தேவிகாபுரம் சிவா
உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய முன்னோடி சூழலியல் விஞ்ஞானி ரேச்சல் கார்சன்.
கடந்த 1907 மே 27-ம் நாள் அமெரிக்காவில் ஸ்பிரிங்டேல் என்ற சிற்றூரில் பிறந்தார். இயல்பிலேயே இயற்கை ஆர்வலராகவும், விலங்குகள், பறவைகள், காடுகள் குறித்து அறிந்தவராகவும் இருந்தார் ரேச்சலின் தாய் மரியா. ஆகையால், அதே மனப்பான்மையை மகள் ரேச்சலுக்கும் ஊட்டி வளர்த்தார். சிறுவயதிலேயே எழுத்துத் திறமை மிக்கவராக ரேச்சல் திகழ்ந்தார். பத்து வயது இருக்கும் போதே அவர் எழுதிய கதை ‘செயிண்ட் நிக்கோலஸ்’ என்ற இதழில் பிரசுரமானது.
படிப்புக்கு இடையூறு வறுமை
பள்ளிப் படிப்பை சிறப்பாக முடிந்த பிறகு பிட்ஸ்பர்க் நகரத்தின் பென்சில்வேனியா மகளிர்கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பட்டப் படிப்பில்சேர்ந்தார். ஆனால், அவரது ஆர்வம் உயிரியல் மீது இருந்ததால் பாடப் பிரிவை மாற்றிக் கொண்டார். சிறப்பாக படித்த போதும் 1600 டாலர்கள் கல்விக்கடன் இருந்ததால் அவருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குடும்ப சொத்தை அடைமானம் வைத்து கல்விக்கடனை அடைத்தார்.
1929-ல் பட்டம் பெற்று பால்டிமோர் ஜான் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை விலங்கியல் படிப்பில் சேர்ந்தார். அன்றைய காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு விடுதி வசதிகூட இல்லை. இதனால் ரேச்சல் தன் பேராசிரியை மேரி என்பவருடன் தங்கிப் படித்தார். 1932-ல் உயர்ந்த மதிப்பெண் உடன் முதுகலை பட்டம் பெற்றார். ஆனால், பணப் பற்றாக்குறையால் முனைவர் பட்ட ஆய்வை பாதியில் கைவிட்டார்.
அமெரிக்க மீன்வளத் துறையில் பகுதிநேர வேலையில் சேர்ந்தார். பொதுமக்களிடம் வானொலி நிகழ்ச்சி மூலம் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வேலை. இதை உற்சாகமாகச் செய்தார். ‘அட்லாண்டிக் மன்த்லி’ இதழில் ரேச்சலின் ‘ஆழ்கடல்’ என்ற கட்டுரை வெளிவந்தது. எழுதுபவர் பெண் என்று தெரிந்தால் ஆணாதிக்க சமூகம் தன் எழுத்தின் முக்கியத்துவத்தை கண்டுகொள்ளாது என அஞ்சி ஆர்.எல்.கார்சன் என்ற புனைபெயரில் பல இதழ்களில் எழுதினார்.
தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து ‘கடல் காற்றின் கீழே’ (Under the Sea-Wind) என்ற தன்னுடைய முதல் புத்தகத்தை 1941-ல் வெளியிட்டார். ‘காட்டுயிர்களின் வீடு தான் நமக்கும் வீடு என்பதை உணராமல் காட்டுயிர்களை அழித்துக்
கொண்டே இருக்கிறோம்’ என ரேச்சல் இந்த நூலில் குறிப்பிட்டார்.
வெற்றி பெற்ற புத்தகம்
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ரேச்சலின் ஆய்வு பூச்சிகொல்லி மருந்துகள் பக்கம் திரும்பியது. குறிப்பாக 'டைக்குளோரோ டைஃபீனைல் ட்ரைகுளோரோஈத்தேன்' (DDT) என்ற பூச்சிகொல்லி மருந்தை தெளிப்பதால் நேரும் அபாயங்களை ரேச்சல் ஆய்வு செய்யத் தொடங்கினார். இந்த ஆய்வின் இடையே 'நம்மை சுற்றியுள்ள கடல்' (The Sea Around Us) என்ற நூலை 1951-ல் வெளியிட்டார். புத்தகம் வெளிவந்த நான்கு மாதங்களில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. புத்தக விற்பனையில் கிடைத்த உரிமத்தொகை ரேச்சலின் பண நெருக்கடியை போக்கியது.
அதன் பிறகு முழு நேரம் எழுத்திலும் ஆய்விலும் கவனம் செலுத்தினார்.
1955 -ல் கடல்சார் அறிவியல் குறித்து ‘கடலின் விளிம்பில்' (The Edge of the Sea) என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மண்ணியல், தொல்லுயிரியல், உயிரியல், மனித வரலாறு என பல துறைகளின் விவரங்களோடு, வியக்கத்தக்க ஆளுமையோடும் அறிவாற்றலோடும் கடல் குறித்த மேற்கண்ட மூன்று நூல்களையும் ரேச்சல் எழுதியிருந்தார். எழுதியவர் ஒரு பெண் என்பதை அமெரிக்க அறிவாளிகளால் நம்பமுடியவில்லை!
தனது கருத்துக்களை உலகம் காதுகொடுத்து கேட்கிறது என்பதை உணர்ந்த ரேச்சல் மீண்டும் DDTயால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வில் இறங்கினார். ஆய்வு முன்னோக்கிச் செல்லச்செல்ல ரேச்சல்ஒரு ஆய்வாளராக மட்டும் இல்லாமல் செயற்பாட்டாளராகவும் மாறிக் கொண்டிருந்தார்.
சூழலியலின் புரட்சி நூல்
பாடும் பறவையான ராபின்களின் எண்ணிக்கை வேகமாக அமெரிக்காவில் குறைந்து வந்தது. ராபின்களின் முக்கிய உணவு மண்புழுக்கள். DDT மருந்து தெளிப்பால்மண்புழுக்கள் அழிந்துபோக உணவு கிடைக்காத ராபின்களும் அழிந்துபோகின்றன என ரேச்சல் விளக்கினார். அதேபோல் 1950களில் செய்யப்பட்ட அணு ஆயுதச் சோதனைகளால் கதிரியக்கப் பொருளான ஸ்ட்ரோண்டியம்-90 வளிமண்டலத்தில் கலந்தது. இதனால் எலும்பு புற்றுநோயையும், ரத்தப் புற்றுநோயும் ஏற்பட தொடங்கியது. இந்த விவரங்களை எல்லாம் சேகரித்து அசைக்க முடியாத ஆதாரங்களுடன் 'மௌன வசந்தம்' என்ற நூலாக1962- ல் வெளியிட்டார்.
தமிழ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ‘மௌன வசந்தம்' நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருபது லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. மெளன வசந்தத்தின் கடைசி வரி இது தான்: 'பூச்சிகளை நோக்கி எறியப்படும் ஆயுதங்கள் நிலத்தை நோக்கி எறியப்படும் அழிவுச் சாதனங்கள்'. அத்தனையும் மனிதர்களுக்கே என்று சுயநலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களை பூவுலகை மையமாக வைத்து சிந்திக்கத் தூண்டியவர் ரேச்சல் கார்சன்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
WRITE A COMMENT