Published : 21 Feb 2020 10:47 AM
Last Updated : 21 Feb 2020 10:47 AM
கவிதா நல்லதம்பி
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மலர், “அன்பு அக்காவுக்கு இந்தத் தங்கையின் சிறிய பரிசு” என்று சொல்லியவாறு, தன் கையில் இருந்த புத்தகத்தை மதியிடம் கொடுத்தாள்.
மதி: இன்னைக்கு என்ன சிறப்பு மலர்? புத்தகத்தை எங்க வாங்கின ?
மலர் : அக்கா, பள்ளியில் இருந்து புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. பிடிச்ச புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கச் சொன்னாங்க. நான் உனக்காக இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.
மதி: நன்றி மலர். அப்ப இன்னைக்கு வகுப்பு இருந்திருக்காது.. ஒரே மகிழ்ச்சியா..
மலர்: இல்லக்கா, மதியம்தான் கண்காட்சிக்குப் போனோம். காலையில வழக்கம்போல வகுப்புகள் நடந்துச்சு.
மதி: நான்காம் வேற்றுமை உருபை நடத்தி முடிச்சிட்டாங்களா?
மலர்: ஆமாக்கா. நான்காம் வேற்றுமை உருபு 'கு'. அதைக் கொடை வேற்றுமைன்னு கூடச் சொல்வாங்களாம்.
மதி: வகுப்பில நடந்ததை நினைவு வச்சிருக்கியான்னு பார்க்கலாமா, நான்காம் வேற்றுமை உருபு என்னென்ன பொருள் தரப் பயன்படுதுன்னு சொல்லு பார்க்கலாம்.
மலர்: கொடை, நட்பு, பகை, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை போன்றபொருள்களைத் தர வரும். எடுத்துக்காட்டுடன் சொல்லணும்னா கொடைப் பொருளுக்கு எடுத்துக்காட்டு சொல்றேன். கொடைன்னா வழங்குதல் என்று பொருள் தரும் எல்லாமும் அடங்கும். அம்மா குழந்தைக்கு உணவூட்டினார். அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியது.
மதி: நீ என்னிடம் பேசியதுலகூட இந்தக் கொடைப் பொருளுக்கு எடுத்துக்காட்டு இருக்கே
மலர்: உன்கிட்டப் பேசும்போது எப்பவும் கவனமா இருக்கணும்னு புரியுது. சொல்லவா, அன்பு அக்காவுக்குத் தங்கையின் பரிசு.
மதி: சரியாச் சொல்ற மலர். பகை, நட்பு என்கிற இரண்டுக்கும் எடுத்துக்காட்டுகளைச் சொல்லி விளக்குறயா?
மலர்: எலிக்குப் பூனை எதிரி, தம்பிக்கு அக்காவைப் பிடிக்காது.. இந்த இரண்டு தொடர்கள்ல எலி என்ற பெயருடன் இடம்பெறுகிற ’கு’-வும், தம்பிக்கு என்பதில் இடம்பெறும் ’கு’-வும் யாருக்கு யார் பகை என்பதை உணர்த்தப் பயன்படுது. இதே போல எனக்கு நண்பன் அகிலன். இதில் நட்பென்னும் பொருளை உணர்த்த வருது.
மதி: மலர், அதுவாதல்னா என்ன?
மலர்: சிற்பத்திற்குக் கல்லெடுத்தார்கள். குழம்புக்கு வாங்கிய மீன். இங்கு கல் சிற்பமாதல் என்கிற நிலை.இதை அதுவாதல்னு சொல்வோம். மீன் குழம்பாதல். சரியாக்கா. இதைமுதல் காரணப் பொருள்னும் சொல்வாங்க.
மதி: முறைப் பொருள்னு ஒன்னு சொன்னயே
மலர்: ஆமாக்கா, இவருக்கு இவர் இன்னாருன்னு சொல்றது தானே முறை சொல்லிப் பேசுறது. அதுக்கும் 'கு' என்கிற உருபுதான் பொருள் தருது. அப்பாவுக்கு அத்தை. தங்கைக்கு மகள். இது உறவுப் பொருளைக் குறிக்க, அதாவது முறையைக் குறிக்கப் பயன்படுது.
மதி: காரணப் பொருள்னா ?
மலர்: அதாவது ஒரு செயலுக்கான காரணத்தைச் சொல்ல, அதாவது எதன் பொருட்டுன்னு சொல்வதற்கும் 'கு' என்கிற உருபுதான பயன்படுது. எடுத்துக்காட்டா சொல்லணும்னா, குழந்தைக்குப் பொம்மை வாங்கினான், கூலிக்கு வேலை செய்தான். இதுல இந்த வேலையைச் செய்வதற்கான காரணமும் வெளிப்படுது இல்லையா.
மதி: சரி மலர், நான் தேர்வுக்குப் படிக்கணும். இதோட தொடர்ச்சியை பிறகு பேசுவோம் சரியா! (மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT