கவிதா நல்லதம்பி
பள்ளியில் இருந்து மாலை வீடு திரும்புகிறாள் மலர். அவளுடைய அக்கா மதி வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவளுடன் பேசுகிறாள்...
மலர்: அக்கா, உன்னுடைய அலைபேசியில்பகிரலையைச் சிறிது இயக்குகிறாயா. என்னுடையதில் இணைய சேவை முடிந்துவிட்டது.
மதி: என்ன மலர், வீட்டுக்கு வந்ததும் என்னை வம்பிழுக்கத் தொடங்கிட்டாயா?
மலர்: இல்லக்கா. உண்மையாவே நானும் நல்ல தமிழ்ல பேசிப் பார்க்கலாம்னுதான். முன்னாடி நீ சொன்னதுபோல தூயதமிழ்ல பேச முடியலேன்னாக்கூட, எனக்குத் தெரிஞ்சஅளவுக்குத் தமிழ்லயே பேசலாம்னு நினைக்கிறேன்.
மதி: மலர் நீ பேசறதக் கேட்க எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? உன்னுடைய முயற்சியில நானும் கைகோர்க்கலாம்னு நினைக்கிறேன்.
மலர்: சிறப்புக்கா. ஆமாம் நாம தனித்தமிழ் பத்திப் பேசிக்கிட்டிருந்தோம்ல. இன்னும் சொல்றியா, ஆர்வமா இருக்கேன்.
மதி: உன்னோட இந்த ஆர்வம் எனக்கு மகிழ்ச்சி தருது மலர். நானும் நிறையப் படிக்கணுங்கிற எண்ணத்தைத் தருது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதின கால்டுவெல், தமிழ் மொழிதான் மற்ற திராவிட மொழிகளின் தாய்; அதோட சமஸ்கிருதச் சொற்கள் ஏதும் இல்லாமலேயே தமிழால தனிச்சு இயங்கவும் வளரவும் முடியுங்கிற கருத்தையும் முன்வைச்சாரு. அதைத் தொடர்ந்துதான் தனித்தமிழ் இயக்கச் சிந்தனையும் வலுப்பெறத் தொடங்கிச்சாம்.
மலர்: அக்கா, திராவிட மொழிகளின் தாயா? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றியா?
மதி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் பண்பட்ட திராவிட மொழிகளாம். தமிழ் மொழிதான் மற்ற திராவிட மொழிகளுக்கு வேராக இருக்குன்னு சொல்றாங்க.
மலர்: ஓ.. அதனாலதான் இந்த மொழிகளுக்குள்ள நிறைய ஒற்றுமைகள் இருக்கு. நிறையச் சொற்களும் பொதுவா இருக்கு.
மதி: சரியா சொன்ன மலர். இப்படி மற்ற மொழிகளுக்கும் வேராக இருக்கிற ஒரு மொழிக்கு வேற்று மொழிச் சொற்களின் துணை வேண்டியதில்லையே.
மலர்: தனித்தமிழ் இயக்கத்தைப் பத்திப் பேசும்போது பரிதிமாற் கலைஞர், மறை மலையடிகள்னு இரண்டுபேரைச் சொன்னாயே..
மதி: ஆமாம் மலர், அவங்கதான் தனித்தமிழ் இயக்கத்தோட முன்னோடிகள்.
மலர்: இவங்களுடைய இயற்பெயரே இந்தப் பெயர்கள் தானாக்கா? ரொம்பவே தனித்துவமா இருக்கே.
மதி: சரியான கேள்வியைத்தான் கேட்கிற. மறைமலையடிகள், பரிதிமாற் கலைஞர் ரெண்டு பேருமே தங்களோட பெயரைத் தனித் தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்றாற்போல மாத்திக்கிட்டாங்க. மறைமலை அடிகளோட இயற்பெயர் வேதாசலம். வேதம் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் மறை. அசலம் என்ற சொல்லுக்கு நல்ல தமிழ்ச்சொல் மலையாம். அதனால தன்னோட பெயரை மறைமலைன்னு மாத்திக்கிட்டாராம்.
மலர்: அப்ப பரிதிமாற்கலைஞரோட பேரு?
மதி: அவரோட இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி. இவரைத் தனித்தமிழ் இயக்க வழிகாட்டின்னு சொல்வாங்க. சூரியனுக்கு இணையான சொல் பரிதி, நாராயணனுக்கு மால், சாஸ்திரின்னா கலைஞர். அதனால தன்னோட பெயரை மாத்தி, பரிதிமாற்கலைஞர்னு வைச்சுக்கிட்டாராம்.
மலர்: இவங்களுக்குத் தமிழ் மேல எந்தளவுக்கு ஈடுபாடு இருந்தா, பெயரைக்கூட இப்படி மாத்திக்கிட்டிருப்பாங்க. ஆமாக்கா, இந்த இயக்கத்தோட செயல்பாடுகள் என்னவா இருந்துச்சு?
மதி: தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பேசறது, எழுதறது, நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்கிறது, தமிழ்ல வழக்கத்தில இருக்கிற பிறமொழிச் சொற்களுக்கு மாற்றா நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துறது, தூய தமிழ்ல இதழ்களை நடத்தறது, திருமணச் சடங்குகளைத் தமிழ் முறைப்படி நடத்திவைக்கிறது போன்ற பணிகளை அந்த இயக்கம் முன்னெடுத்துச்சு.
மலர்: சரிக்கா, இதைப் பற்றிப் பேசறதுக்கு ரொம்பவே ஆர்வமா இருக்கு. நேரமாச்சு. வீட்டுப்பாடம் எழுத வேண்டியிருக்கு. இன்னொரு நாள் தனித்தமிழ் இயக்கம் பத்தி நிறையப் பேசுவோம்.
(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியை.
WRITE A COMMENT