Published : 07 Feb 2020 12:00 PM
Last Updated : 07 Feb 2020 12:00 PM

தித்திக்கும் தமிழ்-12: ஐ என்றால்... அழகு மட்டும்தானா?

‘என்னோடு நீ இருந்தால், உயிரோடு நான் இருப்பேன்' மதி பாடியவாறு புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

மலர்: என்னக்கா பாட்டுச் சத்தம் பலமா கேட்குது... சித்ராம் ரொம்ப நல்லாப் பாடியிருக்காருல்ல. ஆனா என்ன படம்னு மறந்திருச்சே.

மதி: ஐ...

மலர்: ‘ஐ’ங்கிற எழுத்துக்கு என்னென்ன பொருள், ஏற்கனவே நாமபேசியிருக்கோம். நான் சொல்றேன். நீ சரியா இருக்கான்னு சொல்லுக்கா..

மதி: சொல்லு மலர். உன் நினைவாற்றலைப் பார்ப்போம்.

மலர்: ஐந்து, அழகு, தலைவன், அரசன், ஐயம், ஒரு வேற்றுமை உருபு அதாவது அசை.

மதி: அருமை மலர். சிறப்பான நினைவாற்றல். ‘ஐ’ என்கிற வேற்றுமை உருபைப் பற்றிதான் நேத்துப் பேசத் தொடங்கினோம்.

மலர்: ஆமாம். நீ எப்படியாவது சுத்திப் பாடத்துக்கு வந்திருவ. இரண்டாம் வேற்றுமை உருபு என்னனென்ன பொருள்ல வருதுன்னு பார்க்கணும். அதானே..

மதி: ஒரு பெயர்ச் சொல்லின் பொருளை, செயப்படு பொருளா வேறுபடுத்திக் காட்டுறதுதான் இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’.

மலர்: நேத்துப் பார்த்தோமே. நிலா படத்தை வரைந்தாள். இதுல நிலாங்கிறது எழுவாய். படம்ங்கிற பெயர்ச்சொல் ‘ஐ’ என்கிற வேற்றுமை உருபை ஏற்றதினால செயப்படுபொருளாக வேறுபட்டிருக்கு.

மதி: நீ ரொம்ப சரியாச் சொல்ற.. இந்த ‘ஐ’, ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்று ஆறு விதமான பொருள்கள்ல வரும்.

மலர்: ‘ஐ’ என்கிற ஒரு எழுத்து இத்தனை பொருள்ல பயன்படுதா?

மதி: ஆமாம் மலர். எடுத்துக்காட்டுகளோட பார்த்தா உனக்கு எளிமையாப் புரியும்.

மலர்: ஆக்கல்னா ஒன்றை உருவாக்குதல் தானே..

மதி: ம்.. அரசு அருங்காட்சியத்தை உருவாக்கியுள்ளது. இங்கு அருங்காட்சியகம் என்ற பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபைஏற்றதனால செயற்பொருளா மாறியிருக்கு. ஆக்கல் என்னும் பொருளைத் தருது.

மலர்: இப்ப அழித்தலுக்கு நான் எடுத்துக்காட்டு சொல்றேன். பெருநிறுவனங்கள் காடுகளை அழித்தன. இங்க காடுகள் ‘ஐ’ என்னும்உருபை ஏற்று செயப்படுபொருளா மாறியிருக்கு. எதை அழித்தது? காடுகளை அழித்தது. இப்படி அழித்தல் என்னும் பொருளைத் தரப் பயன்பட்டிருக்கு.

மதி: மலர், நீ சரியாப் புரிஞ்சு,எளிமையா விளக்குற. அடுத்ததையும் நீயே சொல்லேன்.

மலர்: வீரர்கள் கோட்டையை அடைந்தார்கள். எதை அடைந்தார்கள்? கோட்டையை அடைந்தார்கள். இதுல அடைதல் என்னும் பொருள் வருது. நீத்தல்னா, ஒன்றை விடுதல் தானே?

மதி: ஆமாம். மாமா கோபத்தை விட்டார். கோபத்தை நீக்கினார் என்ற பொருளைத் தர ‘ஐ’ உதவுகிறது.. சரி, ஒத்தல் என்றால்..

மலர்: ஒப்புமைப் படுத்திப் பேசுறது. எடுத்துக்காட்டை நானே சொல்றேன். கண்மணி தாயைப் போன்றவள். யாரைப் போன்றவள் தாயைப் போன்றவள்னு ஒப்புமைப்பொருள்ல ‘ஐ’ வந்திருக்கு. சரிதானேக்கா.

மதி: மிகச் சரி.. உடைமைப் பொருள் பற்றிச் சொல்லலாமா?

மலர்: நானே சொல்றேன்.. கண்மணி செல்வத்தை உடையவள். செல்வம் கண்மணிக்கு உடைமையானது. இங்கே உடைமைப் பொருள் சரியா?

மதி: இப்ப மூன்றாம் வேற்றுமை உருபான ஆல் பற்றிப் பேசுவோமா?

மலர்: ஆல் மட்டுமில்லை.. இன்னும் சில உருபுகள் இருக்கு ஆன், ஒடு, ஓடு என்ற மூன்றும்கூட மூன்றாம் வேற்றுமையைக் குறிக்கும் உருபுகள்தான். ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருது.

மதி: சிறப்பு. நாளையும் பேசலாம் மலர். வேற்றுமைகளைப் பற்றி.

கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை. கவிதா நல்லதம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x