தேவிகாபுரம் சிவா
‘ஜெர்மனிக்கு சொந்தமான மேரி கியூரி' என ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் போற்றப்பட்டவர் லீஸ் மெயிட்னர். இயற்பியல் விஞ்ஞானியான இவர்தான் அணுவை பிளக்க முடியும் என்று நிரூபித்தார். அணுக்கரு பிளவு (nuclear fission) என்ற சொல்லைத் தந்தவரும் இவரே.
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் 1878 நவம்பர் 7-ம் நாள் லீஸ் மெயிட்னர் யூத குடும்பத்தில் பிறந்தார். சிறுவயது முதல் அறிவியல், கணிதம், இசை மூன்றிலும் பேரார்வம் கொண்டவராக விளங்கினார். எனினும் அப்போதைய ஆஸ்திரியாவில் பெண் கல்விக்கு எதிரான சூழல் இருந்தது. தடைகளைக் கடந்து தனது 22 வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
1901-ல் வியன்னா பல்கலைக்கழக பட்டப் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பில் சேர்ந்த முதல் பெண் இவரே. வெப்பக் கடத்தல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1906-ம் ஆண்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஆராய்ச்சிக்கு வந்த அச்சுறுத்தல்அக்காலத்தில் அறிவியலாளர்களின் ஆடுகளமாக விளங்கிய நாடு ஜெர்மனி. லீஸ் ஜெர்மனி சென்று பெர்லின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார்.ஒட்டோ ஹான் எனும்வேதியியல் விஞ்ஞானியை சந்தித்தார். 1912-ல் புதிதாக உருவாக்கப்பட்ட கய்சர் வில்ஹெம் வேதியியல் கழகத்தில் இருவருக்கும் வேலை கிடைத்தது. இருவரும் ஒன்றாக இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர். முதல் உலகப்போர் குறுக்கீடுசெய்ய போரில் பாதிக்கப்பட்ட வீரர்களின் மருத்துவத்துக்காக எக்ஸ் கதிர் கருவிகளை இயக்கும் சேவையில் லீஸ் ஈடுபட்டார். போர் முடிந்தாலும் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இனவெறி வளர்ந்து வந்தது.
1932-ல் ஜேம்ஸ் சாட்விக் நியுட்ரானை கண்டுபிடித்தார். மின்னூட்டம் இல்லாத துகளான நியுட்ரானைக் கொண்டு அணுக்கருவை மோதினால் என்ன ஆகும்என்ற ஆய்வில் லீஸ், ஒட்டோ ஹான்,ஃபிரிட்ஸ் ஸ்ட்ராஸ்மான் ஆகிய மூவரும் இணைந்து ஈடுபட்டனர். ஆராய்ச்சி முக்கிய கட்டத்தில்இருந்த போது ஹிட்லர் யூத இனமக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார். யூதரான லீஸ், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்தார். 1938 மார்ச் மாதம் ஜெர்மனி ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தது. லீஸ், இனியும் நாஜிக்களிடம் இருந்து தப்பி உயிர்வாழ வாய்ப்பு இல்லை என அறிந்து, பெரும் வேதனையோடு ஸ்வீடனுக்கு தப்பிச் சென்றார்.
ஸ்டாக்ஹோம் நகரில் மேன் சீக்பான் இயற்பியல் கழகத்தில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கிருந்தபடியே பெர்லினில் இருந்த ஒட்டோ ஹானுடன் ரகசியமாகத் தொடர்பு கொண்டு ஆய்வுகளை வழிநடத்தினார்.
