Published : 01 Jul 2025 07:42 AM
Last Updated : 01 Jul 2025 07:42 AM

சிறாரைப் படைப்பாளி ஆக்கும் வாசிப்பு இயக்கம்

ஒரு பூனையும் ஒரு நாயும் ஒரே இடத்தில் வசிக்கின்றன. நாய் எலும்பு குழம்பு சமைக்கிறது. பூனை மீன் சமைப்பேன் என்கிறது. “எலும்பு நல்லாருக்கும் நீயும் சாப்பிடு” என வற்புறுத்துகிறது நாய். பூனை மறுக்கிறது. சண்டை ஆரம்பமாகிறது. “அவங்கவங்களுக்கு பிடிச்சத சாப்பிடுங்க” என முடிகிறது மாணவி பி.ஜஷிகாவின் ‘பிடித்த உணவு’ சிறுகதை.

அடுத்தவர் உணவில் தலையிட வேண்டாம் என்பதை இங்கு அரசியல் பிரச்சினையாகப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு குழந்தை வேடிக்கையாக சொல்லிவிட்டது. இப்படி அரசு பள்ளி மாணவர்கள் எழுதும் அற்புதக் கதைகளைப் புத்தகமாக வடிவமைத்து ‘வாசிப்பு இயக்கம்’ சார்பாக வெளிக்கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.

கதை வாசிக்கும் மாணவர், கதை எழுதும் மாணவராகவும் உருவாக வேண்டும் என்பது ‘வாசிப்பு இயக்க’ நோக்கங்களில் ஒன்று. இத்திட்டத்தின்கீழ் மூன்றாம் கட்டமாக தற்போது வெளியாகியுள்ள 81 கதைப் புத்தகங்களில் 30% மாணவர்களே எழுதியவை.

சக மாணவரும் வாசிக்க.. சிறாரின் அன்றாட வாழ்வை ஒட்டியே கதைகள் உருவாகி இருக்கின்றன. தினந்தோரும் வீட்டுக்கு வரும் ஒரு கொண்டைக் குருவியைப் பற்றி மாணவி தன்யா வர்ஷினி எழுதியிருக்கிறார். மூன்று மாணவர்கள் சேர்ந்து எழுதிய ‘செல்லக்குட்டி மாதுளை’ கதையில் மாதுளைச் செடியோடு மூவரும் பேசுகிறார்கள். இதுபோல குருவி, ஆடு, நாய்க்குட்டி, எலி, யானை, பாம்பு, செடி கொடிகள் என மனிதரல்லாதவற்றைப் பாத்திரமாக்கி எழுதியிருக்கின்றனர்.

பாம்பு பண்ணைக்கு சுற்றுலா போன அனுபவத்தை வரப்பு மேட்டில் உட்கார்ந்து அம்மாவிடம் பேசுவதைப் போல கதை எழுதியிருக்கிறார் மாணவர் சுகனேஸ்வர். ஒரு ரோபோ படம் பார்த்து விட்டு தானும் ரோபோ ஆகி விட்டத்தைப் போல கனவு காணும் பிரவீனாவின் கதை வேடிக்கையாக முடிகிறது.

மாணவர்களுக்கான கதையை அவர்களே எழுதும்போது சக மாணவர் வாசிப்புக்கு அது நெருக்கமாகிவிடுகிறது. படிக்கும்போது பரவசம் உண்டாகிறது. வாசிப்பை பழக்கப்படுத்த நாம் கையில் தரும் புத்தகங்கள் முக்கியமானவை. அதில் சரியானதைக் கண்டடைய மேலும் அவர்களை எழுதவிட வேண்டும்.

வேறுபடும் ஞாயிறுகள்: அரசு பள்ளி மாணவர்களின் வீடு, குடும்பம், பொருளாதார சூழலையும் கதைகளின் பின்னணியில் வாசிக்க முடிகிறது. ஞாயிற்றுக் கிழமை ஆடுகள் மேய்க்கப் போகிறான் ஒரு சிறுவன். ஓர் ஆட்டுக்குட்டி மட்டும் தொலைந்து போகிறது. தேடியலைகிறான். வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறான். கதை தொலைந்த ஆடு கிடைப்பதில் முடிகிறது. ஆனால், மாணவனின் தவிப்பு இங்கு முக்கியமானதாகிறது. படிக்கும் பிள்ளைகளின் ஞாயிற்றுக்கிழமைகள் ஒன்று போலில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

வழக்கமாகப் பொம்மை பற்றிய ஆசையும் பேச்சும் நம் குழந்தைகளிடம் உண்டு. ஆனால், பவதாரணி எழுதிய குதிரைப் பொம்மை கதையில் வேறொன்றையும் பார்க்க முடிகிறது. அதில் வரும் சிறுமியின் அம்மா, பொம்மை செய்பவர். தான் விரும்பிய குதிரைப் பொம்மையை அச்சிறுமியே செய்கிறாள்.

அங்கு ஆசையைத் தாண்டி பொம்மை செய்வதில் உழைப்பும் தெரிகிறது. வகுப்பறையில் தோழியிடம் இரவல் பெற்ற 3 ஸ்ட்ராபெரி பழங்களில் ஒன்றை அம்மாவுக்கு எடுத்துப் போவதைப் பற்றி எழுதியிருக்கிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீ.

சிறாரின் எளிய கதை களுக்கு பின்னால் கனமான அர்த்தங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, மழைத் துளிகள் பேசிக் கொண்டால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்திருக்கிறார் மாணவி ஹரிணி. கட்டடங்களாகிவிட்ட குளம், ஆறு, குட்டைகளைத் தேடி வரும் மழைத்துளிகளின் கேள்வி பாடப்புத்தகங்களில் இல்லாதது. சுற்றுலாப் பயணிகளால் காட்டின் அமைதி கெடுவதைப் பேசுகிறது அன்பு செல்வனின் ‘பூக்களின் அமைதி’.

மாணவர்களை எழுத ஊக்கப்படுத்துவதன் வழி அவர்களின் மன உலகை நாம் வாசிக்க முடியும். அடுத்தகட்ட புத்தகங்கள் 100% மாணவர் படைப்பாக கொண்டுவர சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பள்ளிக் கல்வித் துறை. ‘ஒருவரை படைப்பாளி ஆக்கத் தேவை வாய்ப்பும் அங்கீகாரமும்தான்’ என்பார் கல்வியாளர் ச.மாடசாமி. அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது வாசிப்பு இயக்கம்.

- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், வாசிப்பு இயக்க செயல்பாட்டாளர்; kannatnsf@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x