Published : 27 May 2025 07:25 AM
Last Updated : 27 May 2025 07:25 AM
நீங்கள் எப்போதாவது, சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வளையத்தைக் கண்டிருக்கிறீர்களா? கொளுத்தும் வெயிலில் சூரியனையும் அதனை சுற்றியுள்ள வட்டத்தையும் எப்படி பார்க்க முடியும் என்கிறீர்களா. நாம் தற்போது பேசவிருப்பது விண்ணில் நிகழும் விசேஷமான மயக்கும் நிகழ்வைப் பற்றி. சூரிய ஒளிவட்டம் என்றழைக்கப்படும் இது பார்வையாளர்களைக் கவரும் விண்வெளிக் காட்சி.
சூரிய ஒளிவட்டத்துக்குப் பின்னால் உள்ள அறிவியலை இன்று அறிவோம். வளிமண்டலத்தில் இடைநிறுத்தப்பட்ட பனி படிகங்களால் சூரிய ஒளிவிலகல் செய்யப்பட்டு சிதறடிக்கப்படும்போது ஏற்படும் ஒரு வளிமண்டல ஒளியியல் நிகழ்வுக்குப் பெயர்தான் சூரிய ஒளிவட்டம்.
மெல்லிய, உயரமான அடுக்கு வடிவிலான சிரஸ் அல்லது சிரோஸ்ட்ராடஸ் மேகங்கள் சிறிய பனி படிகங்களால் ஆனவை. அவை பொதுவாக 20,000 அடிக்கு மேல் உயரத்தில் காணப்படுகின்றன. சிரோஸ் ட்ராடஸ் மேகங்கள் ஏற்பட்டால் புயல் வர இருக்கிறது என்றே அர்த்தம். இத்தகைய மேகங்கள் முப்பரிமாண கண்ணாடிபோல செயல்பட்டு, சூரிய ஒளியை வளைத்து ஒளிவட்ட விளைவை உருவாக்குகின்றன.
வண்ணமயமானது: வழக்கமாக வானில் சூரியனைச் சுற்றி தென்படக்கூடியது 22-டிகிரி ஒளிவட்டம் ஆகும். இது இருப்பது சூரியனில் இருந்து 22 டிகிரி கோண ஆரம் என்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டது. சூரிய ஒளி ஒரு குறிப்பிட்ட கோணத்தில், 22 முதல் 50 டிகிரி வரை, அறுகோண பனி படிகங்கள் வழியாக செல்லும்போது இந்த ஒளிவட்டம் உருவாகிறது. ஒளிவட்டம் பெரும்பாலும் வெண்மையாகத் தோன்றும். சில நேரம் உள் விளிம்பில் சிவப்பு, வெளிப்புற விளிம்பில் நீலம் போன்ற வண்ணங்களையும் காணலாம்.
வானிலை குறிகாட்டி: சூரிய ஒளிவட்டங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பூட்டக் கூடியவை. சூரியனைச் சுற்றியுள்ள நுட்பமான ஒளி வளையம் ஆச்சரியத்தை தூண்டும் ஒரு காட்சியை உருவாக்குகிறது. சூரிய ஒளிவட்டத்தைக் காண்பது மறக்க முடியாத அனுபவமாகும். கண்கவர் காட்சியாக இருப்பது மட்டுமின்றி, சூரிய ஒளிவட்டம் முக்கிய வானிலை குறிகாட்டியாகவும் செயல்படுகிறது. புயல் வருகை அல்லது வளிமண்டல அழுத்தத்தில் மாற்றம் போன்ற வானிலை நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை சூரிய ஒளிவட்டம் எடுத்துக் காட்டுகிறது.
சூரிய ஒளிவட்டங்களுக்குள் அறிவியல் ஆச்சரியமும் ஒளிந்திருக்கிறது, பார்க்க பார்க்க பரவசமூட்டக்கூடியதாகவும் இருக்கிறது. அவற்றின் உருவாக்கம், வானிலை குறிகாட்டியாக முக்கியத்துவம், வசீகரிக்கும் தோற்றம் ஆகியவை ஆச்சரியப்படும்படியாக உள்ளது. அடுத்த முறை சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைக் காணும்போது, இந்த வான அதிசயத்தை உருவாக்கும் ஒளி, பனிக்கட்டி படிகங்கள் மற்றும் வளிமண்டல நிலைமைகளின் சிக்கலான தொடர்பைப் எண்ணிப் பார்க்க ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.
- கட்டுரையாளர்: ‘அறிவியல் பலகை’ இதழாசிரியர், சென்னை; bssrikumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT