பள்ளியில் பதற்றத்தோடு உட்கார்ந்திருக்கிறார் அந்த இளம் பெண். ஆசிரியர் வேலைக்கான நேர்முகத் தேர்வு. அவ்வப்போது வா..வா! சா...சா! என்று சத்தமிடுகிறார். அதைக் கட்டுப்படுத்த பேனாவை வாயில் வைத்துக் கடிக்கிறார். தாடையை அவ்வப்போது தட்டிக்கொள்கிறார். பள்ளி நிர்வாகிகள், முதல்வர் அனைவரும் அவரது கல்வித் தகுதியை பாராட்டுகின்றனர்.
“அவ்வப்போது விக்கல் வருகிறது கொஞ்சம் தண்ணீர் குடிங்க” என்று முதல்வர் சொல்கிறார். “விக்கல் இல்லை சார். எனக்கு டூரட் சிண்ட்ரோம் இருக்கு. இது ஒரு நரம்பியல் கோளாறு. மூளை நரம்புகள் தளர்வா இருக்கும் போது அதிர்வுகள் ஏற்படும். அப்போது இப்படிச்சத்தம் வரும்” என்கிறார் அந்தப் பெண். அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இப்போதாவாது தெரிந்ததே!
“ஆசிரியர் இப்படிச் சத்தம் போட்டுக்கிட்டே இருந்தா பசங்க சிரிப்பாங்க. கேலி பண்ணுவாங்க.”, “நீங்க வேறு வேலை பார்க்கலாமே!” என்று வேலை மறுக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே பள்ளிகள் இந்த ஒரு காரணத்திற்காகவே அவரை விலக்கி இருக்கின்றன.
“இப்போதாவது நீங்கள் டூரெட் பற்றித் தெரிந்து கொண்டீர்களே! அது போதும்” என்று அனைவரிடமும் சொல்கிறார் நைனா மாத்தூர் என்ற அந்த இளம் ஆசிரியை. நைனா மாத்தூர் மனம் தளராமல் பள்ளிகளுக்கு மீண்டும் மீண்டும் விண்ணப்பம் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். சில காலம் கழித்து அவர் படித்த பள்ளியில் இருந்தே தற்காலிக ஆசிரியர் வேலைக்காக அழைப்பு வருகிறது. மும்பையின் வசதியான வீட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.
அவமதிப்பை எதிர்கொள்ளுதல்
கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக சேர்க்கப்பட்ட 14 மாணவ மாணவியரைக் கொண்ட 9F வகுப்பிற்கு நைனா வகுப்பாசிரியர். அவ்வகுப்பிற்குச் செல்லும் ஆசிரியர்கள் அனைவருமே மாணவர்களின் சேட்டைகளால் வேலையை விட்டே சென்று விடுகின்றனர். அதனால்தான் நைனாவுக்கு வேலை கிடைத்துள்ளது. 9F வகுப்புக்குள் நைனா நுழையும்போது அங்கே மாணவர்கள் இல்லை.
சிறிது நேரம் கழித்து மாணவர்கள் வகுப்பறைக்குள் வருகிறார்கள். சண்டையும் கேலியுமாக நுழையும் அவர்கள் நைனாவைக் கண்டுகொள்ளவே இல்லை. நைனா மனதுள் கவலை சூழ்ந்தாலும் சமாளித்துப் பேசத் தொடங்குகிறார். நான்தான் உங்க புது ஆசிரியை. நைனா மாத்தூர். வகுப்பறையில் கற்பது மட்டுமே போதாது. உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் போது எனது செல்பேசியில் அழைக்கலாம்.
எப்போது வேண்டுமானாலுமா என்று ஒரு மாணவன் கேட்கும் தொனி இடியாய் இறங்குகிறது. பெண்களை மதிக்கவேண்டும் என்று ஒருவன் கிண்டல் செய்ய அனைவரும் சிரிக்கிறார்கள்.
