Published : 11 Feb 2025 06:37 AM
Last Updated : 11 Feb 2025 06:37 AM
காலநிலை மாற்றம் இன்று உலகை அச்சுறுத்தும் அன்றாடமாகிவிட்டது. அதீத கனமழை, நிலச்சரிவு, வறட்சி, காட்டுத் தீ, நோய் பரவல் எனப் பேரிடர்கள் ஒருபக்கம். வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி போன்ற சமூகப் பிரச்சினைகள் மறுபக்கம். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பல முன்னெடுப்புகள் தேவைப்படுகின்றன.
இத்தகைய முன்னெடுப்புகளில் பள்ளிகளுக்கும் அளப்பறியப் பங்கு இருக்கிறது. ஆனால், 2022-ல் ஐக்கிய நாடுகள் அவை நடத்திய ஆய்வில் 70% மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பள்ளியின் மூலம் ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
அதேபோல 100 நாடுகளின் கல்விக் கொள்கைகளை ஆராய்ந்ததில் 47% கல்விக்கொள்கைகளில் காலநிலை மாற்றம் குறித்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது. இதையடுத்து 2030-க்குள் உலக நாடுகள் அனைத்திலும் 90% கல்விக்கொள்கைகள் சூழலியல் சார்ந்து மாற்றப்பட வேண்டும், குறைந்தது 50% பள்ளிகளை பசுமைப்படுத்த வேண்டும் என ஐநா அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0-ல் தமிழகப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள் அமைப்போம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு. சூழல் மன்றங்கள் குறித்த அறிவிப்பிலேயே காலநிலை கல்வியறிவுக்கென தனிக் கொள்கையை அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும் என முதல்வர் கூறியுள்ளார்.
இதன்மூலம் காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இப்படியாகச் சூழல் மன்றங்கள் பள்ளியையும், சமூகத்தையும் இணைக்கும் பாலமாக அமைய இருக்கிறது. இந்நிலையில் இந்த மன்றங்களை அமைப்பதில் நாம் கவனிக்க வேண்டியவை என்னென்ன?
கல்விக்கொள்கையில் சூழல்: காலநிலை குறித்த முக்கிய அம்சங்களாக ஐநா பரிந்துரைப்பது, காலநிலை அறிவியல், சூழலியல் மற்றும் உயிர்பன்மையம், காலநிலை நீதி, கார்பன் நீக்கப் பொருளாதாரம், நிலையான வாழ்வியல்முறை (Sustainable lifestyle) ஆகியவை ஆகும். சூழல் மன்றங்களைத் தொய்வில்லாமல் இயக்குவதற்குக் கல்விக்கொள்கையை மேற்சொன்ன அம்சங்கள் சார்ந்து அமைப்பது அவசியமாகிறது. இந்தக் கொள்கை பள்ளிகளை அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என்று பிரித்து அதற்கேற்ற தனித்துவ திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
உதாரணமாக, அங்கன்வாடி குழந்தைப் பருவம் புலன்கள் மூலம் சுற்றியிருப்பதை அறியும் குறுகுறுப்பு நிறைந்தது. இவர்களுக்குச் செடிகள் நடுவது, விலங்குகளைப் பார்வையிடுவது போன்ற இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும்போது இயற்கையுடனான உறவு, ஆர்வம், பொறுப்பு ஆகியவை வளர்த்தெடுக்கப்படும்.
அதேபோல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்குண்டான தொடர்பு, நடுநிலைப் பள்ளியில் சூழலியல் நீதி, நிலையான வளர்ச்சி திட்டக் கொள்கைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு, உயர்நிலைப் பள்ளியில் அதற்கு ஏற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அமல்படுத்துதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளைப் பள்ளி அளவில் தொடங்கி, மாணவர்களின் வீடுகள், சுற்றுப்புறங்கள்வரை விரிவுபடுத்தலாம்.
மாணவர்களிடம் கொண்டு செல்ல.. காலநிலை அறிவு உள்ளூர் சூழலியலை மையப்படுத்துவதாக அமைய வேண்டும். உள்ளூர் தாவரங்கள், விலங்குகள், சமூக கட்டமைப்புகள், பண்பாடுகள் ஆகியவற்றின் பார்வையில் முன்னெடுப்புகளை வடிவமைப்பது மாணவர்களுக்கு எளிதில் பிணைப்பை ஏற்படுத்தும். அன்றாடத்தில் நாம் காணும் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை சிறு குறிப்பேட்டில் பதிவு செய்து (Journaling) அதை விவாதிக்க வைக்கலாம். கதையாகச் சொல்லலாம்.
அனுபவ பயிற்சியாக, அருகில் இருக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள், நீர்நிலைகள் போன்றவற்றில் மாணவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம். மாணவர்கள் கற்பித்தலில் ஈடுபடும்போது அவர்களுக்குண்டான புரிதலும் மேம்படும். அதற்கேற்றவாறு விளையாட்டுகள், போட்டிகளை வடிவமைக்கலாம்.
தீர்க்கப்பட வேண்டிய சவால்கள்: தமிழ்நாட்டில் ஏற்கெனவே 2023-ல் பசுமைப் பள்ளித் திட்டம் கொண்டுவரப்பட்டது. பள்ளிகளில் காய்கறி தோட்டம், நீர் மேலாண்மை, ஞெகிழி குறைப்பு போன்ற திட்டங்கள் இதன் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது இந்தத் திட்டம் மேலும் 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எங்கு சூழல் மன்றங்கள் வேறுபட வேண்டியது இருக்கிறது என்பதை அறிவதற்கு நாம் மேற்கூறிய திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள், போதாமைகளை அறிய வேண்டியது இருக்கிறது.
இதுவரை பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூழலியல் முன்னெடுப்புகள் நிலைத்து இயங்காதற்கான தடங்கல்கள் என ஆசிரியர்கள் கூறுவது, ஏராளமான திட்டங்கள் பள்ளியில் அமல்படுத்தப்படுவதால் நேரம் போதாமை. அதேபோல முறையான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாததும் காரணம். இதனால் சூழலியல் மன்றங்களுக்கு எனத் தனித்துவமான குழுக்கள் ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.
அவை தொடர்ச்சியாக இயங்குவதற்குப் பகுப்பாய்வுகளைச் செய்து, அதற்கேற்ற செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். சூழல் மன்றங்களின் முன்னெடுப்புகளைக் கண்காணித்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். இவையெல்லாம் ஏற்கெனவே இருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைத்து இயங்கும் விதத்தில் செய்வதே இந்த மன்றங்கள் சரியாகச் செயல்பட வழிவகுக்கும் என்பதும் ஆசிரியர்கள் கருத்தாக இருக்கிறது.
- கட்டுரையாளர்: சூழலியல், அறிவியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘விடை தேடும் அறிவியல்’, ‘உயிர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; tnmaran25@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT