முனைவர் என்.மாதவன்
ஒரு முறை புத்தரின் சீடர் அவரை நாடிவந்து தனக்கு ஒரு புதிய வேட்டி வேண்டுமென்று கேட்டார். புத்தரிடம் இருந்து எப்போதுமே ஒரு பொருளை அவ்வளவு எளிதில் பெற்றுவிட முடியாது. அதற்கு பல்வேறு கேள்விகளைக் கேட்பாராம்.
“சரி உன்னுடைய பழைய வேட்டி என்னானது” என்றாராம் புத்தர். சீடர் எனது பழைய வேட்டியை படுக்கை விரிப்பாக பயன்படுத்துகிறேன் என்றதும், “சரி அந்த பழைய படுக்கை விரிப்பு?” என்றாராம். அதை திரைச்சீலையாக பயன்படுத்த போவ
தாகக் கூறினார் சீடர். புத்தரின் பார்வை அகன்றது.
“குருவே நான் மொத்தமாகச் சொல்லிவிடுகிறேன்” என்று மடமடவென்று கூறத் தொடங்கினாராம் சீடர். ”அந்த பழைய திரைச்சீலையை அடுப்படியில் சூடான பாத்திரங்களை இறக்கும் கரிக்கந்தலாக பயன்படுத்துகிறேன். ஏற்கனவே இருக்கும் கரிக்கந்தலை மிதியடியாகப் பயன்படுத்த உத்தேசித்துள்ளேன். ஏற்கெனவே பயன்
படுத்தி வரும் மிதியடியை நன்றாகத் துவைத்து விளக்குகளுக்குப் போடும் திரியாகத் தயாரித்து வைத்துக்கொள்ளப் போகிறேன்” என்று ஒரே மூச்சில் சொல்லி சீடர் முடித்தாரம். அருமையாக புன்னகைத்த புத்தர், “சரி பண்டாரத்தில் சொல்லி வாங்கிக்கொள்” என்றாராம்.
தேவைக்கு வாங்குவோம்!
இந்த சம்பவம் சுற்றுச்சூழல், நிலைத்தகு மேலாண்மை, சிக்கனம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தப் பலரும் பயன்படுத்தும் மேற்
கோள். இந்த உலகம் அனைவருக்குமான தேவையை நிறைவு செய்யக் காத்திருக்கிறது ஆனால், பேராசையை அல்ல என்பார் காந்தியடிகள். அதுபோல நாம் வசதிபடைத்தவராக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் வாங்கவேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.
பொருட்களைப் பயன்படுத்தி மனிதர்களை மனிதர்கள் நேசித்துவந்தது ஒரு காலம். ஆனால், நுகர்வுமய உலகில் பொருட்களை விரும்பத் தொடங்கி மனிதர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோமோ என்ற அச்சம் மேலெழுகிறது.
எது ஆடம்பரம், எது கஞ்சத்தனம்?
ஒரே விட்டில் ஒரே அறையில் படுத்துஉறங்கும் இயல்புநிலை கொண்டது இந்தியகுடும்பங்கள். ஆனால், இன்றையச் சூழல் சிக்கனமாக இருப்போரையெல்லாம் கஞ்சத்தனம் கொண்டவர்கள் என்று கிண்டலடிக்க தொடங்கிவிட்டது. ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நடந்தும் செல்லலாம். பொதுப்போக்குவரத்தான பேருந்திலும் செல்லலாம். தனிப்பட்ட மகிழுந்திலும் (காரிலும்) செல்லலாம். இத்தகைய சந்தர்ப்பத்தில் வசதிபடைத்த ஒருவர் நடந்து சென்றால் அது கஞ்சத்தனம். காரில் சென்றால் ஆடம்பரம். பேருந்தில் செல்வது சிக்கனம். இதற்கான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளாமல் நமது வாழ்வியல் திறன்களை வளர்த்துக்கொள்ள இயலாது.
நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யும் மனத்திடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போல் நாம் மாறத் தொடங்கினால் அதற்கு எல்லையே இருக்காது.
சின்ன சின்ன மாற்றங்கள்
சரி நமது அன்றாட வாழ்க்கைக்கு வருவோம். வாய்ப்பிருக்கக்கூடியவர்கள் வீட்டில் கரும்பலகை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்க இந்த கரும்பலகையை பயன்படுத்தலாம். இதன் மூலம் காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கலாம். ஒருபக்கம் மட்டுமே எழுதிய பக்கங்களை சேகரித்துவைத்துக் கொண்டு எழுதலாம். பென்சிலால் எழுதிப் பார்க்கலாம். தேவை முடிந்தவுடன் ஓரிரு முறை அந்த தாளை பயன்படுத்த இயலும். இதுபோலவே கவனமாக பயன்படுத்துவதன் மூலம் பல பொருட்களின் பயன்பாட்டுக்காலத்தை நீட்டிக்கலாம். சிக்கனமாக இருப்பது கஞ்சத்
தனத்தின் அடையாளம் அல்ல. அதை ஒரு வாழ்வியல் கலையாக பார்க்கக் கற்றால் நம்மைவிடச் செல்வந்தர் யாரும் இல்லை என்பதை நாளடைவில் உணர்வோம்.
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
WRITE A COMMENT