சிரித்தபடியே நைனா, டாரட் குறைபாடு குறித்து பேசுகிறார். அவர் எழுப்பும் ஒலிகள் குறித்து கேலி செய்து மாணவர்கள் பாடுகின்றனர். அவர்
களோடு சேர்ந்து நைனாவும் கைகளைத் தட்டிக்கொண்டு பாடுகிறார். சிறிது நேரம் கழித்தே இதை மாணவர்கள் அறிகிறார்கள். அமைதியாகிறார்கள்.
‘‘நான் அவ்வப்போது எழுப்பும் ஒலிகளை அப்படியே பாடிட்டீங்க. நினைத்த நேரத்தில் அதை உங்களால் நிறுத்த முடியும். என்னால் அப்படி நிறுத்த முடியாது’’ என்கிறார் நைனா.
மாணவர்களை காப்பாற்றும் ஆசிரியை
தனிமையில் இருப்பவர்கள் என்னுடன் பேசலாம் என்று நைனாவின் படத்துடன் செல்பேசி எண்ணையும் அச்சடித்து சுவர்களில் ஒட்டிவைக்கிறார்கள். இப்படியான சேட்டைகளின் உச்சமாக வகுப்பறையில் வெடிவிபத்து ஏற்படுகிறது. அதற்குக் காரணமான 9F மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப் பள்ளி முதல்வர் முடிவு செய்கிறார்.
“சார், மாணவர்கள் மீது தவறேதும் இல்லை. திரவ நைட்ரஜன் குறித்த பாடத்திற்காக அங்கே பாதுகாப்பில்லாமல் வைத்தது நான்தான்” என்று நைனா முதல்வரிடம் கூறுகிறார். மாணவர்கள் அனைவரையும் வகுப்பிற்குச் செல்லுமாறு முதல்வர் கூறுகிறார்.
அவர்கள் சென்றபின் நைனாவிடம் கேட்கிறார், “அவர்களை காப்பாற்ற எதற்காக பொய் சொன்னீர்கள்?” “சார், அவர்கள் பல்வேறு சேட்டைகளை செய்கிறார்கள். இவ்வளவு பெரிய செயலுக்கு எவ்வளவு திட்டமிடல், ஒருங்கிணைப்பு, செயல்பாடு அவர்களுக்குள் இருக்கிறது! அந்த சக்தியைச் சரியான திசைக்கு மடைமாற்றினால் அவர்களை மாற்றிவிடலாம் என்று நம்புகிறேன்” என்கிறார் நைனா.
கற்றல் கொண்டாட்டமாக மாறுகிறது!
வகுப்பறையில் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். “உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நாளைக் காலை 9 மணிக்கு வகுப்பிற்கு வாருங்கள். நான் காத்திருப்பேன். 9.10 வரை நீங்கள் வரவில்லை என்றால் எனது பணிவிலகல் கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவேன்”என்று மாணவர்களிடம் நைனா சொல்கிறார்.
மறுநாள் காலை ஆசிரியர் சொன்ன நேரத்தில் வகுப்பறையில் காத்திருக்கிறார். சிறிது நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வருகிறார்கள். வகுப்பறை புத்துணர்வு பெறுகிறது.
கூடைப்பந்து விளையாடிக்கொண்டே காற்றழுத்தம் குறித்து அறிகிறார்கள். அறிந்ததில் இருந்து அறியாததைக் கற்கத் தொடங்குகிறார்கள். மரத்தடி, விளையாட்டு மைதானம் என்று செயல்பாடுகள், கலந்துரையாடல்களின் வழியே கற்றல் கொண்டாட்டமாக மாறுகிறது.
இயந்திரத்தன்மையான தகவல் திணிப்புகளை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு ஏற்ப எவ்வாறு கற்பிக்கலாம் என்ற தேடலில்தான் வகுப்பறையில் கற்றல் மலர்கிறது என்பதை இப்படம் அழுத்தமாகக் கூறுகிறது.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.
WRITE A COMMENT