பருவநிலை போராளியான சிறுமி கிரேட்டா தன்பர்க் கடந்த நவம்பர் 20 அன்று ஐநா சபையில் கௌரவிக்கப்பட்டது உலகம் அறிந்த செய்தி. அதே வேளையில் உலக அமைதிக்காக பாடுபடும் சிறுவர்களுக்கான விருது இன்னொரு சிறுமிக்கு வழங்கப்பட்டது. உலக அமைதிக்கான செயல்பாட்டிற்காக ஐநா விருது பெற்ற அந்த இளம்பெண் டிவினா மலோம். இவருக்கு வயது 15.
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் டிவினா.
கேமரூனில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வன்முறையாளர்களின் படைகளில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்களும் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுஆயுதம் தாங்கி போரிடப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு அஞ்சி வீட்டை விட்டு ஓடி எங்கேயோ கண்காணாத இடத்துக்குச் சென்ற அந்நாட்டுசிறுவர்கள் ஏராளம். பலர் பயங்கரவாதத்திற்குப் பலி கொடுக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதிலும் வசிக்கும் சிறுவர்கள் இப்படிப்பட்ட வன்முறைக்கு ஆளாவதைக் கண்டு பொறுக்க முடியவில்லை டிவினோவிற்கு.
படிக்கும் வயதில் பயங்கரவாதமா?
கையிலே நோட்டு புத்தகங்களுடன் பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக நூற்றுக்கணக்கான சிறுவர்கள் துப்பாக்கிகளை ஏந்தி உயிர்ப் பலியாவது டிவினோவை மிகவும் பாதித்தது. இதற்காக தான் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டார். ‘அமைதிக்கான குழந்தைகள்’ என்ற இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்தின் மூலம் சிறுவர்கள் தான் இனி உலக அமைதிக்கான செய்தியை பரப்ப வேண்டும் என்றார். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை தன்னுடைய இயக்கத்தில் இணைத்து மக்களிடம் உரையாடினார்.
100 அடிப்படை உறுப்பினர்கள் கொண்டு கேமரூன் நாடு முழுவதும் செயல்பட டிவினா ஆரம்பித்தார். குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வியை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று முழங்கினார். பெற்றோர் தைரியமாக குழந்தைகளைப் படிக்க அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கேமரூன் பலவித மொழிகளைப் பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு. அவர்களிடம் வன்முறைக்கு எதிரான பரப்புரையை
கொண்டு செல்லும்போது அவர்களுக்கு புரியும் வகையிலே அதை செய்ய வேண்டும் என்று டிவினா எண்ணினார்.
கார்டூன் மூலம் பரப்புரை
வார்த்தைகளால் பேசுவதைவிட கார்ட்டூன் சித்திரங்கள் மூலமாகக் குழந்தைகள் படும் அவதிகளை வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று திட்டமிட்டார்.நிறைய கார்ட்டூன் கதைகளை உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு சேர்த்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கார்ட்டூன் படங்களை கொண்டக் கதைகளையும், வன்முறைக்கு எதிரான பரப்புரைகளையும் உருவாக்கி நாடு முழுவதும் பரவச் செய்தார்.
தான் படித்த பள்ளி மட்டுமன்றி, ஆதரவற்ற குழந்தைகள் தங்குமிடங்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழந்தைகள் வசிக்கும் பகுதிகள் என்று பல பகுதிகளுக்கு தன்னுடைய கார்ட்டூன் கதைகளுடன் பயணம் செய்தார். இவருடைய விடாமுயற்சியினால் சிறுவர்கள் பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுவது வெகுவாக குறைந்துள்ளது.
குழந்தைகளின் சக்தி மகத்தானது. அவர்களுக்கு நாம் அதைப் புரியவைக்க வேண்டும் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சந்தித்தார்.
இப்படி சிறு வயதிலேயே ஒரு இளம்பெண் நூற்றுக்கணக்கான சக வயது சிறுவர்களை இணைத்து கேமரூன் நாட்டின் பல இடங்களில் 'அமைதிக்கான குழந்தைகள்' என்னும் அமைப்பை உருவாக்கிபயங்கரவாதத்துக்கு எதிரான பரப்புரையை துணிச்சலாக மேற்கொண்டு வருவதும், ஒவ்வொரு ஆண்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அமைதி கல்வியைப் போதிப்பதும் மகத்தான சாதனைதானே!
கட்டுரையாளர்:
பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்
WRITE A COMMENT