Published : 18 Feb 2025 06:29 AM
Last Updated : 18 Feb 2025 06:29 AM
தமிழகத்தில் நடப்பாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை 25.57 லட்சம் மாணவர்கள் இன்னும் சில வாரங்களில் எழுத இருக்கிறார்கள். இளமைக்காலம் என்பது பள்ளி வாழ்க்கையால் நிரப்பப்படுகிறது. இனிமையாக இருக்க வேண்டிய பள்ளி வாழ்க்கை தேர்வுகளால் பதற்றம் நிறைந்த அனுபவமாக மாறிவிடுகிறது.
தேர்வு காலம் நம்மை நோக்கி வரும்போது நமக்கு ஏற்படுகிற மன அழுத்தம் பெரும் விளைவை உண்டாக்கிவிடுகிறது. அதுவே தேர்வை நோக்கி நாம் பயணப்படும்போது முன் தயாரிப்பு நிறைந்த திட்டமிடல் செய்யப்பட்ட ஓர் இனிய பயணமாக அது அமையும்.
இதுதான் பாடப்புத்தகம், வினாத்தாள்கள் இந்த அமைப்பில்தான் வரும், விடைகள் இந்த அளவில் இருந்தால்போதும், விடைகளுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் அளவிடப்படும் என்ற எல்லா தெளிவு முறைகளும் ஓராண்டுக் காலம் பயிற்றுவிக்கப்படுகிறது. இருப்பினும் முழு தேர்வை நெருங்கும் ஒவ்வோர் ஆண்டு இறுதியும் தேர்வு பயம் தொற்று நோயாகப் பரவி மாணவர்களைப் பிடித்தாட்டுகிறது. தேர்வு பயத்தையும் அதனால் உண்டாகும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டு அவற்றை வென்றெடுக்கப் பல எளிய வழிகள் உள்ளன.
விடைகளைத் திருப்புதல்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பருவ கால தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் எனப் பலவற்றை மாதிரியாக எழுதுவார்கள். திருத்தம் செய்யப்பட்ட விடைத்தாள்கள் கிடைத்தவுடன் மதிப்பெண் மட்டுமே அவசியம் என அன்றோடு விடைத்தாள்களை எங்கேயாவது வைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்யாமல் நீங்கள் எழுதிய விடைத்தாள்களை மீண்டும் மீண்டும் திருப்பி பார்ப்பதன் மூலமாக உங்களுடைய பிழைகளை அடையாளம் காண முடியும். இந்த வழிமுறை முழு மதிப்பெண்ணைப் பெறுவதற்கு உதவும்.
சுயபரிசோதனை: எல்லாருக்கும் எல்லாப் பாடங்களும் விருப்ப மானதாக இருப்பது இல்லை. விரும்பிய பாடப் பகுதிகளில் அதிக மதிப்பெண் பெறுவது எளிமையாக இருக்கும். கடினப் பாடப்பகுதிகளில் மதிப்பெண் பெறுவதற்கு சில எளிய வழிமுறை களைப் பின்பற்றலாம். மதிப்பெண் குறையும் வினா பகுதிகள் எவை என்பதை அடையாளம் கண்டு அதில் உற்று நோக்கலை அதிகரிக்க வேண்டும்.
உணவும் உறக்கமும்: இரவு வெகு நேரம் விழித்திருந்து அதிகாலையில் வெகு சீக்கிரமாக எழும் காரணத்தினால் உடலும் உள்ளமும் முழு ஓய்வுக் கிடைக்காமல் இருக்கும். உணவுகள்கூட அலட்சியப்பட்டு உண்ணப்படும் இடைவெளி நேரமாக மாறும். இது மாதிரியான சூழல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் பெற்றோர்களுக்கும் மன அழுத்தம் நிறைந்த காலம்தான்.
பெற்றோர் செய்ய வேண்டிவை: தேர்வைப் பற்றியும் மதிப்பெண்களைப் பற்றியும் மட்டுமே பேசுவதை இக்கால கட்டங்களில் பெற்றோர் சற்றே தவிர்க்கலாம். உங்கள் குழந்தைகள் வாங்கிய மதிப்பெண்ணுக்குரிய கடின உழைப்பைப் பாராட்டலாம். சில பரிசுப் பொருள்களை வாங்கித் தரலாம்.
குழந்தைகள் விரும்பிய விஷயங்களுக்கு இடம் கொடுக்கலாம்.
மற்றவர்கள் விடைத்தாள்களை ஒப்பிட்டு மனச்சோர்வு அடைவதை அடியோடு நிறுத்தலாம். ஒப்பார்க்குழு என்று அழைக்கப்படும் நண்பர்களுக்கு இடைவெளி கொடுக்கலாம். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வாசிப்பது சிறந்த பயிற்சியாக இருக்கும்.
பொருத்திப் பாருங்கள்: விடைகளை மட்டும் வாசித்து மனனம் செய்வதை விட வினாக்களோடு விடைகளைப் பொருத்திப் பார்த்துத் தேர்வுக்குத் தயார் செய்வது நல்ல உத்தி. பொது வினாக்களுக்கு எவ்வாறு விடையளிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நினைவில் நிறுத்த இயலாத கடினப் பகுதிகள் என்ற சிறப்புப் பகுதிகளைச் சிரமம் பார்க்காமல் பலமுறை எழுதியும் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தும் நினைவுக்குக் கொண்டு வந்தும் வெற்றி கொள்ளலாம்.
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற” என்றார் அய்யன் திருவள்ளுவர்.
மன வலிமையே முதல் வெற்றி. தேர்வை நோக்கிய திட்டமிடலை உருவாக்கும்போது மனம் அதற்கான பக்குவத்தை அடைந்து எவ்வளவு பெரிய காரியங்களையும் எளிதாக எதிர்கொள்ளும். தேர்வை நோக்கி நீங்கள் துணிந்து நடைபோட்டால், எதிர்காலம் உங்களை நோக்கி வரும் மாணவச் செல்வங்களே!
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்; agracy5533@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT