சுலபத்தவணையில் சிங்காசனம் - 6: அன்டார்டிக்காவில் ஆராய்ச்சி செய்யலாமா?


சுலபத்தவணையில் சிங்காசனம் - 6: அன்டார்டிக்காவில் ஆராய்ச்சி செய்யலாமா?

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பனி மூடிய துருவப்பகுதிகளைப் பற்றிய காணொளிகளைப் பார்த்திருப்பீர்கள். பனிக்கரடிகளும் பென்குவின்களும் நிறைந்த இந்த துருவப் பகுதி உங்கள் உறக்கத்தில் கூட வந்து போயிருக்கலாம். துருவப்பகுதியில் பயணம் செய்து அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டால் எப்படி இருக்கும்? அதற்கான வாய்ப்பு இந்தியாவில் உண்டா?

ஆர்க்டிக் ஆராய்ச்சி

வடதுருவமான ஆர்க்டிக் பகுதியில் பூர்வகுடி மக்கள் வசிக்கிறார்கள். பல கிராமங்கள் இருக்கின்றன. இந்தியாவின் ஆய்வுக்கூடம் ஹிமாத்ரி 2008-ல் அங்குத் தொடங்கப்பட்டது. இந்திய விஞ்ஞானிகளின் குழு அங்கு சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு திரும்பும். வளிமண்டலம், உயிரியல், சூழலியல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் இங்கு நடந்து வருகின்றன.

அன்டார்டிக்கா ஆராய்ச்சி

தென் துருவமான அண்டார்டிக்கா ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்ட கண்டம். இங்கு எப்போதும் பலமான காற்று வீசும். இக்கண்டத்தை பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ள பல நாடுகள் ஆய்வுக்கூடங்களை அமைத்திருக்கிறார்கள்.

இந்தியா, ‘தக்ஷ்ன கங்கோத்ரி’ என்ற ஆய்வுக்கூடத்தை 1984-ல் அண்டார்டிக்காவில் நிறுவியது. அந்த ஆய்வகம் பனியால் மூடப்பட்டதால் மைத்ரி (1989), பாரதி (2012) ஆகிய இரண்டு ஆய்வுக்கூடங்களை பிறகு நிறுவியது. வளிமண்டலம், உயிரியல், புவியியல், சூழலியல், மனித உடலியல், மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகள் இங்கு நடந்து வருகின்றன.

எப்படி விஞ்ஞானியாவது?

துருவப்பகுதிகளை ஆராய்ச்சி செய்யும் ஒரே இந்திய நிறுவனம், கோவாவில் உள்ள துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி தேசிய மையமாகும் (National Centre for Polar and Ocean Research-NCPOR). புவி அறிவியல் அமைச்சகத்தைச் சேர்ந்த மத்திய அரசின் நிறுவனம் இது.

அறிவியல் துறைகளில் முதுநிலைப்பட்டம் அல்லது பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்நிறுவனத்தில் விஞ்ஞானியாக விண்ணப்பிக்கலாம். தற்காலிக ஆராய்ச்சியாளர் பணிகளும் உண்டு. மேலே குறிப்பிடப்பட்ட துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

துருவப் பயணங்கள்

துருவப் பகுதிகளுக்கான ஆய்வுப்பயணங்களை இந்த நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. இது குறித்த அறிவிப்புகள் நாளிதழ்களில் வெளியாகும். பிற ஆராய்ச்சி நிலையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளும், கல்லூரிப் பேராசிரியர்களும் இதில் பங்கேற்கலாம். கப்பல் பயணம், தங்கும் வசதி ஆகியவற்றை இந்நிறுவனமே ஏற்றுக்கொண்டு ஆராய்ச்சி முயற்சிகளுக்கு உதவுகிறது. மேலும் விவரங்களுக்கு: ncaor.gov.in

(தொடரும்)
கட்டுரையாளர், இயக்குநர்-தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்.

FOLLOW US

WRITE A COMMENT

x