகதை கூறச் சொல்லுங்கள். இது படைப்பாற்றலை ஊக்குவிக்க, சொற்பொருள் புரிதலுக்குப் பயன்படும். சொல் விளையாட்டுகள் சுய கற்றலில் முக்கிய பங்குவகிக்கின்றன.

ஒருவர் ஒரு சொல் சொன்னால், அச்சொல்லின் கடைசி எழுத்தால் ஆரம்பமாகும் சொல்லை அடுத்தவர் சொல்ல வேண்டும். உதாரணமாக, குரங்கு, குருவி, விறகு, குளவி, விளக்கு, கும்மி, மிளகு. இதேபோல், ஒரு குறிப்பிட்ட எழுத்தில் ஆரம்பமாகும் சொற்களை ஒருவர் கூற அதற்கு இணையான சொல்லை மற்றொருவர் கூற வேண்டும். உதாரணமாக, அன்னை, அம்மா.

வாசிப்பின் வாசல்: ஒருவர் ஒரு வாக்கியத்தைத் தொடங்குவார். அடுத்தவர் அதைப் பயன்படுத்தி அடுத்த ஒரு வாக்கியம் கூறுவார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு பத்தியை உருவாக்க வேண்டும். இப்படியாக ஒரு சிறுகதை/ கட்டுரை உருவாகும். இது சொல்லாடல் பயன்பாடு, கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்தும்.

வாசிப்பின் பொருள், கருத்தை விரிவாக ஆராயும், கேள்வி-பதில் முறைகள், கதைகளை மீண்டும் சொல்லுதல் அல்லது நடிப்பது போன்ற செயல்பாடுகள் மாணவர்களின் சிந்தனையை மெருகேற்றும். முன்னரே எழுதப்பட்ட ஒரு சிறிய உரையாடலை இரண்டு மாணவர்கள் பேசச் செய்தல். பின்னர், அதே உரையாடலை வேறு குரல்களில் (கோபம், மகிழ்ச்சி, குழப்பம்) பேச முயற்சி செய்யக் கூறுதல்.இது உச்சரிப்பு, உளச்சொல் நுட்பங்களை ஊக்குவிக்கும்.

அதுமட்டுமின்றி, மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துச் சென்று, பல்வேறு வகையான புத்தகங்களை அறிமுகப்படுத்துதல். புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்க ஊக்குவித்தல், வாசிப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.

வீட்டிலும் பள்ளியிலும் ஒருங்கிணைந்து மாணவர்களின் வாசிப்பு பழக்கங்களை வளர்க்கும் நடவடிக்கைகளில் பெற்றோரின் பங்கு முக்கியம். பெற்றோர் வீட்டில் குழந்தை களுடன் கதைகள் படித்தல், பாடல்கள் பாடுதல், சொற்களின் ஒலி விளையாட்டுகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வாசிப்பின் சுவையைக் கூட்டலாம்.

ஆகவே, மொழி கற்றல் என்பது மாணவர்களைச் சுயமாகக் கற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் வழிகாட்டும் பங்கு வகிக்க வேண்டும். இது அவர்களின் மொழி திறன்களை மட்டுமல்ல, வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்தும்.

- கட்டுரையாளர்: தலைமையாசிரியர், ‘சிவப்புக்கோள் மனிதர்கள்’, ‘ஸ்பேஸ்கேம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்; saran.hm@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x