ஐம்பொறி ஆட்சி கொள் 7- நல்லவர்கள் வேண்டும் நாட்டுக்கு!


ஐம்பொறி ஆட்சி கொள் 7- நல்லவர்கள் வேண்டும் நாட்டுக்கு!

முனைவர் என்.மாதவன்

ஒரு நாள் மாலை நேரம். நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு செல்லவேண்டும். நீண்ட நாட்களாகவே நினைவுறுத்த சொன்ன திருமணம். அவரது துணைவியாரும் நினைவுபடுத்துகிறார்.

வீட்டிலிருக்கவும் முடியாமல், கிளம்பவும் முடியாமல் அந்த நபர் தவிக்கிறார். ஒரு வழியாக அவரது துணைவியார் விவரத்தைக் கணிக்கிறார். தன்னிடம் இருக்கும் பணத்தை அவரிடம் அளித்து திருமணத்திற்கு செல்லச் சொல்கிறார். உடனடியாக அந்த நபரும் கிளம்புகிறார். மணமக்களை வாழ்த்திவிட்டு திரும்புகிறார். “என்னிடமோ ஒரு காசு கூட இல்லை. மாதக்கடைசி. உன்னிடம் மட்டும் எப்படி பணம் இருந்தது?” என்று துணைவியாரைப் பார்த்து கேட்கிறார்.

சம்பளத்தை குறைக்கவோ, கூட்டவோ!

“நீங்கள் மாதாமாதம் வீட்டுச் செலவுக்கு அளிக்கும் பணத்தில் மீதமுள்ளதை சேர்த்து வைத்தேன். அதுதான் நமக்கு உதவியது” என்கிறார் அவரது துணைவியார். “ஓ அப்படியா! எவ்வளவு மீதமாகிறது?” என்று உணர்ச்சி பொங்கக் கேட்கிறார். ஏதோ ஒரு
தொகையைக் (சுமார் இரண்டு ரூபாய் என வைத்துக்கொள்வோமே) கூறுகிறார்.

அவ்வளவுதான் மறுநாள் தனது அலுவலகத்தை அடைந்தவுடன் உடனடியாகக் கணக்காளரை அழைக்கிறார். தமக்கு இந்த மாதம்
முதலே இரண்டு ரூபாய் குறைவாகச் சம்பளம்அளிக்கும்படி கூறுகிறார். இது மட்டுமல்ல தனது பதவிக்குப் பின்னர் தமது ஓய்வூ
தியம் அனைத்தையுமே பேரிடர் நிவாரணநிதியில் சேரும்படி செய்துவிடுகிறார்.

இத்தனை பெருமைக்கும் காரணமானவர் வேறு யாருமல்லர். சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பதவியை அலங்
கரித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களே. பொதுவாழ்க்கையில் இருப்பது என்பது பொதுவாக ஒரு வாழ்க்கை வாழ்வதல்ல. முன்னுதாரணமாக வாழ்வது என்பதற்கான இலக்கணமாக பலர் திகழ்ந்திருக்கின்றனர்.

முன்மாதிரி மனிதர்கள்

கல்விக் கண் திறந்த காமராசர் ஒரு முறைஅவரது அன்னையைச் சந்திக்க செல்கிறார்.வழக்கத்திற்கு மாறாக தமது வீட்டிற்
குள்ளேயே நகராட்சித் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை அறிகிறார். உடனடியாக அன்னையிடம், “இணைப்புக்காக பணம்
செலுத்தியுள்ளீர்களா அம்மா?” என்று கேட்கிறார். அவரது தாய், “நான் எங்கே அப்பா பணம் கட்டினேன். வயசாயிடுச்சில்லே வாசலில் போய் தண்ணீர் பிடிக்க கஷ்டமாயிருக்குன்னு நகராட்சிக்காரங்க போட்டுக் கொடுத்தாங்க” என்கிறார். உடனடியாக தொடர்புடையவரை அணுகி அந்த குழாயைக் கழற்றி மறுபடியும் வாசலில் இருந்த இடத்திலேயே இணைப்பை நிலைநிறுத்தி வைக்கிறார். ஒரு முதலமைச்சரின் அன்னையாக இருந்தாலும் சலுகை பெறுவது தவறு என முன்மாதிரியாய் நிற்கிறார்.

இவை எல்லாம் வரலாற்றில் பதிந்துள்ள சம்பவங்கள். இவ்வாறான நற்குணங்கள் நம் அனைவரிடமும் பொதிந்திருக்கிறது. அவற்றை உரிய நேரத்தில் சரியான விதத்தில் நாமும் வெளிப்படுத்தவேண்டும். அதே போல நல்லவர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தில் தீமைகள் குறைய வேண்டுமானால் நாம் நல்லவராவதைத் தாண்டி வேறு வழி உண்டா என்ன சொல்லுங்கள்!

கட்டுரையாளர். பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

FOLLOW US

WRITE A COMMENT

x