ஆர். ரம்யா முரளி
கடிகார முட்களுடன் போட்டிப் போட்டு ஓட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய குழந்தைகள் உள்ளனர். மனமும் உடலும் சோர்வடையாமல் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். இரண்டில் ஒன்று தளர்ந்து போனாலும், எண்ணிய இலக்கை அடைவது கடினம்.
நாள் முழுக்க நம்மை உற்சாகமாக வைத்திருக்கக் கூடிய வழிமுறைகளில், யோகப் பயிற்சி ஆகச் சிறந்த ஒன்றாகும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராகப் பாயும் போது அனைத்து உறுப்புக்களும் அதன் இயக்கங்களை ஒழுங்காக செய்யும். உடல் முழுக்க ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யக்கூடிய உத்தானாசனம் பற்றி பார்ப்போம்.
உத்தானாசனம் செய்வது எப்படி?
ஆரம்ப நிலையில், இரண்டு கால்களையும் சற்று தள்ளி வைத்து நேராக நிற்கவேண்டும். பிறகு மூச்சை நன்கு இழுத்தபடி கைகளை முன்புறமாகத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். ஒரு விநாடி இந்த நிலையில் இருந்து விட்டு, பிறகு மூச்சை விட்டபடி முன்புறமாகக் குனிந்து கைகளைப் பாதத்திற்கு அருகே வைக்க வேண்டும். முடிந்தவர்கள் கால்களை மடக்காமல் நிலையாக வைக்க வேண்டும்.
புதிதாக செய்பவர்களும், முடியாதவர்களும் முட்டியைச் சற்று மடக்கிக் கொள்ளலாம். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு மெல்ல மூச்சை இழுத்தபடி உடலை உயர்த்திக் கொண்டே பழைய நிலைக்கு வர வேண்டும். மூச்சைவிட்டபடி இயல்பு நிலைக்கு வர வேண்டும். இது ஆரம்பநிலை யோகாசனமாக இருந்
தாலும், யோகா பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி செய்வது நல்லது.
உத்தானாசனம், உடல் வலியைப் போக்குவதோடு, முதுகு மற்றும் தண்டுவடத்தை வலுவாக்கும். இடுப்பு எலும்புகள் வலுப் பெறுவதுடன், அவற்றின் சீரான இயக்கத்திற்கும் உதவி செய்யும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், மனம் புத்துணர்ச்சி அடையும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், உடல் உறுப்புக்கள் நல்ல நெகிழ்வு தன்மையுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
WRITE A COMMENT