Published : 25 Feb 2025 06:27 AM
Last Updated : 25 Feb 2025 06:27 AM

தெளிவாகத் தயாராவோம் 10-ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு!

தேர்வுகளைத் திருவிழா என்று குறிப்பிடுவார் இறையன்பு ஐ.ஏ.எஸ். அந்தத் திருவிழா இதோ தொடங்கி விட்டது. திருவிழா என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அத்தனை மகிழ்ச்சியுடன் அதனை நாம் கொண்டாட வேண்டும். தேர்ச்சி பெறுவதற்கு என்று சில ரகசியங்கள் இருக்கின்றன. அவை ஊர் அறிந்ததுதான். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த பட்சமாகத் தேர்ச்சி மதிப்பெண்கள் பெறுவதற்குக் கேட்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க முயற்சி செய்வது முதல் ரகசியம்.

குறைந்தபட்ச தேர்ச்சி பெற: தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று நீங்கள் எழுதும் எல்லாப் பாடங்களிலும் நீங்கள் 1 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்புவரை படித்தவற்றைக் கொண்டு விடை எழுதும் வகையிலேயே வினாக்கள் கேட்கப்படும். முன் வகுப்புகளில் நடத்தியதை ஞாபகப்படுத்தி எழுதி நீங்கள் வெற்றி பெற்றுவிட முடியும்.

இது இரண்டாவது ரகசியம். உதாரணமாகத் தமிழில் இலக்கணக்குறிப்பு எழுதுதல், சுருக்கி வரைதல், சொந்தமான நடையில் கவிதை எழுதுதல், படிவத்தைப் பூர்த்தி செய்தல், ஒரு பத்தி கொடுத்து அதற்குக் கீழே கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுதல் ஆகியவை நீங்கள் ஏற்கெனவே படித்தவை, படிக்கவில்லை என்றால்கூட சொந்தமாகவே விடை எழுதிவிடலாம்.

தமிழை விடவும் ஆங்கிலம் எளிமையான வினா அமைப்பு கொண்டது. ஒரு பாரா கொடுத்து அதன் கீழ் வினா கேட்கும் வகையில் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும் இதே வகையில் 5 மதிப்பெண்ணுக்கு ஒரு பாராவும், 8 மதிப்பெண்ணுக்கு ஒரு பாராவும் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ள 10-லேயே இருக்கும். இது தவிர ரோடு மேப் எழுதுதல், விளம்பரம் டிசைன் செய்தல், ஒரு படத்தைப் பார்த்து அந்தப் படம் குறித்து எழுதுதல், கடிதம் எழுதுதல் என்று நீங்கள் 6 -ஆம் வகுப்பு முதல் தயார் செய்த வினா விடைகளைக் கொண்டு எழுதி விடலாம்.

கணிதப் பாடம் எப்போதும்போல் ஒரு ஜியாமெட்ரி, ஒரு கிராஃப் என்றாலே 16 மதிப்பெண்கள் கிடைத்து விடுகின்றன. இது தவிர 10 இரண்டு மதிப்பெண் வினாக்கள், 10 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெறுகின்றன. அடுத்து உங்களுக்கு உதவ 14 ஒரு மதிப்பெண் வினாக்கள் இருக்கின்றன.

அறிவியலில் வெப்பவியல், நீர்மவியல், மின்னியல், ஒளியியல், காந்தவியல், தாவர உலகம், விலங்குலகம், தனிமங்கள், சேர்மங்கள், கலவைகள் என்று அனைத்துப் பாடங்களும் ஆறாவது முதலே படித்து வரக்கூடியவையே. அவற்றின் விரிவாக்கமே உங்களுக்கு தற்போது பாடமாக இடம்பெற்றிருக்கிறது.

அந்த வகையில் 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள், 7 மூன்று மதிப்பெண் வினாக்கள், 3 ஏழு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். இவற்றுக்கு எளிதில் விடை எழுதி விட முடியும். செய்முறை தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் கிடைத்து விடுகிறது. எழுத்துத் தேர்வில் 20 மதிப்பெண்கள் எடுத்தால் குறைந்தபட்ச தேர்ச்சிக்குப் போதுமானது.

சமூக அறிவியல் பாடம் எல்லாவற்றையும்விட எளிது. 8-ஆம் வகுப்பில் இருந்து பயிற்சி பெற்று வரும் இந்திய வரைபடம், உலக வரைபடம் இவற்றுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்கும். காலக்கோடு எளிமையான பகுதி. இதற்கு 5 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர், முதலமைச்சர், ஆகியோரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் போன்ற வினாக்கள் திரும்பத் திரும்பக் கேட்கப்படுகின்றன.

இது தவிர காந்தியடிகள், கட்டபொம்மன், வேலூர் புரட்சி, முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், நாட்டு வருமானத்தை அளவிடுதல் போன்ற வினா விடைகள் எளிமையாக இருக்கும். இவற்றைப் படித்துவிட்டால் தேர்ச்சி உறுதி. இன்னொரு ரகசியம் 10 இரண்டு மதிப்பெண் வினாக்களையும், 10 ஐந்து மதிப்பெண் வினாக்களையும் முழுமையாக எழுத முயற்சி செய்திருந்தாலே, உங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் கிடைத்துவிடும்.

முழு மதிப்பெண் பெற! - 100 மதிப்பெண்கள் எடுக்கக் கூடுதல் வினாக்களையும் படித்துவிட வேண்டும். ஏனென்றால் பாடத்தின் உள் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாடப் பகுதியின் உள்ளே இருக்கும் ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதியையும் பெட்டிச் செய்திகளையும் அவசியம் படித்துக் கொள்வது நூற்றுக்கு நூறு பெற உதவும். கட்டாய வினாவுக்கு அவசியம் விடை எழுத வேண்டும், அதைத் தவிர்த்து சாய்ஸில் உள்ள வேறு வினாக்களைத் தேர்வு செய்யக் கூடாது.

பொதுவாக சில: தேர்வில் ஒவ்வொரு விடையையும் எழுதி முடித்தவுடன் அதைக் கோடு போட்டு வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவது, கேட்டிருக்கக்கூடிய இடங்களில் உரியப் படங்கள் வரைவது போன்றவை மூலம் உங்களுக்கு முழு மதிப்பெண் சாத்தியமாகும். கணித வரைபடம், சமூக அறிவியலில் நில வரைபடம், காலக்கோடு ஆகிய வினாக்களுக்கு விடை அளிக்கும்போது சில மாணவர்கள் வினா எண் எழுத மறந்துவிடுவதால் மதிப்பெண் குறைந்துவிடுகிறது.

மேலும் கேட்டிருக்கக்கூடிய அளவுக்கு மட்டுமே வினாக்களைத் தேர்வு செய்து விடை எழுதுங்கள். முக்கியமாக, ஒரு பாடத் தேர்வு எழுதி முடித்தவுடன் அடுத்த தேர்வுக்குத் தயாராகி விடுங்கள். எழுதி முடித்த பாடத்தைப் பற்றி விவாதம் செய்ய வேண்டாம். இன்னொரு நம்பிக்கையைக் கைக்கொள் ளுங்கள். நீங்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் நீங்கள் மேற்கொண்டு படிப்பதற்கு ஒரு கோர்ஸ் கிடைக்கும். எந்த கோர்ஸ் படித்தாலும் அந்தப் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலை கிடைக்கும்.

- கட்டுரையாளர்: அரசு பள்ளி ஆசிரியர், ஆட்சிப் பேரவை உறுப்பினர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்; suriyadsk@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x