Last Updated : 31 Aug, 2023 04:30 AM

 

Published : 31 Aug 2023 04:30 AM
Last Updated : 31 Aug 2023 04:30 AM

புத்தகம் எங்களை மாற்றுகிறது

அந்த வகுப்பில் உள்ள அனைவரும் கதைப் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தனர். ஒரு மாணவி கண்களில் மட்டும் கண்ணீர். என்னைப் பார்த்ததும் இன்னும் அழுதாள். " ஏன் அழற?"என்றவுடன் தேம்பி தேம்பி அழுதாள். என்னை பார்க்கும் போது அவள் அம்மா ஞாபகம் வந்துவிட்டது என்றாள். அவள் அம்மா போன்று பேசினேன் என்றாள்.

"உன் அம்மா எங்கமா?" என்றதும், "அம்மா இல்லை, நான் மூன்றாம்வகுப்பு படிக்கும் போது இறந்துவிட்டார்" என்றார். அழுது கொண்டே சொன்னாள். எனக்கும் அழுகை வந்துவிட்டது. "உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும், எப்போது எல்லாம் என்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலும் எனக்கு போன் பண்ணுமா'' என் போன் நம்பர் எழுதிக் கொடுத்தேன்.

குழந்தைகளின் மனது: இனி பள்ளிக்கு வந்ததும் உன்னைத் தான் முதலில் தேடுவேன் என்றதும் சிரித்தாள். அவள் அண்ணனையும் அறிமுகம் செய்தாள். வாசிப்பு இயக்கம் என்று பள்ளிக்குச் செல்லும் போது குழந்தைகளின் மனதை அறியவும், அவர்களோடு பேசி தைரியம் சொல்லவும் முடிகிறது.

"எனக்கும் அப்பா இல்லை. அவர் ஒரு ராணுவ வீரர். நான் பிறந்த 3 மாதத்திலேயே அப்பா இறந்துவிட்டார். என் அம்மா ஓர் மாற்றுத்திறனாளி. நான் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். இப்போது ஆசிரியராக படித்து முடித்ததுள்ளேன். என்னை விட நீங்கள் திறமையானவர்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்பேன்.

உடல் ரீதியான மாற்றம்: "புலியின் நிறம்" கதையைப் படித்த ஒர் எட்டாம் வகுப்பு மாணவி சொன்னாள்: "புலிக்கு காதில் சொன்ன வார்த்தை உடல்ரீதியாக ஓர்மாற்றத்தை ஏற்படுத்துச்சு. அப்படித்தான் இந்தப் புத்தகமும் எங்கள மாத்துது" என்றாள். நான் ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு சென்றேன். தோசை சுட்டுக் கொடுத்த தகவலைச் சொல்ல ஒரு வாரமாக என்னை தேடியதாகச் சொன்னான்.

'ஜாலி சமையல்' பாட்டைப் பாடும்போது வகுப்பே ஒரே ஜாலியாக இருந்தது. கதை வாசிப்புக்குப் பிறகான உரையாடலில் அவர்கள் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை. "படிக்கப்போன பாம்பு'' கதையை வாசித்துவிட்டு, "அக்கா பாம்பு படிக்குமா?" "பாம்பு நடமாடும் இடத்தில் ஏன் பள்ளிக்கூடம் கட்டினாங்க ?"

ரொம்ப சந்தோஷம்: "பாம்பு வாழ இடமே இல்லை. எல்லா பக்கங்களிலும் கட்டிடம் கட்டிவிட்டார்கள் என்ன செய்ய அக்கா?"என்றான் ஒரு மாணவன். ஒரு கதையிலிருந்து இத்தனை கேள்விகள், விளக்கங்கள். ரொம்ப சந்தோசமாக இருந்தது.

மெல்லப் பேசினாள்: "டாக்டர் எலி" இந்தக் கதை புத்தகத்தைப் பார்த்தவுடன் முதலில் ஒரே சிரிப்பு; பின்பு வாசிப்பு. படித்த உடனே அக்கா நாங்கள் நாடகமாக நடித்துக் காட்டுகிறோம் என்று ஒரு கூட்டமே தயாராகிவிடும். அவ்வளவு ஈர்ப்பு இந்தப் புத்தகம் மீது.

பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி அத்தலையில் எட்டாம் வகுப்பு மகாலெட்சுமிக்கு பிறருடன் பேசத் தயக்கம். தனியாக உட்கார்ந்திருந்தாள். அவள் ஒரு சிறப்பு குழந்தை. நான் அருகில் சென்று அமர்ந்தேன். வெல்லக்கட்டி கதையைக் கொடுத்தேன். பக்கங்களைப் புரட்டினாள். படங்களை பார்த்தாள். ஏதோ முணுமுணுத்தாள்.

மெல்ல பேசினாள். அந்தக் கதையைச் சொல்ல முயன்றாள். எனக்குப் புரிந்தது. சிறப்புக் குழந்தைகள் பேசுவதைக் காணக் கண்கோடி வேண்டும். என்னிடம் நன்றாக பேச ஆரம்பித்திருக்கிறாள். "அக்கா நீங்க வரும் போது எனக்கு வளையல் வாங்கி வாங்க" என்றாள். நான் கடந்த வாரம் சென்றேன். அன்று விடுப்பு எடுத்து இருந்தாள் சந்திக்கமுடியவில்லை. மகாவை சந்திக்க மீண்டும் வளையலோடு காத்திருக்கிறேன்.

- கட்டுரையாளர்: வாசிப்பு இயக்கக் கருத்தாளர், மதுரை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x