ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
ஹெலிகாப்டரின் பிரதான விசிறியின் திருகு விசைக்கு (Torque) எதிராக ஹெலிகாப்டரின் உடலில் எதிர்த் திருகு விசை (Anti Torque) செயல்படும். இதனால் பிரதான விசிறி எந்த திசையில் சுற்றுகிறதோ. அதற்கு எதிர்த் திசையில் ஹெலிகாப்டரின் முழு உடலும் சுற்ற ஆரம்பிக்கும் என்று பார்த்தோம். வால் விசிறியின் (Tail Rotor) மூலமாக எதிர்த் திருகு விசை சமன் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்து கொண்டோம்.
வால் விசிறி இல்லாத ஹெலிகாப்டர்கள் உண்டு. அவற்றில் எதிர் திருகு விசை இல்லையா? எதிர் திருகு விசை இருக்கும். வால் விசிறி இல்லாத ஹெலிகாப்டர்களில் இரண்டு பிரதான விசிறிகள் இருக்கும். விசிறிகள் அருகருகிலோ அல்லது ஒன்றன் மீது ஒன்றாகவோ இருக்கும். எப்படி இதில் எதிர் விசை சமாளிக்கப்படுகிறது? விசிறிகள் எதிரெதிர் திசைகளில் சுழலும். இதனால் ஒன்றின் திருகு விசை மற்றதின் திருகு விசையினால் சமன் செய்யப்படும்.
ஹெலிகாப்டரில் பாராசூட்
விமானங்களில் செல்லும் பயணிகளும் விமானிகளும் அவசர காலங்களில் பாராசூட் மூலம் தப்பிப்பது வழக்கம். ஹெலிகாப்டர்களில் பாராசூட் பயன்பாடு மிகவும் அரிது. ஏன்?
பாராசூட்டை பயன்படுத்தி பத்திரமாக தரையிறங்க உயரம் மிக முக்கியம். பயணி விமானங்கள் ஏறக்குறைய 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். போர் விமானங்கள் அதைவிட உயரத்தில் பறக்கும். ஆனால் ஹெலிகாப்டர்கள் ஏறக்குறைய 10 ஆயிரம் அடி உயரத்தில்தான் பறக்கின்றன. பறக்கிற விமானங்களை, ஹெலிகாப்டர்களை தரையில்இருந்து நாம் பார்க்கும் போதே அவற்றின் உயர வித்தியாசங்களை நம்மால் கணிக்க முடியும்.
அவசர காலங்களிலும் விமானம் சமநிலையில் சீராக பறப்பதால் பாராசூட்டை அணிந்துகுதிக்க நேரமும் வசதியும் இருக்கும். ஆனால்,ஹெலிகாப்டர்கள் அப்படி சமநிலையில் இருப்பதில்லை. மாறாக அதிக குலுக்கல் சுற்றல்களோடு இருக்கும். எனவே, பாராசூட்டை அணிந்து குதிக்கும் சூழ்நிலை இருப்பதில்லை.
தடுக்கும் விசிறி
அதிவேகமாக பறக்கும் போர் விமானத்தில் இருந்து விமானியால் தப்ப முடிகிறதே, அதேபோல ஹெலிகாப்டரில் முடியாதா? போர் விமானத்தில், அவசர காலத்தில் விமானி இருக்கையோடு மேல் நோக்கி வீசப்படுவார். பிறகு இருக்கையில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் மூலம் தரையிறங்குவார். ஹெலிகாப்டரில் அந்த நுட்பம் ஒத்துவராது. ஏனெனில் விமானியின் தலைக்கு மேலே பிரதான விசிறி சுழன்று கொண்டிருப்பதால் மேல்நோக்கி விமானியால் தப்பிக்க முடியாது. பின் எப்படி ஹெலிகாப்டரில் இருந்து தப்புவது?
நமது வீடுகளில், விசையை அணைத்த பிறகும் மின்விசிறி தொடர்ந்து சுழலுவதை கவனித்திருப்பீர்கள். இந்த நுட்பம்தான் ஹெலிகாப்டரை சில விபத்துகளில் இருந்து காப்பாற்றுகிறது. எப்படி?
(தொடரும்)
கட்டுரையாளர்: ஹெலிகாப்டர் பற்றி முதல் தமிழ் நூலான ‘எந்திரத் தும்பிகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
WRITE A COMMENT