எஸ்.எஸ்.லெனின்
கட்டுமானப் பொறியியலில் பி.இ. சிவில் படிப்புக்கும், பி.ஆர்க். படிப்புக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. பி.இ., சிவில் படிப்பை விட பி.ஆர்க்., படிப்பு நுட்பமானது. கட்டுமானங்களுக்கான திட்டமிடல், வடிவமைப்பு, அலங்காரம், வரைகலை ஆகியவை பி.ஆர்க்., படிப்பில்
பிரதானமாக இருக்கும்.
சிவில் படித்தவர்களைப் போல அதிகளவிலான களப்பணி பி.ஆர்க்., பொறியாளர்களுக்கு இருக்காது. நான்காண்டு பி.இ., சிவில் படிப்புகளை பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் வழங்குகின்றன. ஐந்தாண்டு ஆர்க்கிடெக்சர் படிப்பை தேர்ந்தெடுத்த பொறியியல் கல்லூரிகள் மட்டுமே வழங்குகின்றன. ஊதியத்திலும் பி.ஆர்க். படித்தவர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள். கட்டிடக்கலை வடிவமைப்பு பொறியாளர் படிப்பான பி.ஆர்க். பயில, பிரத்யேக நுழைவுத் தேர்வான ‘நாட்டா’ (NATA - National Aptitude Test in Architecture) எழுத வேண்டும்.
‘நாட்டா’ நுழைவுத் தேர்வு
நாட்டா நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. 17 வயது நிரம்பிய, பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதர பொறியியல் படிப்புகளைப் போல, டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் ‘லேட்டரல்’ நுழைவுக்கு இங்கு வாய்ப்பில்லை.
தேர்வு நடைமுறைகள்
ஏப்ரல் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது இரண்டிலும் பங்கேற்கலாம். விண்ணப்பத்தில் இதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். இரண்டு தேர்வுகளையும் எழுதினால், அதிக மதிப்பெண்ணுக்கான தேர்வு முடிவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். நாட்டா நுழைவுத் தேர்வு 2 பிரிவுகளாக நடைபெறும்.
முதல் பிரிவு ஆன்லைனில் கொள்குறிவகை வினாக்களின் அடிப்படையில் இருக்கும். இரண்டாவது பிரிவு, தாளில் எழுதும் வரைகலை தொடர்பான தேர்வாகும். தேர்வுக் காலம் 3 மணி நேரம். தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர் உட்பட நாட்டின் 122 நகரங்களில் தேர்வு மையங்கள் செயல்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
தேர்வுக்கான நடைமுறைகள் ஜனவரி நான்காம் வாரத்தில் தொடங்கும். நாட்டா இணையதளத்தில் முழு விபரங்களை அறிந்துகொள்வதுடன், அதிலேயே முறையாக பதிவு செய்து விண்ணப்பிக்கவும் செய்யலாம். மாதிரித் தேர்வு எழுதவும் இதிலேயே பதிவு செய்து தேர்வு அனுபவத்தை பெற முடியும்.
நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கான பாடங்கள், தலைப்புகள், மதிப்பெண் விபரங்களையும் அறிந்துகொள்ளலாம். தேர்வு கட்டணத்தையும் ஆன்லைன் பரிவர்த்தனையில் செலுத்தலாம். ஏப்ரல், ஜூலை தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே எழுதுவோர், இரண்டையும் எழுதுவோர் என தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நுழைவுத் தேர்வு முடிவு விபரங்களை இணையதளம் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.
நாட்டா இணையதளம்: nata.in
விண்ணப்பக் கட்டணம்:
ஒரு தேர்வுக்கு : ரூ. 1,800
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு : ரூ. 1,500
இரண்டு தேர்வுகளுக்கு : ரூ. 3,500
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு : ரூ. 2,800
WRITE A COMMENT