Last Updated : 11 Mar, 2025 06:37 AM

 

Published : 11 Mar 2025 06:37 AM
Last Updated : 11 Mar 2025 06:37 AM

எப்போதும் தயாராக இருப்போம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நாளில் ஈரோட்டில் தனித்தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் தேர்வு கூட அனுமதி சீட்டு இல்லாமல் தேர்வு மையம் மாறி வந்துவிட்டனர். அங்கு ஆய்விற்காக வந்த முதன்மை கல்வி அலுவலர் மாணவிகளின் விண்ணப்ப எண்ணை வைத்து ஹால் டிக்கெட் அச்சிட்டு கொடுத்துள்ளார்.

மேலும் நேரமாகி விட்டதால் ஆய்விற்காக வந்த அரசு வாகனத்தில் 3 மாணவிகளையும் ஏற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் தேர்வு மையத்தில் கொண்டு சேர்த்துள்ளார். தவறுதலாகத் தேர்வு மையத்திற்கு மாறி வந்த மூன்று தனித்தேர்வர்களை உரிய நேரத்தில் தேர்வு மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் கொண்டு சேர்த்தது, மற்ற தேர்வர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுவாகத் தேர்வுக்கு மட்டுமல்ல சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்பவர்கள் சான்றிதழை விட்டுவிட்டு வந்துவிட்டேன் எனச் சொல்வதுண்டு. விமான நிலையத்திற்குச் சென்ற பிறகு பாஸ் போர்ட்டை விட்டுவிட்டு வந்து விடுவதுண்டு. வீட்டிலிருந்து பணியிடத்திற்குத் தேவையான முக்கியமான ஒன்றை விட்டுவிட்டு வருவதும் இயல்பான ஒன்றுதான். பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இது போன்ற சிறு கவனக் குறைவு ஏற்படுவதைப் பெரும்பாலானோர் சந்திக்கின்றனர்.

தேர்வுக்கு முந்து: தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் பரபரப்பாகத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பு உண்டு என்பதால் தேர்வுக்குத் தேவையானதை ஒரு நாளைக்கு முன்னதாகவே எடுத்து வைத்து விட வேண்டும். ஒரு செயலுக்குத் தேவையானதை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்வது என்பது வெற்றியாளர்களின் பண்பாக இருக்கிறது.

இதற்குப் பெற்றோர்களும் துணை நிற்க வேண்டும். தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்து மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். வாய்ப்பிருப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாக மாணவர்களைத் தேர்வுக் கூடத்துக்கு அழைத்துச் சென்று விடுவதும் அல்லது அதற்கான சரியான ஏற்பாட்டைச் செய்வதும் அவசியம். வெற்றி பெற்ற பலரைப் பார்க்கும்போது அவர்கள் நாளைக்குத் தேவையானதை இன்றே எடுத்து வைத்து விடுவார்கள். இது அன்றைய நாளின் வெற்றிக்கு முன் திட்டமிடல் என்கிறார்கள்.

வெற்றிக்கான ரகசியம்: நாளைய செயல், அடுத்த வார செயல், அடுத்த மாதம் செய்ய வேண்டியது, அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின் என்னவாக போகிறோம் என்பது வரை திட்டமிட்டுச் செயல்படுவது அவசியமாகிறது. தயாராக இருப்பதும் தயாராகி வெற்றி பெறுவதும் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது, முதன்மையானது என்பதால் ஒவ்வொரு நாளையும் வெற்றி நாளாக்க முன்கூட்டியே தயாராவது அவசியம்.

எதற்கும் தயாராக இரு என்பதும் எப்போதும் தயாராக இரு என்பதும் வெற்றிக்கான மிகச்சிறந்த ரகசியம். ஓட்டப்பந்தய வீரர்கள் கோட்டை ஒட்டி பாய்ச்சலுக்கு தயாராக நிற்பதைப் பார்த்திருப்போம். அந்த நொடியில் செலுத்தும் வேகமும் தொடர்ச்சியான ஓட்டமும் இறுதி கோட்டை நெருங்கும்போது எடுக்கும் வேகமும்தான் வெற்றிக்கு வித்திடுகிறது.

நீளம் தாண்டுதலில் விளையாட்டு வீரர்கள் மிக நீண்ட தூரம் ஓடி வந்து இலக்கை தாண்டி வெற்றி பெறுவதைப் பார்க்கிறோம். இதோ ஓராண்டுக் காலம் ஓடி வந்து இறுதி நேரத்தில் தம் உழைப்பை எல்லாம் கவனமாகத் தேர்வில் பதிவு செய்ய வேண்டிய நேரமிது. ஒரு பாடத்துக்கான தேர்வுக்கும் இன்னொரு பாடத்துக்கான தேர்வுக்கும் இடைப்பட்ட காலத்தை வீணடிக்கக் கூடாது. உடல்நலத்தையும் மனநலத்தையும் கவனமாகப் பராமரித்து தேவையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால் வெற்றி வசப்படும்.

அதற்குத் தயாராகிக் கொள்ளுதல் எனும் பண்பை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். எறும்பு முன்கூட்டியே சேமித்து வைப்பதுபோல், விளையாட்டு வீரர் தொடர் பயிற்சி பெற்று தயாராக இருப்பதுபோல், போர் வீரர்கள் களத்தில் தயாராக எப்போதும் இருப்பதுபோல் தயாராக இருந்து தகுதியான மதிப்பையும் மதிப்பெண்ணையும் பெறுங்கள். நாளை என ஒத்திப் போடாமல் இன்றே இப்பொழுதே தயாராக இருப்போம், வெற்றி பெறுவோம்.

- கட்டுரையாளர்: மா.கோவிந்தசாமி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், தருமபுரி; govindasamypgm@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x