Published : 14 Feb 2020 11:11 AM
Last Updated : 14 Feb 2020 11:11 AM
கவிதா நல்லதம்பி
மதி: மலரே மலர்களோட வருதே... என்ன சிறப்பு?
மலர்: என் பிறந்தநாளுக்காக ரேவதி தன் கையால் செய்த காகித பூங்கொத்துக்கா
மதி: ரொம்பவே அழகாக இருக்கு.ரேவதிகிட்ட என் வாழ்த்துகளைச் சொல்லு.
மலர்: சொல்றேன். இன்னைக்கு கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருள்னு இலக்கணவகுப்பு கொஞ்சம் கடினமா இருந்துச்சுக்கா. உன்கிட்ட எளிமையாக் கேட்டுப் புரிஞ்சுக்கலாம்னு வந்தேன்.
மதி: சொல்லு மலர், உனக்கு என்ன தெரியனும் - மூன்றாம் வேற்றுமை உருபைப் பற்றிப் பேசும் போதுதானே கருவி, கருத்தா எல்லாம் வருது. அதைக் கருவி வேற்றுமைன்னுதான் சொல்வாங்க. மூன்றாம் வேற்றுமை உருபுன்னா என்ன, அந்த உருபு எந்தெந்தப் பொருள்ல பயன்படுதுன்னு சொல்லு பார்க்கலாம்.
மலர்: அக்கா, ஒரு பெயர்ச் சொல்லைக் கருவியாக, கருத்தாவாக, உடனிகழ்வாகப் புரிந்துகொள்ள உதவுவதுதான் மூன்றாம் வேற்றுமைன்னு ஆசிரியர் சொன்னாங்க. ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை மூன்றாம்வேற்றுமை உருபுகள். இதுல ஆன் என்கிறஉருபை நாம அதிகம் இப்பப் பயன்படுத்துறதில்ல இல்லையா..
மதி: கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருள்னா என்னன்னு தெரிஞ்சிட்டா போதும்.
மலர்: நீ ஒரு எடுத்துக்காட்டோட சொல்லேன்.
மதி: ரேவதி கொடுத்த பூங்கொத்தைப் பத்தி நீ என்ன சொன்ன, அதைச் சொல்லு.
மலர்: காகிதத்தால செஞ்ச பூங்கொத்து, ரேவதி கையால செய்ததுன்னு சொன்னேன்.
மதி: இதுல எது கருவி, துணைக்கருவி?
மலர்: காகிதத்தால் செய்த பூங்கொத்து. இதுல காகிதம் கருவி. கையால் செய்தது. கையால் என்பது துணைக் கருவி. அப்படிதானேக்கா.
மலர்: கருத்தாவுக்கு எடுத்துக்காட்டு சொல்லேன். அதுலயும் இரண்டு இருக்காமே. கருத்தான்னா ஒரு செயலைச் செய்பவர்தானே.
மதி: ஆமாம் மலர். இயற்றுதல், ஏவுதல்னு இரண்டு விதமாக கருத்தாவைச் சொல்வாங்க. ஒரு செயலைத்தானே செய்வதற்கும், இன்னொருத்தரை வைத்து செய்வதற்கும் வேறுபாடு இருக்கில்லையா. கட்டடத் தொழிலாளர்கள் பாலத்தைக் கட்டினர். அரசு பாலத்தைக் கட்டியது. இந்த இரண்டு தொடர்களிலும் இருக்கிற வேற்றுமை புரியுதா?
மலர்: கட்டடத் தொழிலாளர்கள்தான் பாலத்தைக் கட்டினார்கள். இதில் தொழிலாளர்கள் தாமே அந்தச் செயலைச் செய்தார்கள். அதனால தொழிலாளர்கள் இயற்றுதல் கருத்தா. அரசு பாலத்தைக் கட்டியது. இதுல அரசு நேரடியாப் பாலத்தைக் கட்டல. தான் செய்யாம, தொழிலாளர்களைக் கொண்டு கட்டுவிக்கச் செய்தது. இதில் அரசு என்பது ஏவுதல் கருத்தா. சரியா சொன்னேனா?
மதி: ஆல், ஆன் என்னும் உருபுகள் கருவி, கருத்தா என இரண்டு விதப் பொருள்களைத் தரவும் பயன்படும். எதனால் செய்யப்பட்டது? யாரால் கட்டப்பட்டது?
மலர்: இப்ப புரியுதுக்கா. உடனிகழ்ச்சிப் பொருள்னு சொன்னியே..
மதி: ஓர் எழுவாயின் செயலோட, இன்னொன்றும் உடன் நிகழ்வது தான் உடனிகழ்ச்சிப் பொருள். எடுத்துக்காட்டைச் சொன்னால் உனக்கு எளிதாகப் புரியும். தந்தையோடு தங்கை வந்தாள், அன்னையோடு அறுசுவை போகும். இங்க ஒடு, ஓடு எனும் உருபுகள் எழுவாயோடு சேர்ந்து யாருடன் எனும் வினாவிற்குப் பதில் தருது இல்லையா. இதைத்தான் உடனிகழ்வுன்னு சொல்வாங்க.
மலர்: பசிக்குதுக்கா. சாப்பிடுவோம். மற்ற வேற்றுமை உருபுகளைப் பற்றி நாளைக்குப் பேசுவோமா.
கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT