ஆர். ரம்யா முரளி
இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு ஓடியாடும் சூழல் அவ்வளவாக வாய்ப்பதில்லை. பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தாலும் அவர்களுக்கு விளையாட நேரம் இல்லை.
இது போக ஸ்மார்ட்போன், டேப் என்பதாக குழந்தைகளும் தங்களது உலகத்தை உள்ளங்கையில் அடக்கிக் கொண்டு விடுகிறார்கள். இதனால் உடல் வலுவின்றி இருக்கிறார்கள். சிறிது தூரம் நடந்தாலே கால்கள் வலிக்கிறது என்று சோர்ந்து விடும் நிலையை பெரும்பாலான குழந்தைகளிடம் பார்க்க முடிகிறது.
உச்சி முதல் பாதம் வரை
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வீரபத்திராசனம் மிகவும் சிறந்தது. வீரபத்திராசனத்தை தினமும் குழந்தைகள் செய்யத் தொடங்கினால் தொடை, குதிக்கால், கைகள், முழங்கால், இடுப்பு, முதுகு என அனைத்து பாகங்களுக்கும் சீராக ரத்த ஓட்டம் பரவி அந்தப் பகுதிகள் வலு பெறும். உச்சி முதல் பாதம் வரை பயன் தரும் இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வீரபத்ராசனம் செய்வது எப்படி?
வீரபத்ராசனத்தின் முதல் நிலையில், கால்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். பின் இடது காலை முன் நோக்கி சற்று பெரிய அடியாக வைக்க வேண்டும். வலது கால் பின்னால் இருக்க வேண்டும். வலது கால் பாதத்தை 45 டிகிரி கோணத்தில் திருப்ப வேண்டும். மூச்சை மெதுவாக இழுத்தபடி, இடது கால் முட்டியை முன்னோக்கி மடக்கியவாறு இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்தவாறு தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
இடது கால் முழங்கால் மற்றும் கணுக்கால் ஒரு நேர் கோட்டில் இருப்பது அவசியம். முதுகை நன்றாக வளைத்து, தாடையை உயர்த்தி, தலையை மேல் நோக்கி உயர்த்தி கைகளைப் பார்க்க வேண்டும். இடுப்பை மெதுவாக கீழே இறக்க வேண்டும். மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி, அடுத்ததாக வலது காலை முன்வைத்து ஆசனத்தை தொடரலாம்.
பலன்கள் பல
இந்த ஆசனம் கீழ் முதுகு, கைகள் மற்றும் கால்களை வலுப்படுத்தும் ஒரு அற்புதமான ஆசனமாகும். நிதானத்தை அதிகரிக்கவும், உடலை உறுதிப்படுத்தவும், மனதை சமன்படுத்தவும் உதவுகிறது.நெஞ்சுப் பகுதி வலுப்பெறுவதால், நுரையீரலுக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். இதை செய்வது மூலம் சுவாச சம்பத்தப்பட்ட பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
முதுகெலும்பை வலுப்படுத்துவதால், குழந்தைகள் தொடர்சியாக சோர்வில்லாமல் உட்கார்ந்த நிலையில் படிக்கவும், எழுதவும் இது ஒரு சிறந்த ஆசனமாகும். மேலும் இந்த ஆசனம் தோள்களில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவும். மொத்தத்தில் இந்த ஆசனம் மனதையும் உடலையும் தளர்த்தி, அமைதி, தைரியம், மற்றும் நேர்மறை எண்ணங்கள் பெருக உதவுகிறது.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
WRITE A COMMENT