திசைகாட்டி இளையோர் - 7: ஊரையே மாற்றிய இளம்பெண்


திசைகாட்டி இளையோர் - 7: ஊரையே மாற்றிய இளம்பெண்

இந்திய பிரதமர் மோடிக்கு தூய்மை இந்தியா திட்ட செயல்பாட்டிற்காக கடந்த செப்டம்பர் 25 அன்று ‘குளோபல் கோல் கீப்பர்ஸ் விருது' வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்த விருதை வழங்கியது. அதே மேடையில் அவருக்கும் முன்பாக 17வயது இந்திய பெண் ஒருவருக்கு, ‘மாற்றங்களை உருவாக்குபவர்’ என்ற விருது வழங்கப்பட்டது.

அவர்தான் பாயல் ஜாங்கிட். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை குரியவர். ஒரு நாட்டின் பிரதமர் விருது வாங்கும் அதே மேடையில் அதே நாட்டைச் சேர்ந்த 17 வயதே ஆன இளம்பெண் ஒருத்தி விருது பெறும் அளவிற்கு என்ன செய்திருப்பார்?

குழந்தைத் திருமணத்துக்கு எதிர்ப்பு

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹின்ஷா கிராமத்தை சேர்ந்தவர் பாயல். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுவாகப் பெண் குழந்தைகளுக்கு பத்து வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

அதுவரை அந்தக் குழந்தையை பள்ளிக்கூடத்திலும் சேர்க்க மாட்டார்கள். வீட்டு வேலைகளைச் செய்து கிடக்க வேண்டும். இந்த நிலையில் பாயலுக்கும் பதினோரு வயதிலேயே திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் திட்டமிட்டனர்.

ஆனால், தொடர்ந்து படிக்க விரும்பிய பாயல் குழந்தைத் திருமணம் என்பது தவறு என்று விளக்கி, அந்த வயதிலேயே தன்னுடைய கடுமையான எதிர்ப்பை பெற்றோரிடம் தெரிவித்தார்.

மாற்றத்திற்கான பரப்புரை

தனக்கு மட்டுமின்றி, தன் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சிறுமிகளுக்கும் குழந்தைத் திருமணம் செய்யப்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கருதினார். எனவே குழந்தைத் திருமணம் தடை செய்யப்படவேண்டும், பெண்கள் கல்வி பெற வேண்டும், பெண்குழந்தைகள் தொழிலாளிகளாக வஞ்சிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பவை குறித்து ஊரில் பேசத் தொடங்கினார். ஊர் பெரியவர்களிடம் பேசினார்.

வீடு வீடாகச் சென்று குழந்தைகளின் பெற்றோரிடம் பேசினார். தன் வயதொத்த சிறுவர்களை அழைத்து பேசி ஒன்று திரட்டினார். இதன் விளைவாக, கிராமத்து குழந்தைகள் பஞ்சாயத்து அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாயலின் விடாமுயற்சியால் பெண் குழந்தைகள் திருமணம் ஒட்டு மொத்த கிராமத்திலும் நிறுத்தப்பட்டது. சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதை கிராமத்தினர் உணர்ந்தார்கள். பெற்றோர் தங்களுடைய பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.

தன் கிராமத்தை போலவே அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் சென்று இந்த விழிப்புணர்வை பாயல் ஏற்படுத்தினார். சக குழந்தைகளுடன் இணைந்து பெண்
குழந்தை கல்வி குறித்தும், இளம் வயது திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றிய சுவரொட்டி, சிறுசிறு வரைபடங்கள் மற்றும் துண்டறிக்கைகளை உருவாக்கி கிராம மக்களிடம் பரப்புரை செய்தார்.

மாறியது கிராமம்

பெரியவர்களிடம் உருக்கமாகப் பேசி, அவர்களுக்குக் குழந்தைகளின் பிரச்சினையை புரிய வைத்தார். இதன் விளைவாக ஒட்டுமொத்த கிராமமே குழந்தைகளின் நலன் பேணும் சுமூகச் சூழல் கொண்ட கிராமமாக இன்று திகழ்கின்றது. கிராம பஞ்சாயத்தின் செயல்பாடுகளில் சிறுவர்களும் ஈடுபடுகிறார்கள்.

தங்கள் கிராமத்துக்கு ஒரு முறை வருகை புரிந்த நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ஸ்மிதா
கைலாஷ் ஆகியோரை சந்தித்து பேசியது தான் தன் செயல்பாட்டிற்கு அடிப்படை உந்து சக்தியாக அமைந்தது என்கிறார் பாயல்.

பதினோரு வயதில் தொடங்கிய பாயலின் இந்த செயல்பாடு பல கிராமங்களில் குழந்தைகளுக்கு விடியலைக் காட்டியது. அவர்கள் கல்வி கற்க, குழந்தைத் திருமணத்தில் இருந்து விடுபட, சிறுவர் தொழிலாளியாக இருப்பதில் இருந்து தவிர்க்க உதவி செய்துள்ளது.

இப்படி பெண் குழந்தைகளுக்கான வாழ்வுரிமையையும், கல்வி உரிமையையும் பெற்றுத் தந்து கொண்டிருக்கும் பாயலுக்கு அமெரிக்காவின் கேட்ஸ் பவுண்டேஷன் மாற்றத்தைக் கொண்டுவரும் இளமை என்ற விருது ஏன் கொடுத்தது என்று இப்போது புரிகிறதா!

கட்டுரையாளர்: பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.

FOLLOW US

WRITE A COMMENT

x