அணுக்கரு பிளவு கண்டுபிடிப்பு
யுரேனியத்தின் அணுக்கருவை மிதவேக நியுட்ரானைக் கொண்டு தாக்கும் போது அது வேறு இரண்டு தனிமங்களாக உடைவதை லீஸ், ஹான், ஸ்ட்ராஸ்மான் ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இதற்கான இயற்பியல்- கணிதவியல் கோட்பாட்டை ஒட்டோ ஹானால் விளக்க முடியவில்லை. இந்நிலையில், கணிதத்தில் மேதையாக விளங்கிய லீஸ் தன் கணக்கீடு மூலம் யுரேனியம் பிளவுபட்டு பேரியமாகவும் கிரிப்டானாகவும் மாறுவதையும் இந்த இரண்டின் அணு எடை, பிளவுக்கு உட்பட்ட யுரேனியத்தின் அணு எடையைவிடக் குறைவாக இருந்ததையும் அந்த எடை இழப்பு ஆற்றலாக மாற்றப்பட்டுவிட்டதையும் கண்டுபிடித்தார். சோதனை முடிவுகளும் கணக்கீடுகளும் ஐன்ஸ்டீனின் E = mc2 சமன்பாட்டுக்கு சரியாகப் பொருந்தியது.
ஹான் செய்த துரோகம்
தன் ஆய்வு விவரங்களை, ஒட்டோ ஹானை ஒரு ரகசிய இடத்தில் சந்தித்து நேர்மையுடன் பகிர்ந்து கொண்டார் லீஸ். ஆனால் ஹான், லீஸ் பெயரைக் குறிப்பிடாமல் தன் ஆய்வுக் கட்டுரையை 1939 ஜனவரியில் வெளியிட்டுவிட்டார். லீஸ் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மனம் உடைந்துபோனார். லீஸ், ஒட்டோ ஃபிரிஷ் உடன் இணைந்து 1939 பிப்ரவரியில் புகழ் பெற்ற நேச்சர் அறிவியல் ஆய்விதழில் அணுக்கரு பிளவு குறித்து இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
லீஸ் மெயிட்னர்-ஒட்டோ ஹானின்
இயற்பியல் ஆராய்ச்சிகளை அடிப்படையாக வைத்து ஜெர்மனி அணுக்குண்டு தயாரிக்கஉள்ளது என்பதை அமெரிக்கா அறிந்து கொண்டது. தான் முந்திக்கொள்ள வேண்டும் என்ற வேகத்தோடு அணு குண்டு தயாரிக்கும் 'மன்ஹாட்டன் திட்டத்தை' அது 1942-ல் தொடங்கியது. 1945-ல் அணுக்குண்டைத் தயாரித்தும் விட்டது.
ஜப்பான் மீது அணுக்குண்டு
1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அணுக்குண்டை வீசியது. லட்சக்கணக்கில் மக்கள் வெந்து சாம்பல்ஆகினர். நகரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பல ஆயிரம்பேர் கதிர்வீச்சு தாக்குதலால் நிரந்தரமாகமுடமாயினர். ஆகஸ்ட் 9 அன்று இதேபோல் நாகசாகி நகரம் அழிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
போருக்கு பின் உலகம் லீஸ் மெயிட்னரை கொண்டாடியது. விருதுகள் பல வழங்கியது. 1946-ல் லீஸ் அமெரிக்கா சென்றபோது அங்குள்ள ஊடகங்கள், 'அணுக்குண்டின் அன்னை' என அவரை வரவேற்றன! ஆனால். லீஸ் தன் வாழ்நாள் முழுதும் அணு ஆயுதத்திற்கு எதிராகவே இருந்தார்.
இந்த இயற்பியல் தாரகை 1968 அக்டோபர் 27-ல் லண்டனில் 90 வயதில் இறந்தார். இவரது கல்லறையில் 'மனிதத்தை தொலைக்காத இயற்பியலாளர்' எனப் பொறிக்கப்பட்டது. 1982-ல் அணு எண் 109 கொண்ட தனிமம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அதற்கு இவர் நினைவாக மெயிட்னீரியம் (Mt) எனப் பெயரிட்டு அறிவியல் உலகம் அகமகிழ்ந்தது.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
WRITE A COMMENT