Published : 25 Feb 2020 10:34 AM
Last Updated : 25 Feb 2020 10:34 AM
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
இந்திய வாழ்வியல் முறை விவசாயம் சார்ந்தது. இயற்கையோடு இயைந்த விவசாய வாழ்வு மனித உடலுக்கும் ஆரோக்கியமானது. ரசாயன கலப்பில்லாத விவசாய விளைபொருட்களுக்கு உலக அளவில் கிடைத்துள்ள வரவேற்பு மறுபடியும் விவசாயத்தின் பக்கம் வெளிச்சம் வீசியுள்ளது.
மென்பொறியாளர்கள் தங்கள் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் குதிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. மண்ணும் மண்சார்ந்த வாழ்வும் உங்கள் நெஞ்சுக்கு நெருக்கமானதெனில் வேளாண்மை தொடர்பான படிப்பை படித்து பெருமைமிகு விவசாயியாக வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்
இந்திய அளவில் வேளாண் துறை சார்ந்தகல்வி மற்றும் ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் அமைப்பு ‘இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம்’ (Indian Council of AgriculturalResearch-ICAR). இந்த ஐ.சி.ஏ.ஆர், இந்தியஅரசின் அங்கமான வேளாண்மை மற்றும்விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாகத்தில் இயங்கும் தன்னாட்சி அமைப்பு ஆகும். இந்தியாவிலுள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் இந்த அமைப்பின் வழிகாட்டுதலில் உள்ளன.
விவசாய படிப்புகள் என்னென்ன?
இளம் அறிவியல் (B.Sc -Hons ) என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை,உணவு-ஊட்டச்சத்து-உணவு விதிமுறை ஆகிய படிப்புகளில் சேரலாம்.
இளநிலை தொழில்நுட்பம் (B.Tech) பட்டப்படிப்பில், வேளாண்மைப் பொறியியல், உணவு தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் (Energy and Environmental Engineering) ஆகிய பாடங்களைப் படிக்கலாம்.
இளம் அறிவியல் படிப்பில் சேர்வதற்கு, 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களைப் படித்திருக்க வேண்டும். கணித பாடம் படித்தவர்கள் இளநிலை தொழில்நுட்பப் படிப்பிலும், இளம் அறிவியல் (உணவு-ஊட்டச்சத்து-உணவு விதிமுறை) படிப்பிலும் சேரலாம்.
எங்கு படிப்பது?
தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகம், வேளாண்மை தொடர்பான படிப்புகளைவழங்குகிறது. திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இப்பல்கலைக்கழகத்தின் 14 கல்லூரிகள் உள்ளன. இவை மட்டுமின்றி தமிழகத்தில் 27 அங்கீகரிக்கப்பட்ட தனியார் வேளாண் கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்துகிறது. (http://tnau.ac.in/ugadmission.html)
பிற மாநிலங்களிலுள்ள வேளாண் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து படிக்கலாம். இதற்கான அகில இந்திய தேர்வை ஐ.சி.ஏ.ஆர். (ICAR- All India Entrance Examinations for Admission -UG) அமைப்பு நடத்துகிறது.
வேலைவாய்ப்பு
வேளாண் படிப்பை முடித்த பிறகு விவசாயியாகி பயிர்களை விளைவிக்கலாம். அது மட்டுமல்லாமல், வேளாண் துறை சார்ந்த பல வேலைவாய்ப்புகளும் உள்ளன. அரசுத்துறைகளில் வேளாண் அதிகாரி ஆகலாம். உரத்தொழிற்சாலைகள், விதைநிறுவனங்களில் பணியாற்றலாம். வங்கிகளில் வேளாண் கடன் அதிகாரியாகவும், வேளாண்மை தொடர்பான சொந்தத் தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆகலாம்.
வானம் பார்த்த தொழிலான விவசாயத்துறையில் வானம் வரையிலும் வாய்ப்புகள் உண்டு.
(தொடரும்)
கட்டுரையாளர், ‘விண்ணும் மண்ணும்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT